மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

‘பெண்ணை அடிக்கலாம், திட்டலாம்!’ பெருந்தொற்றாகத் தொடரும் வக்கிரம்

‘பெண்ணை அடிக்கலாம், திட்டலாம்!’ பெருந்தொற்றாகத் தொடரும் வக்கிரம்

அ. குமரேசன்

கொரோனா பெருந்தொற்று பீடிக்காதிருந்த காலத்திலேயே உலகெங்கும் பெண்களின் நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது; பெண்களை அடிப்பதும் ஊதியமற்ற வீட்டு வேலைக்காரர்களாகச் சிறுமைப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூக நெறியாகத் தொடர்ந்து வந்திருக்கிறது. பெருந்தொற்றின் தாண்டவம் தொடங்கிய பிறகோ, இந்த நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. பெருந்தொற்றுச் சூழல்களால் ஏற்பட்ட வேலையிழப்புகளில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். வெந்த புண்ணில் அமிலம் ஊற்றியதுபோல, இந்த பாதிப்புகளோடு, வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துவிட்டன.

சென்ற ஆண்டு மார்ச் 24 அன்று, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்படுவது போல போக்குக்காட்டிவிட்டு இந்த ஆண்டில் இரண்டாவது அலையாகப் புறப்பட்டுவிட்டது. ஆனால், வேறு பல அலைகள் பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டன. வேலைவாய்ப்பு, தொழிலாளர்களின் பணி நேர உரிமை, குழந்தைகளின் பள்ளி விளையாட்டு, சிறு தொழில்களின் உற்பத்தி - சந்தை, ஜனநாயக இயக்கங்களின் போராட்டக் களம்… இப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்ட நடப்புகள் பல.

அதேவேளையில், இன்னோர் அலை கட்டுப்படவில்லை என்பதோடு பெரிய அளவுக்கு உயரவும் செய்தது. அதுதான் பெண்கள் மீதான வன்முறை அலை. சென்ற ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு வாரக் காலத்திலேயே, தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறை புகார்கள் 100 சதவிகிதம் அதிகரித்தன. புகார் பதிவு செய்ய இயலாத பெண்களுக்காக ஒரு மாற்று வழியாக வாட்ஸ்அப் தொடர்பு எண் ஒன்றை ஆணையம் அறிவித்தது.

இதில் கவனத்துக்குரியது என்னவென்றால், சென்ற ஆண்டு குடும்ப வன்முறை பற்றிய புகார்கள், மாதவாரியாகக் குறைவாகவே ஆணையத்தில் பதிவாகின. ஜனவரியில் 538, பிப்ரவரியில் 523, மார்ச் மாதத்தில் 501, ஏப்ரலில் 377 என புகார்களின் எண்ணிக்கை குறைந்தது. அப்படியானால் பொதுமுடக்கத்தின்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துவிட்டன என்று எடுத்துக்கொள்வதா? இல்லை. படிப்படியாகப் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டபோது வன்முறைப் புகார்கள் அதிகரித்துவிட்டன. மே மாதத்தில் 552 புகார்களும், ஜூன் மாதத்தில் 730 புகார்களும் பதிவாகின. பொதுமுடக்கக்காலத்தில் நடந்த வன்முறைகள் பற்றிய புகார்கள் பதிவு செய்யப்படவில்லை என இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அவ்வாறு புகார் செய்வதற்கான வாய்ப்புகளும், தொடர்புகளும் பல பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே இதன் உள்ளடக்கம்.

உதவிகள் கிடைக்காத நிலை

இந்தியாவில் 38 சதவிகிதப் பெண்களிடம்தான் கைப்பேசிகள் இருக்கின்றன. அவர்களிலும் இணையத்தொடர்பு வசதியுடன் கூடிய கைப்பேசிகள் வைத்திருப்பவர்கள் குறைவுதான். பொதுமுடக்கக் காலத்தில் வெளியே செல்ல இயலாத நிலையில் பல பெண்களால் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தங்களுடைய பெற்றோரின் வீடுகளுக்குக்கூடப் போக முடியவில்லை. ஆலோசனைகளோ, உதவிகளோ பெற முடியாத சூழல் அவர்களைப் புகார் செய்யவிடாமல் தடுத்துவிட்டது.

“பொதுமுடக்கக் காலத்திய இன்றியமையாத சேவைகளில், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்துகிற அதிகார அமைப்புகள் சேர்க்கப்படவில்லை. காவல்துறையினர் பொதுமுடக்கச் செயலாக்கத்தையொட்டி கூடுதல் பணிச்சுமைகளோடு இருக்கிறார்கள். தொண்டு நிறுவன ஊழியர்களாலும் நேரடியாகத் தொடர்புகொண்டு உதவ இயலாத நிலை. பெண்களுக்கு ஆதரவான அமைப்பு வலுவாக இல்லாததும் இதற்கொரு காரணம்” என்று ‘ஆக்ஸ்ஃபாம் இந்தியா’ அமைப்பு தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

“இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் இதுவொரு தவிர்க்கமுடியாத நிகழ்வு என்று இதைத் தள்ளிவிடக் கூடாது. மாறாக, இதற்கும் முக்கியத்துவம் அளித்து உரிய கொள்கை முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்” என்றும் ஆக்ஸ்ஃபாம் கூறுகிறது.

கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைகளை இழந்தவர்களிலும் பெரும்பான்மையினர் பெண்கள்தான். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் காரணமாக, வீடுகளில் தங்களுக்கு இருந்திருக்கக்கூடிய குறைந்த அளவு அதிகாரத்தைக் கூட பல பெண்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். இதுவும் அவர்கள் வீட்டு ஆண்களால் தாக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது. பொதுவாகவே சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் ஊதியம் இல்லாமல் 1,200 கோடியே 50 லட்சம் மணிநேரம் வேலை செய்கிறார்கள். உலகப் பொருளாதாரத்தில் இதன் பண மதிப்பு 10.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் – அதாவது 7,81,85,196.10 கோடி இந்திய ரூபாய்கள். இது உலகப் பொருளாதாரத்துக்குப் பெருந்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பைவிட மூன்று மடங்கு அதிகம். ஆனால், இதே பொருளாதார அமைப்பால் சிறிதும் பலனடையாதவர்கள் இவ்வாறு ஊதியமின்றி உழைக்கிற பெண்கள்தான்.

அடிப்படையான ஊதியம் கிடைப்பதில்லையே தவிர அடியும் உதையும் தாராளமாகக் கிடைக்கிறது. இதைப் பற்றிய ஓர் ஆய்வையும் ஆக்ஸ்ஃபாம் நடத்தியிருக்கிறது. பிகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் நடத்தப்பட்ட அந்த ஆய்வு, வீட்டு வேலைகள் தொடர்பான பிரச்சினைகளில் நேரடித் தாக்குதல்களுக்கும், கேவலமான வசவுகளுக்கும் பெண்கள் தொடர்ச்சியாக உள்ளாகிறார்கள் என்று காட்டுகிறது.

அடிப்பதற்கு அங்கீகாரம்

குழந்தைகளை சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பெண்களை மோசமாகத் திட்டலாம் என்று 53.4 சதவிகிதத்தினர் நியாயப்படுத்தியிருக்கிறார்கள். அதே காரணத்துக்காக கடுமையாகத் தாக்குவதில் தவறில்லை என்று 33 சதவிகிதத்தினர் கூறியிருக்கிறார்கள். குழந்தைகளைப் பராமரிப்பது ஒரு கூட்டுப்பொறுப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஆணாதிக்கப் புத்தியல்லவா இவ்வாறு நியாயப்படுத்த வைக்கிறது?

அதே போல, வீட்டில் மற்றவர்களை அல்லது உடல்நலம் குன்றியிருக்கக்கூடிய இதர பெரியவர்களை சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பெண்களை அடிப்பதற்கு 36.2 சதவிகிதத்தினரும், இழிவாகப் பேசுவதற்கு 60.6 சதவிகிதத்தினரும் ஆதரவாக இருக்கிறார்கள். குடும்பத்தில் நோயாளிகளைக் கவனிப்பது ஒரு பெண்ணின் பொறுப்புதானா? அது குடும்பத்தின் பொறுப்பு இல்லையா?

வீட்டு ஆம்பளையின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் அடிக்கலாம் என்று 24.3 சதவிகிதத்தினரும், அவமானப்படுத்திப் பேசலாம் என்று 42.6 சதவிகிதத்தினரும் அங்கீகரிக்கிறார்கள். ‘கேட்காமல்’ பணம் செலவழித்து விட்டால் உதைக்க வேண்டியதுதான் என்று 26.3 சதவிகிதத்தினரும், தாறுமாறாகத் திட்ட வேண்டியதுதான் என்று 42 சதவிகிதத்தினரும் சொல்கிறார்கள்.

கணவனோ, மாமனாரோ, தகப்பனோ, சகோதரனோ, மைத்துனனோ, மகனோ – வீட்டு ஆம்பளைகளுக்கு உணவு தயாரிப்பதில் தாமதமாகிவிட்டால் அடிக்கத்தான் வேண்டும் என்று 41.2 சதவிகிதத்தினரும், வையத்தான் வேண்டும் என்று 67.9 சதவிகிதத்தினரும் ஆமோதித்திருக்கிறார்கள். என்ன காரணத்துக்காக சமைக்க முடியாமல் போய்விட்டது என்று இப்படிப்பட்ட ஆட்கள் விசாரிக்கக்கூட மாட்டார்கள்.

‘அனுமதி’ பெறாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று வந்ததற்காக அடிப்பதும் திட்டுவதும்தான் அதிக வாக்குகள் பெற்றிருக்கின்றன. அதற்காக அடிப்பதை ஆதரித்திருப்பவர்கள் 54.4 சதவிகிதம். வசைத் தோட்டாக்களைப் பாய்ச்சலாம் என்பவர்கள் 86.4 சதவிகிதம். பாலின சமத்துவத்தை, முடிவுகள் எடுப்பதில் பெண்ணின் சம உரிமையை மதிக்காத சமூக நியதியிலிருந்தே இப்படி ‘அனுமதி’ பெறாமல் வெளியே போனால் தாக்கலாம் என்ற எண்ணம் ஊன்றப்பட்டிருக்கிறது.

வன்மமும் வக்கிரமும்

‘நியதி’ முக்கியம் என்பதால்தான் சமூகம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நகர்கிறது. வீட்டுக்குள்ளே மட்டுமல்ல, தெருவிலேயேகூட இப்படிப் பெண்கள் அடிக்கப்படுகிறபோது தலையிட்டுத் தடுக்க முயல்கிறவர்கள் மிக மிகக் குறைவு. அப்படியே தலையிட்டாலும் உடனே, அடிப்பவனிடமிருந்து வருகிற கேள்வி: “என் பெண்டாட்டியை (அல்லது எங்க வீட்டுப் பொண்ணை) நான் அடிக்கிறேன், நீ யார் கேட்பதற்கு?” அப்படியும், தட்டிக்கேட்டவர் ஒதுங்கவில்லை என்றால் அடுத்த கேள்வி வரும்: “உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?” உடலிலும் உள்ளத்திலும் வலி ஏற்படுத்துவது ஒரு வன்மம், இப்படி உதவிக்கு வருகிறவரை அவமதிப்பது ஒரு வக்கிரம். இந்த வன்மமும், வக்கிரமும் ஆணின் புத்தியிலிருந்து மட்டுமல்ல, ஆணாதிக்க நியதி குடியேற்றப்பட்ட பெண்ணிடமிருந்தும் வெளிப்படக்கூடும். அது ஆணாதிக்கத்தின் ஒரு சாகசமும்கூட.

இந்த வன்மங்களும் வக்கிரங்களும் கொரோனா பரவல் காலத்தில் வடிந்துவிடப் போவதில்லை, மாறாக வளர்ந்துகொண்டே போகின்றன என்று நன்றாகத் தெரிகிறது. ஆகவே, இதற்கெல்லாம் எதிரான கருத்துப் பரவல் இயக்கத்துக்கு கொரோன காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கொரோனாவைத் தடுப்பதற்கான பெரு முயற்சிகளோடு, இந்தக் கொடுமையை ஒழிப்பதற்கான இயக்கங்களும் இணைவது ஒரு நாகரிக சமுதாயத்தைக் கட்டுவதற்கான ஒரு கட்டாயத் தேவை.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 1 ஜுன் 2021