மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது: மோடிக்கு மம்தா கடிதம்!

தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது:  மோடிக்கு மம்தா கடிதம்!

மத்திய அரசின் உத்தரவின் படி, மேற்கு வங்காள மாநில தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு இன்று (மே 31) கடிதம் எழுதியிருக்கிறார்.

மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை அண்மையில் தாக்கிய யாஸ் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கடந்த மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அதன் பின் மேற்கு வங்காள காலிகுண்டா விமானப் படை தளத்தில் பிரதமர் மோடி புயல் சேதம் பற்றிய ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு முன்பே பிரதமரை சந்தித்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்ட மம்தா, பிரதமர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்தார். மேற்கு வங்காள ஆளுநரும், பாஜக தலைவர் நட்டாவும் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்தனர். மம்தா பானர்ஜியோ, “பிரதமர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது எனக்குத் தெரியாது.நான் டிகா மாவட்டத்தில் ஆய்வுக்கு சென்றுவிட்டேன்”என்று கூறியிருந்தார்.

அன்று பிற்பகல் பிரதமரின் ஆய்வுக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்த நிலையில், அன்று மாலையே பிரதமர் மோடியை தலைவராகக் கொண்ட மத்திய அமைச்சரவை நியமனக் குழு,

“மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யா அப்பதவியில் இருந்து மாற்றப்படுகிறார். அவர் மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் நார்த் பிளாக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் ”என்று உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசு உத்தரவிட்டது போல மே 31 இன்று காலை 10 மணிக்கு மேற்கு வங்காள தலைமைச் செயலாளர் டெல்லி நார்த் பிளாக்கில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

“2021 மே 28 தேதி இந்திய அரசால் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஒருதலைப்பட்ச உத்தரவால் நான் அதிர்ச்சியடைந்தேன். மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யா ஐ.ஏ.எஸ்.சை விடுவிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவு, மேற்கு வங்காள அரசாங்கத்துடன் எந்தவொரு முன் ஆலோசனையும் இல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரியின் விருப்பமும் இல்லாமல், இந்திய நிர்வாக சேவை (கேடர்) விதிகள், 1954 மற்றும் பிற பொருந்தக்கூடிய எந்தவொரு முன் நிபந்தனைகளுக்கும் முரணாகவுமிருக்கிறது.

எனவே மத்திய அரசின் அந்த உத்தரவு சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு முன் இப்படி நடந்ததாக எந்த ஒரு முன்னுதாரணமும் இல்லை. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது ” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி மேலும்,

“மேற்கு வங்காள அரசாங்கத்தால் இந்த முக்கியமான நேரத்தில் அதன் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது. அவருக்கு பதவி நீட்டிப்பு கோரி அரசுடன் சட்டபூர்வமான ஆலோசனையின் பின்னர் வழங்கப்பட்டது. அதுவே செல்லுபடியாகும். ஆனால் தலைமைச் செயலாளரை திரும்பப் பெறும் மத்திய அரசின் உத்தரவு சட்டத்துக்கு எதிரானது. பொதுநலனுக்கும் எதிரானது. ஆகவே, உங்கள் முடிவை திரும்பப் பெறுங்கள்” என்று மம்தா பானர்ஜி அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 31 மே 2021