மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

மறைந்தார் ‘தோழர்’ மைதிலி சிவராமன்

மறைந்தார்  ‘தோழர்’   மைதிலி சிவராமன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்க, பெண்கள் இயக்கத் தலைவருமான மைதிலி சிவராமன் (வயது 81) கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இன்று (மே30) காலமானார்.

மைதிலி சிவராமன் அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, பிறகு நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையில் ஓராண்டு வேலை செய்தார். 1966ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தில் மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சேர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோதே தலைமறைவாகி கியூபா சென்று வந்தார். 1960களில் அவர் அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் போருக்கு எதிராக நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள், கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக் கான போராட்டங்கள் அவரின் கவனத்தை ஈர்த்தன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வின் மூலம் மார்க்சியத்தின் பக்கம் திரும்பினார். அமெரிக்க அரசு வேலையை உதறிவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார். ரேடிக்கல் ரெவியூ என்ற பத்திரிகையை என். ராம், ப. சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து நடத்தி வந்தார்.

1968ம் ஆண்டு கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிக்கல் ரெவ்யூ பத்திரிகையில் ஆவணப்படுத்தி இக்கொடூரச் சம்பவத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்த முதலாவது நபர் தோழர் மைதிலி சிவராமன். கீழவெண்மணிப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷனுக்குப் பல்வேறு ஆவணங்களைத் திரட்டியும் தந்தவர். இது குறித்து ‘Haunted by Fire’ என்கிற புத்தகம் எழுதியிருக்கிறார்.

மைதிலி போர்க்குணமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும் பரிணமித்து சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். சி.ஐ.டி.யூ அமைப்பின் மாநிலப் பொறுப்புகளையும் வகித்தவர். கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம், டேப்ளட் தொழிலாளர் போராட்டம், டன்லப் தொழிற்சங்கம், பொண்வண்டு சோப் கம்பெனி, பாலு கார்மெண்ட்ஸ், குவாரி தொழிற்சங்கம் என பல தொழிற்சங்கங்களில் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியவர்.

குறிப்பாக கார்மெண்ட் தொழில்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார சுரண்டலையும், பாலியல் தாக்குதல்களையும் வலுவான முறையில் தலையிட்டு சட்டரீதியாகவும் தடுத்து நிறுத்திய பெரும் பங்கு தோழர் மைதிலி சிவராமனுக்கு உண்டு. சிறு நிறுவனங்களில் மட்டுமின்றி மெட்டல்பாக்ஸ், அசோக் லேலண்டு, யூனியன் கார்பைடு, டிவிஎஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் நடந்த தொழிற்சங்க போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் தோழர் மைதிலி . உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவை தமிழகத்தில் உருவாக்கி வளர்த்ததில் முக்கிய பங்காற்றியவர். மத்தியதர வர்க்க பெண் ஊழியர்களை தொழிற்சங்கத்திலும், மாதர் இயக்கத்திலும் ஸ்தாபன படுத்துவதில் வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

1973-ல் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரோடு இணைந்து தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய நிறுவனர்களில் ஒருவர் தோழர் மைதிலி சிவராமன். வரதட்சணை கொலைகள் தற்கொலை என மூடி மறைக்கப்பட்ட நிலைமை , காவல் நிலையங்களில் ஆண் குற்றவாளிகளை பிடிப்பதற்காக பெண்களை பணயக் கைதியாக வைத்த போக்கு, குழந்தை தொழிலாளர்கள், பெண்சிசுக்கொலை, சாதிய ஒடுக்குமுறை, குழந்தைத்திருமணம், இடஒதுக்கீடு என ஒவ்வொரு பகுதி பிரச்சனைகளையும் ஆய்வுக்குள்ளாக்கி போராட்டங்களை முன்னெடுத்தவர்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சென்னை நடு குப்பத்தில் மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை அறியும் குழுவாகச் சென்று விவரங்களை வெளிக்கொண்டு வந்தவர். பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு எனப் பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அரும்பாடுபட்ட தலைவர்.

இப்படி யாருமே மறக்க முடியாத சாதனைகளை தன் போராட்ட வாழ்வால் சாதித்த மைதிலி சிவராமன் கடந்த சில ஆண்டுகளாக ‘அல்சைமர்’ என்ற தீவிர ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு அவரது கணவர் கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோர் கவனிப்பில் இருந்தார். இந்த நிலையில்தான் அவரையும் அறியாமல் தொற்றிய கொரோனா கிருமியால் காலமாகிவிட்டார்.

இந்த தகவல்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாலர் கே.பாலகிருஷ்ணன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மைதிலி சிவராமன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 30 மே 2021