மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

அமைச்சர்கள் பதவியேற்பு விவகாரம்: என்ன நடக்கிறது புதுச்சேரியில்?

அமைச்சர்கள் பதவியேற்பு விவகாரம்: என்ன நடக்கிறது புதுச்சேரியில்?

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வதில் ஏன் காலதாமதமாகிறது என்று பாஜக பிரமுகர்களிடம் விசாரித்தபோது,

“தேர்தலுக்கு முன்பும் பின்பும் ரங்கசாமி பாஜகவினரைச் சந்தித்து ஆறு மாதம் அல்லது ஒருவருடம் நான் முதல்வராக இருக்க அனுமதியுங்கள். அதன் பிறகு உங்கள் ஆட்சி நடைபெறட்டும். பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக இருக்கட்டும் என்றார். இதனை ஏற்றுக்கொண்டு முதல்வராகப் பதவியேற்கச் சொல்லி பாஜக முக்கியத் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.

பாஜகவுக்குத் துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் அல்லது துணைச் சபாநாயகர் பதவிகளைக் கேட்டோம். ஆனால் ரங்கசாமி வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் மூன்றாம்கட்ட தலைவர்களிடம், துணை முதல்வர் பதவி கொடுக்கமுடியாது. அதற்கான வழிகாட்டுதல்கள் இல்லை என்று பின் வாங்கினார். அதன் பிறகு பாஜக தலைவர்கள் துணை முதல்வர் பதவி வேண்டாம், மூன்று அமைச்சர்கள், பொதுப்பணித்துறை, நிதி, உள்துறை, சுகாதாரத் துறை உட்பட சில துறைகளைக் கேட்டனர்.

இந்நிலையில், புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சொரானாவைத் தொடர்புகொண்ட ரங்கசாமி, ‘புதுச்சேரி வந்துவிடுங்கள் சுமூகமாகப் பேசி அமைச்சர்கள் பதவியேற்பது பற்றி முடிவுசெய்துவிடலாம்’ என்று கூறினார்.

முதல்வர் ரங்கசாமியின் அழைப்பை ஏற்று நிர்மல்குமார் சொரானாவும் மே 26ஆம் தேதி புதுச்சேரி வந்து ஹோட்டல் அக்கார்டில் தங்கினார். ரங்கசாமியிடமிருந்து அழைப்பு வரும் என மதிய உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் காத்திருந்தார். பாஜக தரப்பிலிருந்து தொடர்புகொண்டாலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி செயலாளர் ஜெயபால், ‘ சொரானவை காத்திருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

மாலை 4.00 மணி கடந்துவிட்ட நிலையில், கோபமான சொரானா திண்டிவனத்தில் உள்ள தங்கை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போதும் ரங்கசாமியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராதா என்று காத்திருந்தார். மாலை 6.00 மணி வரையில், ரங்கசாமியிடமிருந்து பதில் இல்லை.

பின்னர், அமித்ஷாவைத் தொடர்புகொண்ட சொரானா, ரங்கசாமியின் செயல்களைப் பற்றியும், தன்னை காலையிலிருந்து காத்திருக்க வைத்ததைப்பற்றியும் தெரியப்படுத்தினார். அப்போது ‘இனி நீங்கள் காத்திருக்க வேண்டாம், புறப்பட்டு வந்துவிடுங்கள்’ என்று அமித்ஷா சொன்னதும், அன்று இரவே டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் சொரானா" என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து, நமச்சிவாயம் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு, ‘இனி நீங்கள் யாரும் ரங்கசாமியிடம் எதுவும் கேட்கவேண்டாம் அவர் வரும்போது வரட்டும்’ என்று டெல்லியில் இருந்து தெரிவித்துள்ளார் சொரானா.

இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 31), தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமாருக்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்துப் பரிந்துரை செய்துள்ளார் முதல்வர் ரங்கசாமி. அந்த பட்டியலைத் துணை நிலை ஆளுநருக்குப் பரிந்துரை செய்வதில் தாமதிப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதைப் புரிந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி நேற்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அமைச்சரவை பதவி ஏற்பதில் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று ஆளுநர் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்...

“ துணை நிலை ஆளுநருக்கு இன்று (ஜூன் 2) 60வது பிறந்தநாள் என்பதால் முன்கூட்டியே வாழ்த்துகள் தெரிவிக்கச் சென்றிருந்தார், அமைச்சரவை காலதாமதத்திற்குக் காரணம் ராஜ்யசபா சீட் பாஜக கேட்கிறது. அதனை ரங்கசாமி விட்டுக்கொடுக்க மறுக்கிறார். மூன்று அமைச்சர் பதவி கொடுக்க ரங்கசாமி ரெடியாக இருக்கிறார். ஆனால் முக்கிய இலாக்காக்களை பாஜகவினர் கேட்கிறார்கள். அனைத்து பிரச்சனையும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும் அஷ்டமி நவமி என்பதால் பேச்சுவார்த்தை தடைப்பட்டு நிற்கிறது. இந்த வாரம் இறுதியில் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிந்து அமைச்சர்கள் பதவியேற்றுக்கொள்வார்கள்” என்றார்கள்.

-வணங்காமுடி

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

புதன் 2 ஜுன் 2021