ஒரு நாள் சம்பளத்தைக் கொடுக்கும் அரசு ஊழியர்கள்!

politics

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு சிறுவர்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பங்கினைக் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தைத் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்னர்.

அவர்களின் விருப்பத்தினை பரிசீலினை செய்து அதை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை அவர்களது சொந்த விருப்பத்தின்பேரில், பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி, மே அல்லது ஜூன் 2021ஆம் மாதத்துக்கான ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆசிரியர்கள், அதற்கான தங்களது விருப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்துக்குரிய நிகர ஊதியத்தை அடிப்படையாகக்கொண்டு பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும்.

அதன் பொருட்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை முறையில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கிடலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *