மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை:சிஏஏ அமலாகிவிட்டதா?

முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை:சிஏஏ அமலாகிவிட்டதா?

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் சட்ட விதிகளை அறிவிக்கவில்லை, ஆனாலும், நேற்று (மே 28) மத்திய உள்துறை அமைச்சகம் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து முஸ்லிமல்லாத அகதிகளின் (இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தினர்) இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு 2019 ல் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“குடியுரிமைச் சட்டம் 1955-இன் பிரிவு 16 அளிக்கும் அதிகாரத்தின்படி இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.அதாவது 2014, டிசம்பா் 31-க்குள் இந்தியாவுக்கு வந்த ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், ஜைனா்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரை இந்திய குடிமக்களாக பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட், பதான், வதோதரா சத்தீஸ்கர் மாநிலத்தில் துா்க், பலோதாபசா ராஜஸ்தான் மாநிலத்தில் , ஜலூர், உதய்பூா், பாலி, பார்மர்,, சிரோஹி ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத், பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், உள்துறை செயலாளர் சரிபார்க்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இருக்கிறதா என்றும் ஆராய வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு குடியுரிமைச் சட்டம் 1955 இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது, 2019 இல் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி அல்ல. இதேபோன்ற அறிவிப்பு 2018 ஆம் ஆண்டிலும் பல மாநிலங்களில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் வெளியிடப்பட்டது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கலெக்டர்களுக்கும், உள்துறை செயலாளர்களுக்கும் 2018 ஆம் ஆண்டில் அரசாங்கம் இதே போன்ற அதிகாரங்களை வழங்கியது. 2016 ஆம் ஆண்டில் இதேபோன்ற அறிவிப்பில் மகாராஷ்டிராவும் இருந்தது”என்கிறார்கள்.

அப்படியென்றால் 1955 குடியுரிமை சட்டத்திலேயே மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் பிரிவு இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. 2019 ஆகஸ்டில் கொண்டுவரப்பட்ட மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திருத்தச் சட்டத்தால் இந்தியா முழுதும் பெரும் போராட்டங்களும் டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் கலவரங்களும் ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 29 மே 2021