மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

பருப்பு ஊழல்: விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ்

பருப்பு ஊழல்:  விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ்

ரேஷன் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டிருப்பதாகவும் அதேநேரம் முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் அரசை வற்புறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் ரேஷன் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ.1480 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டியது இந்த இயக்கம். அதாவது சர்க்கரை வாங்கியதில் 111 கோடி ரூபாய் இழப்பு, பருப்பு டெண்டரில் ரூ.870 கோடி இழப்பு, பாமாயில் டெண்டரில் ரூ.499 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளை அடுத்து, நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் கடந்த வாரம் மாற்றப்பட்டார். கிறிஸ்டி நிறுவனத்துக்குக் கிலோ 143.5 ரூபாய்க்கு 20,000 டன் துவரம்பருப்பு என்று ஒதுக்கப்படவிருந்த டெண்டரையும் ரத்து செய்து புதிய டெண்டரை கோரியுள்ளது முதல்வர் ஸ்டாலின் அரசு.

இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பழைய டெண்டருக்கும், புதிய டெண்டருக்குமான விலை வித்தியாசம் பற்றிய ஆவணத்தை வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

“துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி கொள்ளை அடிக்க கிறிஸ்டி- - சுதா தேவி - காமராஜ் போட்ட மெகா திட்டம் முறியடிக்கப்பட்டது. அறப்போர் புகார் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்பட்டது.

ஒரே மாதத்தில் விடப்பட்ட இரண்டு துவரம் பருப்பு டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனங்களில் ஒன்றான ராசி நியூட்ரி (Rasi Nutri Foods) நிறுவனம் ஒரு கிலோவுக்கு 59.50 ரூபாய் வித்தியாசத்தில் டெண்டர் கொடுத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட முந்தைய டெண்டரில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மூன்றில் ராசி நிறுவனம் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமானது. மற்ற இரண்டு நிறுவனங்களும் (Kendriya மற்றும் Nacof) கிறிஸ்டி நிறுவனத்திற்காக டெண்டர் எடுப்பவர்கள். மூவருமே ரத்து செய்யப்பட்ட பழைய டெண்டரில் கிலோவுக்கு 143.50 ரூபாய்க்கு அதிகமாக விலை கொடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமே பங்கேற்று விலையை அதிகமாக கொடுக்கும் செட்டிங் டெண்டர் இது தான்.

இந்த செட்டிங் டெண்டர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்து போராடி புகார் அளித்து வருகிறது. இந்த புகாரின் விளைவாக புதிதாக பதவி ஏற்ற தமிழ்நாடு அரசு பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு பல நிறுவனங்களும் பங்குபெற்று போட்டியிடும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றி புதிய டெண்டர் வெளியிட்டது. அதன் விளைவு 4 கிறிஸ்டி நிறுவனங்களோடு சேர்த்து மொத்தம் 9 நிறுவனங்கள் புதிய துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்றுள்ளன. சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாக கொள்முதல் விலையில் கிடைக்கும் துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்ற 8 நிறுவனங்கள் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாகவே டெண்டர் கொடுத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு அதிக விலைக்கு துவரம் பருப்பு வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது.

ஆனால் கிலோ 146.50 ரூபாய்க்கு முதலில் டெண்டர் கொடுத்த கிறிஸ்டியின் ராசி ஃபுட்ஸ் நிறுவனம் டெண்டரில் போட்டி உருவான உடனே இந்த முறை கிலோ 87 ரூபாய் அதாவது கிலோவுக்கு 59.50 ரூபாய் குறைவாக டெண்டர் கொடுக்கிறது. இதன் மூலம் கிறிஸ்டி நிறுவனங்கள் இதற்கு முன்பாக எடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் கிறிஸ்டி - சுதா தேவி - காமராஜ் கூட்டணி அடித்த கொள்ளைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பகிரங்க கொள்ளைகளில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனங்கள் உடனடியாக கறுப்புப் பட்டியலில் வைக்க வழி செய்யப்பட வேண்டும். இதற்கு துணையாக இருந்த சுதா தேவி மற்றும் காமராஜ் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இவர்களிடம் இருந்து அபராதமாக வசூல் செய்ய வேண்டும்”என்றும் அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல அந்த நிறுவனமே இப்போது விலையைக் குறைத்து டெண்டர் கேட்டு கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க வழி செய்திருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜை விசாரிக்க அறப்போர் இயக்கம் அடுத்த கட்ட சட்டப்போராட்டத்துக்குத் தயாராகிறது.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

செவ்வாய் 1 ஜுன் 2021