மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

தொண்டர்கள் சந்திப்புப் பயணம்: தயாராகும் சசிகலா

தொண்டர்கள் சந்திப்புப் பயணம்: தயாராகும் சசிகலா

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்து கவனிக்கப் போவதாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மார்ச் 3 ஆம் தேதி இரவு திடீரென வெள்ளைத் தாளில் அறிவிப்பு வெளியிட்ட சசிகலா, கடந்த ஓரிரு நாட்களாக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில், ‘கவலைப்படாதீங்க.சீக்கிரம் கட்சியை சரி செஞ்சுடுவோம். வர்றேன்’ என்று சொல்லி வருகிறார் சசிகலா.

இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “சசிகலாவிடம் எந்த அதிமுக தொண்டனும் பேசவில்லை. அவராகவே அமமுக தொண்டர்களிடம் பேசி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவரது பேச்சுக்கு அதிமுகவின் ஒரு தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்”என்று தெரிவித்திருந்தார்.

இதுபற்றி சசிகலா தரப்பில் விசாரித்தபோது,

“சசிகலா பற்றி ஒவ்வொரு முறை பரபரப்பு எழும்போதும் கே.பி.முனுசாமியே வாயைத் திறக்கிறார்.மற்ற முன்னாள் அமைச்சர்கள் பலரும் இப்போது சைலன்ட் ஆகிவிட்டார்கள்.

ஜனவரி மாதம் டெல்லி சென்றபோது எடப்பாடி ஒருமுறை சசிகலா மீண்டும் கட்சியில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று பேசினார். ஆனால் பன்னீரோ, ‘சசிகலாவின் மீதான நன்மதிப்பு எங்களுக்கு குறையவில்லை’ என்று பேசினார். இப்படி ஒவ்வொருவரும் தேர்தலுக்கு முன்பே மாறி மாறி பேசினார்கள்.

ஆனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு சசிகலாதான் கட்சிக்குத் தேவை என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். இப்போதே எடப்பாடி சேலத்திலும், ஓபிஎஸ் தேனியிலும் இருந்து அரசியல் செய்கிறார்கள். இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்கள்.

அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆராய இன்னும் ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. நேரில் நடத்த முடியவில்லை என்றால் காணொலியில் நடத்தலாமே... அப்படி கூட்டம் நடத்தினாலும் அது முறையாக ஆரம்பித்து முறையாக முடியுமா என்று தெரியாது. ஏனென்றால் அவ்வளவு எதிர்ப்புணர்வும், மோதல் உணர்வும் கட்சிக்குள் இருக்கிறது.

இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் எடப்பாடி, பன்னீர் அல்லாத சசிகலா வந்தால்தான் முடியும் என்று தொண்டர்கள் நிர்வாகிகள் நினைக்கிறார்கள். அதை ஒட்டிதான் இந்த போன் உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. .

திமுக இப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் அதில் மும்முரமாக உள்ளது அரசு. கொரோனா பாதிப்பு முடிந்ததும் அதிமுகவை வேட்டையாடத் தொடங்கும் திமுக. இதுபற்றியெல்லாம் பலரும் சசிகலாவிடம் பேசி வருகிறார்கள்.அதன் அடிப்படையிலேயே சசிகலா சில முடிவுகளை எடுத்திருக்கிறார்.

விரைவில் ஜூலையில் அல்லது ஆகஸ்டு மாதம் தொண்டர்களை சந்திப்பதற்காக சசிகலா தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுகவின் பிரச்சினையை அதிமுகவே பார்த்துக்கொள்ளட்டும், அதில் வேறு தேசிய கட்சிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருக்கிறார். எனவே அதற்கான அடிப்படை வேலைகள் நடந்து வருகின்றன.

விரைவில் நிர்வாகிகளை அல்ல தொண்டர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சசிகலா.இப்போது தொலைபேசியில் பேசியதை இன்னும் சில மாதங்களில் நேரடியாக தொண்டர்களை சந்தித்து உரையாடுவார்” என்கிறார்கள்.

இன்னும் மூன்று மாதம் சசிகலா தினகரன் போடும் கணக்கு என்ற தலைப்பில் மே22 ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த கணக்கின்படி கொரோனா பாதிப்பு நீங்கி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் முதன் முதலில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு, தொண்டர்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் சசிகலா.

-ராகவேந்திரா ஆரா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 1 ஜுன் 2021