மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

கண்கள் வீங்கி, காயங்களுடன் சோக்ஸி: டொமினிகாவில் இருந்து ஷாக்!

கண்கள் வீங்கி, காயங்களுடன் சோக்ஸி: டொமினிகாவில் இருந்து ஷாக்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் மெஹுல் சோக்ஸி, 26ஆம் தேதி கரீபியன் தீவுக் கூட்ட நாடுகளில் ஒன்றான டொமினிகாவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக டொமினிகாவில் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று, கரீபியன் தீவுக் கூட்ட நாடான ஆன்டிகுவாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குடியுரிமை பெற்ற சோக்ஸி, அங்கிருந்து கியூபா தப்பிச் செல்லும் முயற்சியின் போது, ஆன்டிகுவாவின் பக்கத்து நாடான டொமினிகாவில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீண்டும் ஆன்டிகுவா வந்தால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது கடினம் என்பதால், டொமினிகாவில் இருந்தே இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆன்டிகுவாவின் பிரதமர் ப்ரவுன் வற்புறுத்தியிருந்தார்.

ஆனால், சோக்ஸி இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க நினைத்த அவரது வழக்கறிஞர்கள், டொமினிகா நீதிமன்றத்தில் சோக்ஸியை ஆஜர்படுத்த வேண்டுமென்று ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை மே 27ஆம் தேதி தாக்கல் செய்தார்கள்.

டொமினிகாவைச் சேர்ந்த சோக்ஸியின் வழக்கறிஞர் வாய்ன் மார்ஷ் ஆன்டிகுவா நியூஸ் ரூம் என்ற செய்தி நிறுவனத்திடம் பேசியபோது,

“நான் சோக்ஸியை குறுகிய நேரமே சந்தித்தேன். அப்போது அவர் தரைவிரிப்புடன் கூடிய தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அவர் மிகவும் பதற்றத்திலும் மன உளைச்சலிலும் இருந்தார். அவரது உடலிலும் ஆங்காங்கே லேசான ரத்தக் காயங்கள், கீறல்கள் இருந்தன.

அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். தன்னை கடந்த ஞாயிற்றுக் கிழமை (மே 23) ஆன்டிகுவாவில் ஜாலி துறைமுகப் பகுதியில் இரவு உணவு சாப்பிடப்போகும்போது சிலர் தாக்கியதாகவும், அவர்களது குரலை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் ஆன்டிகுவா, இந்திய போலீஸ் அதிகாரிகள் என்றும் உணர முடிந்தது. அவர்கள் தன் முகத்தை மூடி கண்டபடி தாக்கி, டொமினிகா கொடி கட்டிய ஒரு படகில் கொண்டுபோய் அமர வைத்தனர் என்று தெரிவித்தார். அதன் பின் அவர் டொமினிகா அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

சோக்ஸிக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று மனு செய்தோம். அவருக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தோம். இதையடுத்து சோக்ஸியை டொமினிகாவில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை வெளியேற்றக் கூடாது என்று டொமினிகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சோக்ஸி கடத்தப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து பல ஆவணங்கள் கடலில் வீசி எறியப்பட்டன என்றும் தகவல்கள் வருகின்றன.

டொமினிகா நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இந்திய நேரப்படி மே 28 மாலை விசாரணைக்கு வருகிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 28 மே 2021