மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

சிபிஎஸ்இ தேர்வு ரத்து... தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா?

சிபிஎஸ்இ தேர்வு ரத்து... தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு, மாநிலங்கள் நடத்தும் 12ஆம் வகுப்புத் தேர்வு எப்போது நடைபெறும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இவ்விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று மே 31ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இதுவரை நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினர்.

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், இந்தாண்டு 12ஆம் வகுப்புக்கான வாரியத் தேர்வை நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளைத் தொகுக்கும் நடவடிக்கையை சிபிஎஸ்இ மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர், கொரோனா இந்தக் கல்வி ஆண்டை பாதித்து விட்டதாகவும், வாரிய தேர்வுகள் விஷயம், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்திவிட்டதாகவும், அதற்குத் தீர்வு காண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நிலைமையைச் சமாளித்து வருகின்றன. சில மாநிலங்களில் இன்றும் ஊரடங்கு நிலை தொடர்கிறது. இதுபோன்ற சூழலில், மாணவர்களின் ஆரோக்கியம் பற்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலைப்படுவது இயற்கையானதுதான். இதுபோன்ற அழுத்தமான சூழ்நிலையில், தேர்வுகள் எழுத மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.

மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது, இதில் எந்த சமரசமும் இல்லை. நன்கு வகுக்கப்பட்ட மதிப்பீடுகள் மூலம், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளைச் சரியான நேரத்தில் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டைப்போல், சில மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அதற்கான வசதியை, நிலைமை சீரடையும்போது சிபிஎஸ்இ வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உடல்நல பாதிப்பு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொள்ளவில்லை.

2020ஆம் ஆண்டில் 11 லட்சத்துக்கும் அதிகமான சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில், 88.78 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் 5.38 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பலகட்ட ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. தேர்வு நடத்துவது தொடர்பாக வரைவு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்று (ஜூன் 1) முதல்வர் தலைமையில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பைப் பொறுத்தே, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

தற்போது சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று (ஜூன் 2), கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார். இதனடிப்படையில் தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

புதன் 2 ஜுன் 2021