மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

என்னதான் நினைத்தாலும் எடப்பாடி தலைவர் ஆக முடியாது! - சசிகலா எழுதிய கடிதம்!

என்னதான் நினைத்தாலும் எடப்பாடி தலைவர் ஆக முடியாது! -  சசிகலா எழுதிய கடிதம்!

“அதிமுகவை விரைவில் சரி செய்வேன், கவலைப்படாதீங்க. கொரோனா முடியட்டும் நான் வர்றேன்” என்று சசிகலா கட்சித் தொண்டர்களிடம் பேசிய அலைபேசி உரையாடல்கள் இன்று தமிழ்நாட்டின் அரசியல் உரையாடலாய் மாறியிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த வருடம் சிறையில் இருந்தபோதே தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதங்களில் தான் மீண்டும் அரசியலுக்கு வருவதையும், தனது திட்டம் என்ன என்பதையும் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அக்கடிதங்களில் எடப்பாடி பழனிசாமி தனக்கு செய்த துரோகம் பற்றியும் விரிவாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சசிகலாவின் அலைபேசி உரையாடல்கள் ஒலி வடிவில் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கையில், அவரது திட்டவட்டமான தீர்மானங்கள் குறித்து அவரே தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்களில் சில மின்னம்பலத்துக்குக் கிடைத்துள்ளன.

அவற்றில் சிலவற்றை வெளியிடுகிறோம்.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளர் நந்தினி. வி.சரவணன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு சசிகலா எழுதிய பதில் கடிதம்...

“அன்புடன் கழக உடன் பிறப்பு நந்தினி. வி.சரவணன் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா எழுதுவது” என்று தொடங்குகிறது அந்தக் கடிதம். அதாவது எடுத்த எடுப்பிலேயே நான் தான் உங்கள் பொதுச் செயலாளர் என்று தொண்டர்களிடம் நேரடியாக உரையாடத் தொடங்குகிறார் சசிகலா.

பிறகு... “நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நீங்கள் நல்லபடியாக கட்சிப் பணியைத் தொடங்க வேண்டும். எல்லாரிடமும் அனுசரணையாக அன்பாகப் பழக வேண்டும் எனக்கு கஷ்டம் என்பதே தெரிந்ததில்லை. எந்த சூழ்நிலையிலும் எடுத்திருக்கும் காரியத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செயல்படக் கூடியவள்.

இப்போது எனக்கு இரண்டாவது அனுபவம். தலைவர் இறந்தபோது முதல் அனுபவம். அதை சரி செய்து வெற்றி கண்டோம். அதேபோல இப்பொழுதும் அம்மா இறந்தபோதும் நடந்துள்ளது. இந்த நிகழ்வுகளை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இது புதிதல்ல. நிச்சயமாக இவற்றையும் நான் சரிசெய்வேன். அதனால் நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும். நான் விரைவில் வெளியே வருவேன். அதனால் நீங்கள் எல்லாரும் நன்றாக செயல்படுங்கள்.

மற்றபடி உங்கள் வீட்டில் உள்ளவர்களை விசாரித்ததாக சொல்லவும்.

அன்புடன் சின்னம்மா” என்று முடிகிறது அந்தக் கடிதம்,

அந்தக் கடிதம் பார்த்துவிட்டு நந்தினி சரவணன் மீண்டும் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கடிதம் எழுத, அதற்கு மறுபடியும் இன்னொரு பதில் கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா.

அந்தக் கடிதத்தில்....

“நீங்கள் எழுதியதைப் போல் தியாகம் ஒரு நாளும் தோற்றதில்லை. துரோகம் ஒரு நாளும் வென்றதில்லை என்பது உண்மைதான். நம்மிடம் பதவி இல்லை, அதிகாரம் இல்லை. இது இரண்டையும் கொடுத்து ஆட்சி அமைத்துவிட்டுத்தான் வந்தேன். நாம் கொடுத்து பழக்கப்பட்டவர்கள், அவர்கள் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள். வாங்கும் எண்ணம் வந்தாலே துரோகம் கூடவே வந்துவிடும். இதுதான் சாதாரண மனிதர்களின் உணர்வு.

அதனால் அவர்கள் என்னதான் நினைத்தாலும் தலைவர் ஆக முடியாது. ஒருவர் தலைவர் ஆக வேண்டுமென்றால் தலைவர் பாடிய பாடல்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். அதையெல்லாம் நன்றாகக் கற்றவர்கள் நாம். அதனால்தான் நாம் தனித்தன்மையோடு உயர்ந்து நிற்கிறோம். இந்த மனதுடைய தொண்டர்கள்தான் என்னைச் சுற்றியுள்ளார்கள்.

அந்த மனம் இருப்பதால்தான் என்னுடைய கஷ்டமான சூழ்நிலையிலும் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் அம்மா என்று எனக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தபடி உள்ளீர்கள். இதுதான் என்றும் நிலைத்து நிற்கும். இப்படிப்பட்டவர்களைதான் தமிழக மக்களும் மதிப்பார்கள். உங்களைப் போன்ற தொண்டர்கள் எழுதும் கடிதங்கள்தான் எனக்கு துணையாக இருக்கிறது” என்று தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார் சசிகலா.

2019,2020 ஆண்டுகளில் மேற்கண்ட இந்த கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுபோல ஏராளமானோர் சசிகலாவுக்கு கடிதங்கள் எழுத, அவர்களுக்கு சசிகலாவும் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவர்களிடம் இப்போது அலைபேசி வழியாகவும் உரையாடி வருகிறார். ஒருசில ஆடியோக்களே வெளியே வந்தாலும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரிடம் அலைபேசி வழியாக உரையாடி வருகிறார் சசிகலா . இந்த நிலையில்தான் சசிகலா தொண்டர்களுக்குச் சிறையில் இருந்தபடி எழுதும் கடிதங்களும் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

-வேந்தன்

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

புதன் 2 ஜுன் 2021