மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

சிபிசிஐடிக்கு மாறும் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு!

சிபிசிஐடிக்கு மாறும் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு!

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.

சென்னை கே.கே.நகர் 15ஆவது செக்டரில் அமைந்துள்ள பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியையும், தேனாம்பேட்டை, திருமலை சாலையில் அமைந்துள்ள பள்ளியையும் ஒய்.ஜி.மகேந்திரன் அண்ணி ஷீலா நடத்தி வருகிறார்.

கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, கோவிந்த வரதாச்சாரி ராஜகோபாலன் என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், பிஎஸ்பிபி பள்ளியின் முன்னாள் மாணவியான, மாடலிங் செய்து வரும் கிரிபாலி என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில தகவல்களைப் பதிவிட்டார். அதில், ஆசிரியர் ராஜகோபாலனின் நடவடிக்கைகள் குறித்தும், இதுதொடர்பாக பள்ளி தலைமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையறிந்த திமுக எம்.பி. கனிமொழி உடனே, ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்வீட் செய்தார். இந்த விவரத்தை ட்விட்டர் மூலம் அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்துதான், அந்த ஆசிரியரைக் கைது செய்து சென்னை சிட்டி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா மூவரும் இவ்வழக்கை வெவ்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

துணை ஆணையர் ஜெயலட்சுமி, இந்த வழக்கு சம்பந்தமாகப் பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களின் தாயார்களிடம் நேரடியாகச் சென்று விசாரித்து வருகிறார். பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், வாட்ச்மேன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

ஆரம்பத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு வழக்கறிஞர்களுடன் ஆஜரானார் ராஜகோபாலன்.

அப்போது, எந்த தவறும் செய்யாதவர் போல் நடித்தார் ராஜகோபாலன். மறுநாள் விசாரணையிலும் தன் மீது தவறு இல்லாதது போல் நடந்துகொண்டதால் துணை ஆணையர் ஜெயலட்சுமி டென்சன் ஆனார்.

காரணம், ராஜகோபாலன் செல்போனை ஏற்கனவே கைப்பற்றிருந்த துணை ஆணையர், சைபர் க்ரைம் உதவியுடன் அவரது மொபைலில் அழிக்கப்பட்ட போட்டோ, வீடியோ, குறுஞ்செய்திகளை ரெக்கவரி செய்து கையில் வைத்திருந்தார்.

விசாரணையின்போது, தன் மீது தவறே இல்லாதவாறு காட்டிக்கொண்ட ராஜகோபாலனிடம், ரெக்கவரி செய்த ஆதாரங்களை ஒன்று ஒன்றாகக் காட்டி, ‘இதெல்லாம் உன்னோட செல்போனில் இருந்துதானே அனுப்பப்பட்டிருக்கிறது’ என அவரது ஸ்டைலில் விசாரிக்கத் தொடங்கினார்.

‘பிள்ளைகளுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுங்கள் என்றால்... பிஞ்சு குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கிறாயா... உன்னை எல்லாம் விடக்கூடாது’ என்று ராஜகோபாலனிடம் தீவிர விசாரணை நடத்தி நடந்த ஒவ்வொன்றையும் வாக்குமூலமாகப் பதிவு செய்தார். துணை ஆணையருக்கு உதவியாக ஆய்வாளர் கலா இருந்தார்.

அதுபோன்று, தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத்தும், ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினார். ஓரளவுக்கு ஆதாரங்கள் கிடைத்ததனால் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 25, மே 26 ஆகிய தேதிகளில் பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடம் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது.

பள்ளி முதல்வர் கீதாவிடம், ‘ஸ்பெஷல் வகுப்பு என்று சில மாணவிகளை மட்டும் அழைத்து சில்மிஷம் செய்தது உங்களுக்குத் தெரியாதா? ஆன்லைனில் வகுப்பு எப்படி எடுக்க வேண்டும் என்று உங்களிடம் வழிகாட்டுதல் இல்லையா அல்லது தெரிந்தே இதுபோன்ற செயல்களை அனுமதித்தீர்களா?’ என போலீஸார் கேள்விக் கணைகளால் துளைத்ததால், பதில் சொல்ல முடியாமல் மயக்கமடைந்தார் கீதா. பிறகு தண்ணீர் கொடுத்துத் தெளிய வைத்தார்கள்.

அதோடு, உங்கள் பள்ளியில், ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் இறந்துவிட்டானே... அது எப்படி நடந்தது என்று கேட்க, ‘எனக்குத் தெரியாது’ என்று கலங்கியுள்ளார் கீதா.

பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து நாம் விசாரித்ததில், “இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்து வருகிறது” என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வணங்காமுடி

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

வெள்ளி 28 மே 2021