ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி: முதல்வர் ஸ்டாலின்

politics

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 28,978ஆக இருந்தது. இறப்பு 232ஆக இருந்தது.

பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பதில்லை, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதனால், மே 24ஆம் தேதி முதல் தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 24ஆம் தேதி அன்று ஒருநாள் பாதிப்பு 34,867ஆக இருந்தது. இதனிடையே ஒரு நாள் பாதிப்பு 36ஆயிரம் வரை எட்டியது.

இதனால் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மாலை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், தினசரி பாதிப்பு 27,936 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ”ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது. கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

அதில், “மே 24ஆம் தேதி முதல் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 7ஆயிரமாக இருந்த பாதிப்பு 2ஆயிரமாகக் குறைந்தது. கோவையிலும் இரண்டு நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருகிறது.

ஊரடங்கு காரணமாகக் குறிப்பிட்ட சில பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனால் தான் கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அடுத்து 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கவுள்ளோம். இந்த நடவடிக்கைக்குப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டினார்.

இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது மக்களின் கையில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளைக் கடந்த மூன்று வார காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை. நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதுதான் உண்மை.

ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். இந்தளவுக்குத் தடுப்பூசி வேறு எந்த மாநிலங்களிலும் போடப்படவில்லை. ஒரு நாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம். மக்களைக் காக்கும் பணியில் என்னை நானே ஒப்படைத்திருக்கிறேன்.

தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிபிஇ உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும் என சொல்வார்கள். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படுகிறது.

கொரோனா வார்டுக்குள் சென்றதற்கு எனக்குப் பலர் பாராட்டு தெரிவித்தாலும், முதலமைச்சர் அவர்களே உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என பலர் உரிமையோடு கண்டிக்கவும் செய்தார்கள்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களைப் பார்க்க நான் சென்றதன் மூலமாகப் பதற்றம் அடையும் மக்களுக்கு நான் சொல்வது – இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும். இத்தகைய தொற்றுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு சிலர் மீறினாலும் அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும். முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால் தான் 2வது அலையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும். எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள் பல்வேறு துறைகளில் செய்ய வேண்டும்.

அதற்குத் தடையாக உள்ள கோவிட் என்னும் தடுப்புச் சுவரை விரைவில் உடைத்து நொறுக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் பல துறைகளில் மாற்றம், முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும்” என்றார்

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *