மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை: ஸ்டாலின்

எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை: ஸ்டாலின்

கொரோனா தடுப்புப் பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று (மே 30) ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கொரோனா வார்டுக்கு, பிபிஇ கிட் அணிந்து சென்று நோயாளிகளைச் சந்தித்தார்.

தொடர்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பல மணி நேரம் பிபிஇ கிட்டை அணிந்துகொண்டு மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். இது பாராட்டுக்குரியது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிபிஇ உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்றேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடகாவில் 50,000 என்ற உச்ச நிலையை கொரோனா தொட்டது. கேரளாவில் 43,000 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் 36,000-க்குள் கட்டுக்குள் வந்திருக்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக கொரோனா குறைந்து வருகிறது.

கோவையில் பாதிப்பு அதிகரித்தாலும், கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைக் காண முடிகிறது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து கோவைக்கு வருகின்றனர். வட மாநிலத்தவர்கள் அதிகம் பேர் இங்கு வேலை செய்கின்றனர். தொழில் நிறுவனங்களில் அதிகம் பேர் கூடி வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது பாதிப்பு அதிகமாக காரணமாகிறது.

கோவையில் கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க, அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் இருவரும் இங்கேயே தங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அதுபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்தியாவிலேயே அதிகளவிலான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "கொரோனா மூன்றாம் அலை வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் வகையில், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைக் குத்தகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கில் சில தளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வியாபாரிகள் அமைப்பு மூலம் மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த ஊரடங்கில் வெற்றி பெற்றால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

கோவை மாவட்டம் எந்த காரணத்துக்கும் புறக்கணிக்கப்படவில்லை. ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, போடாதவர்களுக்கும் சேர்த்து வேலை செய்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். எந்த பாரபட்சமும் நாங்கள் பார்ப்பது கிடையாது. தேவைப்பட்டால் இரண்டு நாட்கள் கழித்துக் கூட கோவைக்கு வருவேன்” என்றார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

திங்கள் 31 மே 2021