மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

ட்விட்டர் Vs பாஜக அரசு: வலுக்கும் மோதல்!

ட்விட்டர் Vs  பாஜக அரசு: வலுக்கும் மோதல்!

ட்விட்டர் சமூக தள நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்குமான மோதல் போக்கு வலுத்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்த புதிய டிஜிட்டல் மீடியா விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் டிவிட்டர் நிறுவனம் மே 26 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில்,

“இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க நாங்கள் முயற்சிப்போம். ஆனால், இந்தியாவில் எங்கள் ஊழியர்கள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் எங்களின் பயனாளர்களுக்கு ஏற்படும் கருத்து சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் ஆகியவை கவலை அளிக்கிறது.

ட்விட்டர் இந்திய மக்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. எங்கள் சேவை பொது உரையாடலுக்கு முக்கியமானது. மேலும் தொற்றுநோய் காலங்களில் மக்களுக்கு ஆதரவளிக்கும் ஆதாரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்கள் சேவை தொடர்ந்து மக்களுக்கு கிடைப்பதற்காக இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க முயற்சிப்போம். ஆனால், உலகெங்கிலும் நாம் செய்வது போலவே, வெளிப்படைத்தன்மை, ஒவ்வொரு குரலையும் மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, மற்றும் சட்டத்தின் கீழ் கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் நாங்கள் தொடர்ந்து நடப்போம்” என்று தெரிவித்தது ட்விட்டர்.

மே 24 ஆம் தேதி இரவு டெல்லியில் இருக்கும் ட்விட்டர் அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் டெல்லி போலீஸின் சிறப்பு குழு சோதனை செய்தது. மத்திய அரசுக்கு எதிரான செய்திகள் ட்விட்டரில் பரவலாக்கப்படுகிறது என்ற சர்ச்சையைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்தே ட்விட்டர் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று (மே 27) ட்விட்டருக்கு பதிலளித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில்...

“ பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவதில் இந்தியா பல நூற்றாண்டுகளாக பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் சுதந்திரமான பேச்சை காப்பது, ட்விட்டர் போன்ற தனியார் மற்றும் லாப நோக்குடன் செயல்படும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு மட்டுமான,  தனிச்சிறப்புரிமை அல்ல. ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மற்றும் அதன் வலுவான அமைப்புகளின் உறுதிப்பாடு அர்ப்பணிப்பு கொண்டவையாகும்.

ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, தனது விதிமுறைகளை கூறும் முயற்சி. ட்விட்டர் தனது செயல்பாடுகள் மற்றும் வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை குறைவாக மதிப்பிட முயற்சிக்கிறது.  மேலும், இந்தியாவில் எந்த குற்றத்துக்கும் பொறுப்பேற்பதிலிருந்து பாதுகாப்பை கோருவதன் அடிப்படையில், இடைக்கால வழிகாட்டுதல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற ட்விட்டர் மறுக்கிறது.

மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், டிவிட்டர் நிறுவனம் மிகவும் உறுதிப்பாட்டுடன் இருந்தால், அதுபோன்ற செயல்முறையை ஏன் இந்தியாவில் ஏன் ஏற்படுத்தவில்லை? ‘எங்களுக்கு அதிகாரம் இல்லை, அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்துக்கு  அனைத்து பிரச்சனைகளையும் தெரிவிக்க வேண்டும்’ என இந்தியாவில் உள்ள ட்விட்டர் பிரதிநிதிகள் தொடர்ந்து கூறுகின்றனர். இதன் மூலம் இந்திய பயனர் தளத்துக்கு, ட்விட்டரின் அர்ப்பணிப்பு, வெற்றுத்தனமாக மட்டும் அல்லாமல், முற்றிலும் சுயசேவையாக இருக்கிறது.

ட்விட்டர் உட்பட அனைத்து சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளும் இந்தியாவில் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என இந்திய அரசு விரும்புகிறது. ட்விட்டரின் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. இது தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி.  இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது”என்று குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றால் இந்திய அரசியலில் மிக அதிக பலன் பெற்றது, தேர்தல் வெற்றிகளைப் பெற்றது பாஜகதான். ஆனால் அப்படிப்பட்ட பாஜகவின் ஆட்சியில்தான் இதுபோன்ற சமூக தள நிறுவனங்களுக்கும் அரசுக்குமான மோதல் அதிகரித்து வருகிறது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வெள்ளி 28 மே 2021