மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

வாட்ஸ்அப்புக்கு மத்திய அரசால் பாதிப்பா? மத்திய அமைச்சர் பதில்!

வாட்ஸ்அப்புக்கு மத்திய அரசால் பாதிப்பா? மத்திய அமைச்சர் பதில்!

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதுகுறித்து நேற்று (மே 26) நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

“தனிநபர்களின் ரகசிய தகவல்களைப் பாதுகாப்பதை, அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது. அதே நேரத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை. அதைத்தான் மத்திய அரசு செய்கிறது.

இந்திய அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும், வாஸ்ட்அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது. சாதாரண மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இருக்காது’’ எனவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மேலும் அவர், “நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள், பொது அமைதியைச் சீர்குலைக்கும் குற்றங்களைத் தடுத்தல், ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனையுடன் கூடிய பலாத்கார மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை போன்றவற்றுக்கு மட்டும் வழிகாட்டுதல்களின் 4(2) விதிமுறையின் கீழ், குறிப்பிட்ட தகவலை முதலில் பதிவிட்டவரைக் கண்டுபிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம். இதுபோன்ற குற்றங்களுக்கான செயலை முதலில் செய்தவரை கண்டுபிடித்துத் தண்டிப்பதும் பொதுநலன்தான். கும்பல் தாக்குதல் போன்ற கலவரங்களில், நாம் இதை மறுக்க முடியாது. பொதுவில் ஏற்கனவே உள்ள விஷயங்கள் மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் தகவல் மூலம் பரப்பப்படுகிறது. ஆகையால், முதலில் தகவலை வெளியிட்டவரின் பங்கு மிக முக்கியம்” என்று ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

“குறியாக்கம் பராமரிக்கப்படுமா, இல்லையா என்பது பற்றிய முழு விவாதமும் தவறாக உள்ளது. குறியாக்க தொழில்நுட்பம் அல்லது இதர தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசிய பாதுகாப்புரிமை உறுதி செய்யப்படுமா, இல்லையா என்பது முற்றிலும் சமூக ஊடகங்களின் நோக்கத்தைப் பொறுத்தது. குறியாக்கம் அல்லது இதர தொழில்நுட்பம் அல்லது இரண்டின் மூலம் தொழில்நுட்ப தீர்வு காண்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பு’’ எனவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

வியாழன் 27 மே 2021