மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

அன்று ஊழல் அதிகாரி...இன்று உயர் அதிகாரியா? கோட்டையை உலுக்கும் டிரான்ஸ்பர்!

அன்று ஊழல் அதிகாரி...இன்று உயர் அதிகாரியா?   கோட்டையை உலுக்கும் டிரான்ஸ்பர்!

தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் மே 25 ஆம் தேதி இரவு மாற்றப்பட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய துறைகளை வகித்து வந்த பல அதிகாரிகள் மாற்றப்பட்டு துறைகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் ஏற்கனவே வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் சுக்கு நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரண்டே நாட்களில் அதாவது நேற்று (மே 27) கார்த்திகேயன் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு உயர் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றத்திலேயே ஏற்பட்ட இந்த மாற்றம் பற்றி கோட்டை வட்டாரத்தில் இருந்து அரசியல் வட்டாரங்கள் வரை விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் புதிய திமுக அரசில் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.சுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்து சமூக தளங்களில் கேள்விகளும் எதிர்ப்புகளும் எழுந்தன.

அதாவது அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் அதற்கு முன் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்தார். அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவராகவும் செயல்பட்டார் கார்த்திகேயன். இதுகுறித்து அப்போதே அறப்போர் இயக்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இப்போதும் இப்பிரச்சினையை கையிலெடுத்துள்ள அறப்போர் இயக்கம்,

“சென்னை மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை செட்டிங் செய்த புகாரில் சிக்கிய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். இந்த ஆட்சியில் பணம் புரளும் நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் 2018 ஆம் ஆண்டு இவரைப் பற்றி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடுமையான அறிக்கையை வெளியிட்டார். அப்பேற்பட்டவருக்கு மீண்டும் முக்கியப் பதவி என்றால், இந்த ஆட்சியிலும் செட்டிங் டெண்டர்கள் நடப்பதற்காகவா?”என்று கேள்வி எழுப்பியது அறப்போர் இயக்கம்.

கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் செயல்பட்ட விதம்பற்றி 2018 செப்டம்பர் 1 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் “மின்னணு நிர்வாகம்” மற்றும் “மொபைல் ஆப்” உள்ளிட்ட டெண்டரில், அந்த வேலைக்குத் தொடர்பே இல்லாத “மெட்டல் ஷீட்” தயாரிக்கும் நிறுவனத்தைப் பங்கேற்க வைத்து, அந்த டெண்டரை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணவப்போக்குடன் அதிகாரத் திமிரில் செயல்படுவது மட்டுமின்றி, இப்போது பத்திரிக்கைகளையும் ஊழல் செய்திகளை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவதும், எச்சரிப்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள பேராபத்து என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் டெண்டரில் பங்கேற்ற “ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனி” இதுவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதையும் செய்த முன் அனுபவம் இல்லை என்பது அந்தக் கம்பெனியின் இணைய தளம் மூலமே தெளிவாகத் தெரிகிறது. அந்த தனியார் கம்பெனியின் இணையதளத்தில் “இயந்திரங்கள் தயாரிப்பது தான் எங்களது முக்கியமான தொழில்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி அனுபவமே இல்லாத இந்த கம்பெனிக்கு சென்னை மாநகரத்தின் “ஸ்மார்ட் சிட்டி” மின்னணு நிர்வாகம் தொடர்பான 149 கோடி ரூபாய் டெண்டர் ஏற்கனவே எப்படி வழங்கப்பட்டது?

அந்த முறைகேடு போதாது என்று டுபிட்கோ டெண்டரில் உள்ள பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் மின்னணு நிர்வாகம் தொடர்பான ஒப்பந்தங்களையும் இந்த தனியார் கம்பெனிக்கே கொடுக்க அமைச்சர் இப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்வதுதான் ஊழலின் உச்சகட்டம்!

பத்து ஸ்மார்ட் சிட்டி டெண்டரைப் பொறுத்தமட்டில் கேரள மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனம் தான் விலை குறிப்பிட்டதில் (“ரேட் கோட்” பண்ணியதில்) இரண்டாவதாக வந்திருக்கிறது. ஆனால், அமைச்சரின் இந்த பினாமி கம்பெனி ஏன் டெண்டரை டெண்டர் கமிட்டி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருகிறது?

அந்தக் கோரிக்கையின் பின்னணியிலும், அந்த டெண்டரில் இந்த தனியார் கம்பெனிக்கு சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் தான், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் டுபிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்த ரேட் கொடுத்துள்ள கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்ற டெண்டர் சட்ட விதிகளை மீறி, அதிக ரேட் போட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகளை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி டெண்டரில் இவ்வளவு குளறுபடிகளை அமைச்சர் திட்டமிட்டு நடத்துகிறார்”என்று கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.சின் பெயரைக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் அப்போது அறிக்கை கொடுத்திருந்தார்.

அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கார்த்திகேயனுக்குதான் 25 ஆம் தேதி வெளிவந்த அதிகாரிகள் மாற்றப் பட்டியலில் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்டாலினால் ஊழல் அதிகாரி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஸ்டாலின் ஆட்சியிலேயே முக்கியப் பதவி என்றால் இப்போதும் ஊழல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று சர்ச்சைகள் கிளம்பிய நிலையில்தான், மே 26 ஆம் தேதி கார்த்திகேயன் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதவியில் இருந்து உயர்கல்வித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இப்போதும் சர்ச்சைகள் ஓயவில்லை. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க எல்லா ‘தகுதிகளும்’ கொண்ட அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி, மீண்டும் இன்னொரு உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக திமுகவினரே குமுறுகிறார்கள்.

“நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட இரண்டாவது நாளே கார்த்திகேயன் அந்த பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை உயர்கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்துள்ளார்கள். அங்கேயும் டெண்டர்களை செட்டிங் செய்யும் பட்சத்தில் மக்கள் பணம் கொள்ளை போக வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வித் துறையும் முக்கியமான துறை. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உண்மையை கண்டறியாமல் அவர்களுக்கு மீண்டும் உயர் பதவி அளிப்பது கண்டிக்கத்தக்கது” என்று அறப்போர் இயக்கமும் தெரிவித்துள்ளது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 28 மே 2021