மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

கலைஞர் பிறந்தநாள்: ஸ்டாலின் கட்டளை!

கலைஞர் பிறந்தநாள்: ஸ்டாலின் கட்டளை!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 31 வரை இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவு.... ஜூன் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூன் 3 ஆம் தேதி மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்தநாள் வருகிறது. இதை ஒட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் மூலம் கட்டளையிட்டுள்ளார்.

இன்று (மே 30) காலை அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ ஜூன் 3 - நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். தி.மு.கழகத்தினர்க்கு அது சிறந்த நாள். நவீனத் தமிழ்நாட்டின் நன்மை பயக்கும் உயர்வுக்கெல்லாம் காரணமான நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை, அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள்.

அந்த மாபெரும் தலைவர் இன்று நம்மிடையே இல்லை என்கிற ஏக்கம் ஒருபுறமிருந்தாலும், அவர் கட்டிக் காத்த இந்த இயக்கம் இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறது. கலைஞர் முதலமைச்சர் பொறுப்பில் இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதை, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்ற நான், என் உள்ளத்தில் ஆழப் பதியவைத்துள்ளேன். கலைஞரின் பெயருக்கும் புகழுக்கும் அணிசேர்க்கும் வகையில், இந்தப் பேரிடர் காலத்தில் இணையிலாப் பணியாற்றி, மக்கள் நலன் போற்றிக் காத்திட வேண்டும் என்ற உறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்து வருகின்றேன். நமது அமைச்சர் பெருமக்களும், கழக சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக நிற்கின்றனர்”என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் தொடர்ந்து,

“மகத்தான வெற்றியையும் மக்களின் நம்பிக்கையையும் பெற்று தி.மு.கழக ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், இந்த வெற்றிக்கான அரசியல் பாதையை நமக்கு வகுத்தளித்தவரும் - நம் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருப்பவருமான தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் இருக்கத்தானே செய்யும்!

கடந்த ஆண்டு நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், இதேபோல கொரோனா கால ஊரடங்கு காரணமாக கலைஞர் பிறந்தநாளை மிக எளிய முறையிலேதான் கொண்டாடினோம். ஓராண்டுக்குள் நிலைமை மாறும் என எதிர்பார்த்தோம். அதனால், ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என்று மனதளவில் நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள். என் மனதிலும்கூட, தலைவர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான திட்டங்கள் உண்டு. எல்லாவற்றையும் இந்தப் பேரிடர் காலம் ஒத்தி வைத்திருக்கிறது.

மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி. அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். தலைவர் கலைஞர் அவர்கள் இன்று ஆட்சிப்பொறுப்பில் இருந்திருந்தால், இதைத்தான் நம்மிடம் எதிர்பார்த்து அறிவுறுத்தியிருப்பார்.

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய முத்தான மூன்று அன்புக் கட்டளைகள், ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு’ ஆகியவையாகும். இந்த மூன்றில் மிக முக்கியமானது, ‘கட்டுப்பாடு’ என்பதைத் தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை நமக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

கலைஞரின் பிறந்தநாளில் கட்டுப்பாடு காத்து, அவரவர் இல்லங்களில் கலைஞரின் திருஉருவப் படத்திற்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். அவர் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை - எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள்.

நலன் காக்கும் உதவிகளைச் செய்வதற்கேற்ப, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, முகக் கவசம் - தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பேரிடர் கால நெறிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாகச் செயலாற்றுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே அண்ணாவின் தம்பியான கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும். பேரிடர் கால நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் பிறந்தநாளை அமைதியாக - எளிமையாகக் கொண்டாடுவோம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் கலைஞரின் பிறந்தநாளைப் பெருமகிழ்ச்சியுடன் விழா எடுத்துக் கொண்டாடுவோம்” என்று கூறியிருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 30 மே 2021