மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

ஏழு ஆண்டு மோடி அரசின் ஏழு சாதனைகள்: பட்டியலிடும் காங்கிரஸ்

ஏழு ஆண்டு மோடி அரசின் ஏழு சாதனைகள்: பட்டியலிடும் காங்கிரஸ்

இந்தியாவின் பிரதமராக இரண்டாம் முறையாக 2019 மே 30 ஆம் தேதி நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன் இரண்டாம் ஆண்டு விழா இன்று பாஜகவினரால் நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2014 முதல் 2019 வரை மோடியே ஆட்சியில் இருந்ததால் இன்று இந்தியாவில் மோடி ஆட்சி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இதை ஒட்டி காங்கிரஸ் கட்சி மோடி அரசு மீது ஏழு குற்றச்சாட்டுகளை முன் வைத்து குற்றப் பத்திரிகையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று (மே 30) காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மோடி அரசு மீது ஏழு குற்றச் சாட்டுகளை வெளியிட்டுள்ளார்.

1. மைனஸில் போகும் ஜிடிபி

காணொலி வாயிலாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுர்ஜேவாலா, “இந்தியா விடுதலை அடைந்து கடந்த 73 ஆண்டுகளில் மிகவும் பலவீனமான அரசு மோடி அரசுதான்.

2014 ஆம் ஆண்டில் யுபிஏ அரசாங்கம் பதவியை விட்டு இறங்கியபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி 8.1%ஆக இருந்தது. ஆனால் இது 2019-20 ஆம் ஆண்டில் அதாவது கொரோனாவுக்கு முன்பே ஜிடிபி 4.2% ஆகக் குறைந்தது. இதைவிடக் கொடுமையாக 2020-21 முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 24.1% ஆகவும், இரண்டாவது காலாண்டில் இப்போது மைனஸ் 7.5% ஆகவும் இருக்கிறது. 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 8% க்கு அருகில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது”என்று அவர் கூறினார். மேலும் அவர் பட்டியலிட்டவை பின் வருமாறு....

2. அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் மோடி ஆட்சிக்கு வந்தார். அப்படிக் கணக்குப் போட்டால் ஏழு ஆண்டுகளில் மோடி அரசு 14 கோடி வேலைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மோடி ஆட்சியில்தான் இந்திய நாட்டின் வேலையில்லாதோர் விகிதம் கடந்த 45 ஆண்டுகளிலேயே அதிகம் என்ற அளவுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர்.

3. விலைவாசி உயர்வு

பணவீக்கம் ஏற்கனவே இருக்கும் நாட்டின் நிலையற்ற நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் லிட்டருக்கு 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாட்டில் அதிகப்படியான குடும்பங்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு எல்பிஜி கேஸ் சிலிண்டர் 800 முதல் 900 ரூபாய்க்கு போய்க் கொண்டிருக்கிறது. சமையலுக்கு உதவும் பருப்பு வகைகளின் விலையும் ஏறிக் கொண்டே இருக்கிறது.

4. விவசாயிகளை வெறுக்கும் அரசு

விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் விவசாயிகளின் மீது உணர்ச்சியற்ற அணுகுமுறையையே மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை சிறுகுறு விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுப்பதையே மோடி அரசு விரும்புகிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்த மோடி அரசு அதில் இருந்து நேர் எதிரான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

5. அதிகரிக்கும் ஏழைகளின் எண்ணிக்கை

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் நாட்டில் 27 கோடி மக்கள் தீவிர வறுமையை வென்றனர். அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டில் PEW ஆராய்ச்சி மையம் இந்தியாவில் நடுத்தர வர்க்கம் சுருங்கிவிட்டது என்றும், கிட்டத்தட்ட 3.20 கோடி மக்கள் ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறது.

6. கொரோனாவை தடுக்கத் தவறிய மோடி அரசு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கைகளை குறைத்துக் காட்டி வருகிறது மோடி அரசு. நாடு முழுதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்த முடியாத அளவுக்கு தடுப்பூசி பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்திய மக்களுக்கு கிடைக்காத தடுப்பூசிகள் 6.63 கோடி எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதை அரசு விளக்குமா?

7. எல்லையில் சீன ஊருடுவல்

56 இன்ச் மார்பு என்று பாஜகவினரால் புகழப்பட்ட மோடி ஆட்சியில்தான் சீனா தொடர்ந்து அருணாசலப்பிரதேசத்திலும், லடாக் பகுதியிலும் ஊடுருவி வருகிறது. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருகிறது. இவைதான் கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி அரசின் சாதனைகள்”என்று பட்டியலிட்டிருக்கிறார் சுர்ஜேவாலா.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

ஞாயிறு 30 மே 2021