மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

சென்று வாருங்கள் தோழர் ஜவஹர்

சென்று வாருங்கள் தோழர் ஜவஹர்

மூத்த பத்திரிகையாளரும், சிறந்த தொழிற்சங்கவாதியும், கம்யூனிச சிந்தனையாளருமான தோழர் என்று அனைவராலும் அழைக்கப்படும் இரா. ஜவஹர் இன்று (மே28) அதிகாலை காலமாகிவிட்டார்.

மதுரையில் பிறந்த இரா. ஜவஹர் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தன் இளம் வயதிலேயே பணிக்கு சேர்ந்தார். இளம் தொழிற்சங்கவாதியாகவும் உருவானார். ஆவடி அம்பத்தூர் பகுதியின் சிஐடியு தொழிற்சங்கத்துக்குப் பொறுப்பாளராக 27 வயதிலேயே துடிப்புடன் செயல்பட்டவர் இரா. ஜவஹர்.

அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்து அம்பத்தூரில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது கைதானார். சிறையிலேயே மே தினக் கூட்டம் நடத்தியவர் இரா. ஜவஹர். நிர்வாகங்களிடம் எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை உறுதியோடு போராடி வென்றவர். அதற்காக பல அடக்கு முறைகளை எதிர்கொண்டவர். கொலை மிரட்டல்களையும் சந்தித்தவர்.

தொழிற்சங்கப் பணிகளில் காட்டிய தீவிரம் போலவே எழுத்துப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போதே ஜனசக்தி இதழில் எழுதத் தொடங்கினார். பின் தமிழன் எக்ஸ்பிரஸ், விகடன் நிறுவனத்தில் இருந்து வந்த ஜூனியர் போஸ்ட் போன்ற இதழ்களில் எழுதினார். ஜூனியர் போஸ்ட் இதழில், இரா. ஜவஹர் எழுதிய சிறப்புக் கட்டுரைகள் புதிய திசையில் அனலடித்தன. பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திய தீயாக இரா. ஜவஹரின் எழுத்துப் பணி தொடர்ந்தது.

நக்கீரன் இதழில் இரா. ஜவஹர் எழுதிய, ‘கம்யூனிசம்: நேற்று -இன்று-நாளை’என்ற தொடர் பிறகு நூலாகவும் வெளிவந்தது. கம்யூனிச தத்துவத்தின் மீதான விமர்சனம் உள்ளடக்கிய முழுமையான வரலாற்றுப் பார்வையாக அந்நூல் இருந்தது. கம்யூனிசம் பற்றிய புதிய புரிதல்களை இந்த நூல் பலருக்குள்ளும் உண்டாக்கியது.

இவ்வாறு தொடர்ந்து கம்யூனிச கொள்கைகளை முன்னெடுத்து சிறந்த கொள்கைவாதியாக திகழ்ந்தார். கடந்த சில பத்தாண்டுகளாக தமிழக கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் பலர் ஜவஹரிடம் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்து ஆலோசனைகள் கேட்பதுண்டு.

கடந்த வருடம் செப்டம்பர் 24ஆம் தேதி ஜவஹரின் மனைவி பூரணம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். அன்பான ராட்சசி என்று ஜவகரால் அழைக்கப்பட்ட மனைவியின் இழப்பு அவரை வெகுவாக பாதித்தது. அந்த நிலையிலும் தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் என்றும், அறிவியல் ரீதியாக கொரோனாவை வெல்வதற்கான கட்டுப்பாடுகளை பின்பற்றுங்கள் என்றும் கூறிவிட்டார் ஜவஹர். அதன் பின் அக்டோபர் 4 ஆம் தேதி, தன் வீட்டிலேயே தன் மனைவியின் படத் திறப்பு நிகழ்வை வெகுசிலர் மட்டுமே கலந்துகொள்ள நடத்தினார் ஜவஹர். அப்போது பூரணத்தின் படத்தைப் பேராசிரியை சரசுவதி திறந்து வைத்து உரையாற்றினார்.

ஜவஹருக்கு நுரையீரல் பகுதியில் புற்று நோய் இருந்து வந்தது. அதற்காக கடந்த இரு வருடங்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்தும் மீண்டு வந்தார் ஜவஹர். மே 26 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக தான் வழக்கமாக செல்லும் சென்னை நந்தனத்தில் இருக்கும் வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்குச் சென்றார் ஜவஹர். அங்கே சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சுயநினைவை இழந்துவிட்டார். இன்று (மே 28) அதிகாலை காலமானார்.

தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் அளவளாவும்போது, “வாழ்வில் நான் எதையும் பார்த்து பயந்ததில்லை. ஆனால் முதுமை மீதுதான் பெரும் பயம். அறுபது வயதுக்கு மேல் இருக்கக் கூடாது” என்று அடிக்கடி குறிப்பிடுவார் ஜவஹர். ஆனாலும் அவர் குறிப்பிட்ட அறுபது வயதைத் தாண்டி 12 வருடங்கள் முதுமையிலும் எவ்வித பயமும் இல்லாமல் சிந்தனையாளராகவே வாழ்ந்து தனது 72 ஆவது வயதில் காலமாகியிருக்கிறார் தோழர் ஜவஹர்.

அன்பான அணுகுமுறையாலும், உறுதியான சிந்தனைகளாலும் குடும்பத்தைத் தாண்டியும் ஏகப்பட்ட நல்ல உள்ளங்களைக் கவர்ந்தவர் இரா. ஜவஹர். முக நூல் எங்கும் அவருக்கான அஞ்சலிக் குறிப்புகள் நிறைந்து வழிகின்றன. அவர் இல்லாவிட்டாலும் அவரது சிந்தனையில் உதித்த புத்தகங்களைப் படிக்கும்போது அவரோடு உரையாடும் அனுபவத்தைக் கொடுக்கும்.

திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பில் வாழ்ந்த இரா.ஜவஹரின் இறுதி நிகழ்வுகள் இன்று (மே28) பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடக்கின்றன.

சென்று வாருங்கள் தோழர்!

.

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வெள்ளி 28 மே 2021