மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

கலைஞர்: ஒரு தொண்டனின் தூரப் பார்வை!

கலைஞர்: ஒரு தொண்டனின் தூரப் பார்வை!

உளுந்தூர்பேட்டை லலித் குமார்

விருத்தாசலத்திலிருந்து நெய்வேலி செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் சாத்தமங்கலம். அதுதான் என் சொந்த ஊர். ஆறாவது படித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் என்னுடன் படிக்கும் நண்பன் வெங்கடேசனோடுதான் பள்ளிக்குச் செல்வேன்.

தேநீர் கடையில் தினகரன்

நண்பனின் அப்பா தாமோதரன் டீக்கடை வைத்திருந்தார். காலை 8 மணிக்கே நான் அந்தக் கடைக்குச் சென்றுவிடுவேன். நண்பனுக்காகக் காத்திருப்பேன். அந்தக் காத்திருக்கும் நேரத்தில் டீக்கடையில் இருக்கும் தினகரன் பேப்பரை - அன்றைய கேபிகே தினகரன் பேப்பரை - பிரித்துப் படிப்பேன்.

பல செய்திகள் கண்களைக் கடந்து செல்கையில், உடன்பிறப்பே என்று ஆரம்பித்து , ‘பார்த்தாயா…. அந்த ஏதேன்ஸ் மாநகரத்திலே…’ என்ற ரீதியில் தொடங்கும் கட்டுரைகள் மட்டும் அந்தப் பிஞ்சு நெஞ்சான என்னை என்னவோ செய்யும். தினமும் டீக்கடையில் தினகரனைப் பிரித்து உடன்பிறப்பே என்ற அந்தக் கடிதத்தை மட்டும் படிக்க ஆரம்பித்தேன். 10 வயதான எனக்கு அப்படித்தான் கலைஞர் அறிமுகமானார். அப்போதெல்லாம் அவரது எழுத்துகளை முழுவதும் புரிந்துகொள்ளும் வயது எனக்கில்லை.

படிக்கின்றபோதே நெஞ்சில் வரிகள் நெஞ்சில் காட்சியாய் ஓடும். எனக்காகவே அவர் எழுதியிருப்பதாகவே தோன்றும். உடன்பிறப்பே என்ற ஒற்றை வார்த்தையில் அவர் நம்மைக் கூப்பிட்டு நம்முடன் பேசுவதாகவே கலைஞரின் எழுத்துகள் அமைந்திருக்கும். அதனால்தான் மெல்ல மெல்ல கலைஞரின் எழுத்தை உணரும், கிரகித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தமிழ்மொழியின் மேன்மை, சமூக ரீதியாக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம், அதன் வெற்றி இப்படிப் பலப்பல செய்திகளை சுமார் மூன்று வருடங்கள் தினமும் தினகரனில் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.

பூம்புகார் திரையில் நடுவகிடு

ஒருநாள் விருத்தாசலம் தியேட்டரில் பூம்புகார் படத்துக்கு என்னை அழைத்துச் சென்றார் என் அம்மா. படத்துக்கு முன் நடு வகிடு எடுத்தபடி கறுப்பு சால்வை ஒன்றைப் போட்டுக் கொண்டு ஒருவர் பேச ஆரம்பித்தார். அப்போதுதான் தினகரனில் பார்த்த போட்டோவும் அவரும் ஒன்றாக இருப்பதைக் கண்டேன். அப்போதுதான் கலைஞர் என்ற உருவத்தைப் பார்த்தேன். தினகரனில் நான் படித்த எழுத்துகளையெல்லாம் அவர் திரையில் தோன்றி சொல்வதாக எண்ணிக்கொண்டேன். எழுத்து, எழுத்து என்றே இருந்த எனக்குக் கலைஞரின் உருவத்தைக் காட்டியது பூம்புகார் திரைப்படம்.

பதின்ம வயதுகளிலிருந்த எனக்கு, கலைஞரின் எழுத்தும் பேச்சும் அவர் பேசும் விதமும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின. அப்போதெல்லாம் ஊரில் டீக்கடையில் பலரும் அரசியல் பேசுவார்கள். திமுகக்காரன் என்றால் அப்போது மற்றவர்களைவிட ஒருபடி கூடுதல் விவரமானவன் என்ற பேச்சு உண்டு. அதுவே உண்மையும். அதற்கு அடித்தளமிட்டவர் அண்ணா. ஏனென்றால் அறிக்கைகளைப் படித்தும், பேச்சுகளைக் கேட்டும் எதையுமே விவாதம் செய்து கொண்டிருப்பார்கள் திமுகவினர். நான் படித்த எழுத்துகளைப் பற்றி சிலர் என் காது பட பேசும்போது குறிப்பாக திமுக முன்னணியினர் பேசும்போது, கலைஞரின் எழுத்துகளுடைய பிம்பங்கள் விரிந்தன.

தினகரன் காகிதம், பூம்புகார் திரைப்படம் எனக் கலைஞரை எழுத்து, பேச்சாக கண்ட நான், முதன்முதலில் அவரைப் பார்த்த நாள், பொழுது, அந்த நேரத்தின் கோணம் வரைக்கும் இப்போதும் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

எழுத்தும் பேச்சுமாய் முதல் தரிசனம்

1989 தேர்தல் பிரச்சாரம்… அப்போது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டேன். ஆறாவது வகுப்பிலிருந்து தொடர்ந்து தினகரன் படிக்கிற வாய்ப்பும், அவ்வப்போது கலைஞரை சினிமா திரையில் பார்க்கிற வாய்ப்பும் கிடைத்த எனக்கு அவரை முதன்முதலில் நேரில் பார்க்கும் வாய்ப்பு. உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளர் அங்கமுத்துவை ஆதரித்துக் கலைஞர் பேசுகிறார் என்று காலையிலிருந்தே அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர். இரவு 11.30 மணிக்கு உளுந்தூர்பேட்டைக்குக் கலைஞர் வந்தார். பத்தடி தூரத்தில் நின்று கலைஞரைப் பார்த்தேன்.

பதினாறு வயது இளைஞன் நான். அவரை பத்தடி தூரத்தில் நின்று பார்த்தபோது நான் உணர்ந்த உணர்வு எனக்குள் இன்னும் இருக்கிறது. அவரது உருவத்தால் வசீகரிக்கப்படவில்லை. கலைஞரை எழுத்துகளாகவே படித்துக்கொண்டிருந்த நான், அன்று வலிமைமிக்க, வசீகரம்மிக்க பேச்சாகப் பார்த்தேன். அந்த எழுத்தையும் பேச்சையும் உருவமாகப் பார்த்தேன்.

எப்போது எழுத ஆரம்பித்தாலும், ‘உடன்பிறப்பே’ எனப் போட்டு ஆரம்பிக்கிறாரே என்று கருதியிருந்தேன். அந்த நள்ளிரவில் அவர் மேடையேறி என் ஊரில் இருக்கும் திமுக நிர்வாகிகளின் பெயரையெல்லாம் வரிசையாகச் சொல்லி அவர்களே… அவர்களே... என்று சில நிமிடங்கள் கடந்தார். பின், ‘என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே…’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூட்டம் ஓரிரு நிமிடங்கள் துள்ளி அடங்கியது. இடி இடித்ததுபோல், மின்னல் மின்னியது போல் அந்த சில நிமிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.

டீக்கடையில் பேப்பரில் தினமும் படித்த வார்த்தைதான் உடன்பிறப்பே… ஆனால், அந்த வார்த்தைக்கு இப்படி ஒரு வீரியம், இப்படி ஓர் ஆற்றல், இப்படி ஓர் இன்னொரு பக்கம் இருக்கிறதா என்று ஒரு கணம் திகைத்தேன். என்னையறியாமல் குரல் எழுப்பினேன். அந்தக் குரல் கலைஞர் என்னும் நாயகனுக்காக எழுப்பிய குரல் அல்ல, அவர் ஊட்டி வளர்த்த கருத்துக்களே, கொள்கைகளே நாயகன்.

கலைஞரைப் பார்த்துவிட்ட, அவர் வாயால் உடன்பிறப்பே என்னும் அந்த வார்த்தையைக் கேட்டுவிட்ட எவனும் மீண்டும் எப்போது அந்த வார்த்தையில் காகிதத்தில் படித்தாலும் அந்த அதிர்வு, அந்த இடி, அந்த மின்னல் ஏற்பட்டு விடும். அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அதன் பின் கலைஞர் கூட்டங்கள் அறிவு மின்சாரம் பாய்ச்சும் ஆலைகளாக மாறிப் போயின.

சமூக நீதி வகுப்புகள்

தேர்தல் முடிந்ததும் கலைஞர் முதல்வராகிவிட்டார். ஆனால், மத்தியில் வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது மண்டல் கமிஷன் நாயகர் என்ற தலைப்பில் வி.பி.சிங்கை தமிழகம் முழுக்க அழைத்து வந்த கூட்டம் நடத்தினார் கலைஞர். அப்போது உளுந்தூர்பேட்டைக்கு மாலை 4 மணிக்கு வந்து பேசினார் கலைஞர்.

மண்டல் கமிஷன் என்றால் என்ன? அதை அமல்படுத்தியதால் யாருக்கு என்ன பயன்? வி.பி.சிங் ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது? சமூக நீதி என்றால் என்ன? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கு அன்றைய கலைஞரின் கூட்டங்கள் பதில் தந்தன. ஒரு சராசரி அரசியல்வாதி ஆட்சியைப் பிடித்ததும் மீண்டும் தேர்தல் பிரச்சாரம் போலவே இன்னொரு முறையும் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டிருக்க மாட்டான். ஆனால், கலைஞர் சராசரி அல்லர். வி.பி.சிங்கை தமிழகத்துக்கு அழைத்து வந்தும், அவர் தனியாகவும் அன்று பேசிய பேச்சுகள்தான் தமிழகத்தில் சமூக நீதி பற்றிய பெரும் விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தியது. அப்போது பத்திரிகையாளர் ஞாநிதான் வி.பி.சிங் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

கருத்தை செயல்படுத்திய கலைஞர்

பேச்சும் எழுத்தும் மட்டும் கலைஞரின் தொண்டனாக்கிவிடுமா? அப்படி இல்லை. அவர் எழுதிய எழுத்தும், பேசிய பேச்சும் அவர் ஆட்சிக்கு வந்ததும் செயல்கள் ஆகின. நடைமுறைப்படுத்தப்பட்டன. கலைஞரின் சமூகநலத் திட்டங்களால் பயன்பெற்ற பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று.

அப்போது வளைகுடா போர் நடந்துகொண்டிருந்தது. வயல்களுக்கு மோட்டார் வைத்திருக்கும் நாங்கள் டீசல் வாங்க பங்க்கில் வரிசையில் நிற்போம். நெல்லோ, கரும்போ... கிடைக்கும் லாபம் என்பது டீசல் வாங்கும் காசுக்கே சரியாகப் போய்விடும். இதனாலே பலரும் விவசாயம் செய்ய வேண்டுமா என்று விரக்தியடைந்தனர். எங்கள் ஊரிலேயே பலரும் பேசிக் கொண்டனர். ஆனால் அப்போதுதான் கலைஞர் கொண்டுவந்த விவசாயத்துக்கு இலவச மின்சாரத் திட்டம் எங்கள் ஊருக்கு வந்தது. இந்தத் திட்டம்தான் விவசாயத்தை விட்டு வெளியேற நினைத்த பலரையும் தொடர்ந்து விவசாயம் நடத்த வைத்தது. நானே அப்போதிலிருந்து 25 வருடமாக விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். என் தந்தையை இழந்தபோதும், என் தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்து, என் தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து எனக் கலைஞர் கொடுத்த இலவச மின்சாரம் என் வயலையும், வாழ்வையும் விளைய வைத்தது.

தினகரன் பேப்பரில் படித்து, சினிமாவில் வசனம் கேட்டு, அரசியல் மேடையில் நேரில் பார்த்து, கலைஞரின் அரசு செய்த பலன்களை அனுபவித்து என்று என்னுடைய இந்த அனுபவம் என்பது நிச்சயம் என் ஒருவனின் அனுபவம் மட்டுமல்ல. வெவ்வேறு ஊர்கள், வெவ்வேறு மேடைகள், வெவ்வேறு திட்டங்கள் என்று தமிழகம் பூராவும் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் கலைஞரின் தொண்டரானார்கள். இன்றும் தொண்டர்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த கோடிக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன். அவர்களின் பிரதிநிதியாக ஒரு பிரதியாக இதை முன்வைக்கிறேன்.

கலைஞரோடு நான் தனிப்பட்ட முறையில் பேசியதில்லை. அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் என் வாழ்க்கை முழுவதும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். உடன்பிறப்பே என்ற வார்த்தை மூலம் அவர் ஒவ்வொருவருடனும் பேசியிருக்கிறார். எழுத்தின் வழியாகப் பேச்சின் வழியாக, செயல்களின் வழியாக கலைஞரைக் காணும் கோடிக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன்.

உடன் பிறப்பின் பொறுப்பு

இப்படிப் பெருவாழ்வு வாழ்ந்த கலைஞர் கடந்த வருடம் காலமானார் என்று செய்தி கேட்டுத் துடித்தேன், அழுதேன். இன்று வரை நான் மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்துக்குச் சென்றதில்லை. அங்கே அவரது பௌதிக உடல்தான் புதைக்கப்பட்டிருக்கிறது. அவரோடு தனிப்பட்ட தொடர்புடையவர்களுக்கு அங்கே செல்வது ஆறுதலாகத் தேறுதலாக இருக்கும்.

ஆயினும் என்னைப் போன்ற தொண்டர்களுக்காக தமிழ்நாடு எங்கும் அவர் தன் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார். காற்றிலும், நாட்டிலும் சுற்றி எங்கெங்கும் பார்த்தாலும் கலைஞருடைய சமூக நீதிச் சாதனைகளும், ஆட்சித் திறன் சாதனைகளும் இருக்கின்றன. இவற்றைப் பறிபோய்விடாமல் பாதுகாப்பதே இந்தத் திமுக தொண்டனின் பொறுப்பு! எல்லா திமுக தொண்டர்களின் பொறுப்பும்! 

(ஜூன் 3-2019 இல் மின்னம்பலத்தில் வெளியான கட்டுரையின் மீள்)

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 3 ஜுன் 2021