மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

அனைத்து நிலை ஊடகவியலாளர்களுக்கும் ஊக்கத் தொகை : சீமான்

அனைத்து நிலை ஊடகவியலாளர்களுக்கும் ஊக்கத் தொகை : சீமான்

கொரோனா காலத்தில் களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடு இன்றி முன்கள பணியாளர்களாக அறிவித்து, அரசின் உதவிகள் கிடைக்க பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அனைத்து பத்திரிகையாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவித்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டும் இழப்பீடும், சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பத்திரிகையாளர்களிடையே சலசலப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதாரத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்களைப் போன்று பேரிடர் கால அவசர செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றாலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியாளர்களுக்கு மட்டுமே இவ்விதிமுறை பொருந்துமெனக் கூறப்படுவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

அரசின் அடையாள அட்டையானது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எளிதில் கிடைப்பதில்லை என்பதே தற்காலத்தில் இருக்கிற புறச்சூழல் சிக்கலாகும். குறிப்பாக, தொற்றுப்பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள இளம் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசின் அங்கீகார அட்டை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. பல ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்த மிக மூத்த ஊடகவியலாளர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்புடைய செய்தி நிறுவனங்கள் மூலம் அரசின் அங்கீகார அட்டையைப் பெறும் வாய்ப்பு அமைகிறது. இதனால், தங்களுக்கு அரசு அறிவித்துள்ள எவ்வித உதவியும் கிடைப்பதில்லையென உயிரைப் பணயம் வைத்துக் களப்பணியில் ஈடுபடும் இளம் ஊடகவியலாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாகக் களப்பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தொற்றினால் பாதிக்கப்படும் நிகழ்வுகளும், மரணமடையும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், டெங்கு, கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல் காலங்களிலும், மின்சாரமே சென்று சேராத தொலைதூரக் குக்கிராமங்கள் முதல் மலைவாழ் பகுதிகள்வரை சென்று தன்னலமற்றுக் களத்தில் நின்று மக்களுக்கும், அரசிற்கும் இடையே பாலமாகச் செயல்பட்டுச் செய்திகளை உடனுக்குடன் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பெரும்பணியென்பது போற்றுதலுக்குரியது.

அத்தகைய பணிகளில் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் முன்களத்தில் நின்று அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி, அதன் காரணமாக கொரோனா பெருந்தொற்றிற்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை இழந்த ஊடகவியலாளர்களுக்கு அரசின் எவ்விதத் துயர் துடைப்பு உதவியும் கிடைப்பதில்லை என்பது சொல்லவியலாப் பெருங்கொடுமையாகும்.

ஆகவே, இந்த நடைமுறைச் சிக்கலைக் கருத்தில்கொண்டு ஊடகத்துறையில் முன் களப்பணியாளர்களாக அறிவிக்க, அரசு விதித்துள்ள எழுத்துப்பூர்வமற்ற வாய்மொழி கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் எனவும், இணைய ஊடகங்களையும் அங்கீகரித்து, அதில் பணியாற்றுவோரையும் ஊடகவியலாளர்களாக ஏற்க வேண்டுமெனவும், ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று மாத ஊக்கத்தொகை ரூபாய் ஐயாயிரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பத்து லட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதி என அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்கும் வகையில் விரிவான அறிவிப்பை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 29 மே 2021