மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

தடுப்பூசி: மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

தடுப்பூசி: மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று (மே 31) நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திரபட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.

அப்போது, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளே போதுமானதாக இருக்கும் என்றும் இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் திட்டம் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், 44 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியை மத்திய அரசு வாங்கி விநியோகம் செய்கிறது. ஆனால் 18 - 44 வயதுடையவர்களுக்கான தடுப்பூசியில் 50 சதவிகிதத்தை மாநில அரசுக்கும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு வெவ்வேறு விலையில் வழங்குகிறது. ஏன் இந்த பாகுபாடு என்பது புரியவில்லை.

44 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளிக்கலாம்.

அப்படியென்றால், கொரோனா இரண்டாவது அலையில் 44 வயதுக்கு குறைவானவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மத்திய அரசு களநிலவரத்தைத் புரிந்துகொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்ற நீதிபதிகள், ’தொழில்நுட்பப் பிரச்சினைகளை கவனிக்காமல் எப்படி கோவின் பதிவை கட்டாயமாக்கினீர்கள்’ என்றும் கேள்வி எழுப்பினர்.

”நிலைமை மாறும் என்று நீங்கள் தொடர்ந்து கூறுகிறீர்கள், டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் கிராமப்புறங்களில் நிலைமை வேறாக உள்ளது. ஒரு கல்வியறிவற்ற புலம்பெயர்ந்த தொழிலாளி எவ்வாறு ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வார்? இந்த டிஜிட்டல் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

இதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "கிராமத்தில் உள்ள மக்கள் கணினி மையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்யலாம்... பின்பு அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் " என்று கூறினார்.

"இது உண்மையிலேயே நடைமுறைக்குரியதா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உங்கள் தடுப்பூசி கொள்கையை ஆவணமாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தடுப்பூசி தட்டுப்பாடு, ஊரகப்பகுதிகளில் தடுப்பூசி கிடைக்காமை உள்ளிட்டவை குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தற்போது ஏற்பட்டிருப்பது தேசிய அளவிலான பிரச்சினை. எனவே மத்திய அரசுதான் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தடுப்பூசியினைப் பெற்றுத்தர வேண்டும். மாநில அரசுகள் இந்த விஷயத்தில் மத்திய அரசை நம்பிதான் உள்ளன. அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் தருவோம் என நீங்கள்தான் உறுதி அளிக்க வேண்டும் என்ற நீதிபதிகள், தடுப்பூசியில் உள்ள குளறுபடிகளைக் களைந்து நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 1 ஜுன் 2021