மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும்: நீதிமன்றம்!

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும்: நீதிமன்றம்!

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளையும், பாஜக 6 தொகுதிகளையும் பிடித்தது.

இதைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில், கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் , அசோக் பாபு ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், சட்டப்படி பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக மாநில அமைச்சரவை துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு தற்போது பின்பற்றப்படாததால் 3 நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான உத்தரவைச் செல்லாது என அறிவித்து அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மே 20-ஆம் தேதி இந்த வழக்கை, நீதிபதிகள் அனிதா மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசுப் பணிகளில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இந்த நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று உத்தரவிட்டு இம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 3 ஜுன் 2021