மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

உருமாறிய வைரஸூக்கு டெல்டா என்று பெயர் வைப்பதா?

உருமாறிய வைரஸூக்கு டெல்டா என்று பெயர் வைப்பதா?

உருமாறிய கொரோனா வைரஸூக்கு டெல்டா என பெயர் சூட்டியதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

கொரோனா முதல் அலையின்போது, ஒரே மாதிரியான வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் அலையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிகளவில் பரவ தொடங்கியது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா என பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டன.

இந்த வைரஸ்களுக்கு தனியாக அறிவியல் பெயர்கள் இருந்தாலும் பொதுவாக அந்தந்த நாடுகளைக் குறிப்பிட்டு பிரிட்டன் வைரஸ், இந்திய வைரஸ் என்றே அழைக்கப்பட்டது. வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்தது. ஒருநாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் வைரஸ்கள் அழைக்கப்படுவதாக எதிர்ப்பு வந்தது.

இதையடுத்து, கொரோனா வைரஸ்களுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயரை சூட்டியது.

உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் ட்விட்டரில்” உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர் சூட்டியுள்ளது. பொது விவாதத்துக்கு உதவும் வகையில் இந்த பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில்,

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரஸூக்கு ’காப்பா’ என்றும், ‘பி.1.617.2’ வைரஸூக்கு ‘டெல்டா’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸூக்கு ’ஆல்பா’ என்றும்,

தென் ஆப்பிரிக்காவின் ‘பி.1.351’ வைரஸூக்கு ’பீட்டா’ என்றும்.

பிரேசில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பி.1’ வைரஸூக்கு ‘காமா’ என்றும், ‘பி.2 ’வைரஸூக்கு ‘ஜீட்டா’ என்றும்

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களுக்கு ’எப்சிலான்’ மற்றும் ’அயோட்டா’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸூக்கு டெல்டா என பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியா உட்பட உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்துகிறது கொரோனா வைரஸ். B1617 என்ற மரபணுவில் இருந்து மாற்றமடைந்து உருமாறிய கொரோனாவாக உலகெங்கும் தாக்குகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் B1617 எனும் கொரோனா மரபணுவில் மாற்றமடைந்து, E484Q மற்றும் L452R எனப்படும் இருவகையான கொரோனா வைரஸ் இந்தியாவில் உருமாறியதாகவும் இவ்வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) “டெல்டா” என பெயர் சூட்டி உள்ளது ஏற்கத்தக்கதல்ல. கிரேக்க எழுத்துக்களின் பெயர்களில் ஆல்பா, பீட்டா, காமா போன்ற ஒன்றான டெல்டா எனப் பெயர் சூட்டியுள்ளதாக WHO விளக்கமளித்துள்ளது.

‘டெல்டா’ என்பது கிரேக்க எழுத்துக்களில் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலும் டெல்டா என்றால் ஆற்றுப்படுகை அல்லது விவசாயத்திற்கு ஏற்ற சமதள வளமான விளை நிலப்பகுதியாகும். தமிழகத்தில் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பகுதி மட்டுமின்றி, மனிதனுக்கு தேவையான நோயற்ற உணவை உற்பத்தி செய்யும் உலக சிறப்புமிக்க பாசன கட்டமைப்புகளை கொண்ட காவிரி பாசனப் பகுதியை குறிக்கும். அவ்வாறான டெல்டாவின் நற்பெயரை, மனித உயிரை அழிக்கும் பேரழிவு வைரஸூக்கு சூட்டுவது ஏற்புடையதாக இல்லை. டெல்டா பகுதிக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கம் கொண்டதாக அமைந்துவிடும். எனவே டெல்டா என்று பெயர் சூட்டுவதை மறுபரிசீலனை செய்து வேறு ஏதேனும் பேரழிவை குறித்திடும் வகையில் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். எனவே உலக சுகாதார அமைப்பு எனது வேண்டுகோளை ஏற்று உரிய அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொன்னுசாமி, உலக சுகாதார அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனா வைரஸூக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவின் பெயரை சூட்டுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 2 ஜுன் 2021