மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

வட இந்தியர் வாக்குகள்: தயாநிதியை சிக்க வைத்த சேகர்பாபு

வட இந்தியர் வாக்குகள்: தயாநிதியை சிக்க வைத்த சேகர்பாபு

சென்னை துறைமுகம் பகுதியில் மே 26 ஆம் தேதியன்று, வட இந்திய மக்களின் சங்கமான மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ இயக்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை எம்பி தயாநிதிமாறனும், அமைச்சர் சேகர்பாபுவும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு பேசிய பேச்சு இந்திய அளவில் விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அப்படி என்ன பேசினார் அமைச்சர் சேகர்பாபு?

“நான் இங்கே நாற்பது வருடங்களாக இருக்கிறேன். உங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல வட இந்திய நண்பர்கள் நல்ல நிலையை அடைந்திருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதில், பொருளாதார ரீதியாக உயர்த்தியதில் திராவிடக் கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு. உங்களை உயர்த்தியதற்கு பிஜேபி காரணமில்லை. திராவிடக் கட்சிகள்தான் காரணம்.

நீங்கள் ஏதோ ஒரு மாயையில் இருக்கிறீர்கள். தொடர்ந்து அந்த இயக்கத்தைதான் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் (தயாநிதிமாறன்) கூட கேட்பார்.... ‘அவர்கள் நமக்கு வாக்களிப்பதே இல்லை. நீங்கள் ஏன் விழுந்து விழுந்து அவர்களுக்காக பாடுபடுகிறீர்கள்”’என்று கேட்பார்.

அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள். வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற உறுப்பினர் பொதுவானவர். (கைதட்டல்). அதுபோல தேர்ந்தெடுக்கப்படுகிற முதலமைச்சரும் பொதுவானவர் என்ற எண்ணத்தில்தான் உங்களுக்கு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

2014 இல் துறைமுகத்தில் அருமை அண்ணன் தயாநிதிமாறனுக்காக நான் தேர்தல் பணியாற்றினேன். அப்போதும் உங்கள் வாக்குகள் பெரும்பாலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல 2016 சட்டமன்றத் தேர்தலில் நானே நின்றேன்... எனக்கும் உங்கள் வாக்குகள் சரியாக கிடைக்கவில்லை. ஆனாலும் பரவாயில்லை என்று 2016 சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உங்களுக்காக நாங்கள் முழுமையாக பணியாற்றியிருக்கின்றோம். பல இடங்களில் உங்கள் வீடுகள் கட்டப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்காக பணியாற்றியிருக்கிறோம்.

அதேபோல 2019 ல் அண்ணன் தயாநிதிமாறன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். நீங்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் (பேப்பர்களை பார்க்கிறார்) எங்களுக்கு சொல்லும்படியான வாக்குகள் கிடைக்கவில்லை. பரவாயில்லை அப்போதும் உங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் நானும் இணைந்து தொடர்ந்து பாடுபடுகிறோம்.

இதையெல்லாம் கூறியே 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டேன். ஆனால் இப்போது நடந்த தேர்தலிலும் நீங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் எங்களுக்கு வாக்குகள் விழவில்லை. வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடக்கும்போது இதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் எங்களுக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட முடிகிறது.

இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அதிகமாக இருக்கும் வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு 50 வாக்குகள்தான் விழுந்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கத்துக்கு (பாஜக) 300-350 வரையிலான வாக்குகள் விழுந்திருக்கின்றன.

உங்களுக்குதான் வாக்களித்தோம் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. பரவாயில்லை. நீங்கள் எங்களை எவ்வளவு புறக்கணித்தாலும் திமுகவாகிய நாங்கள் உங்களைப் புறக்கணிக்க மாட்டோம். உங்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்”என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் சேகர்பாபு.

மேலும் அவர், ’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற திருக்குறள் வரிகள் மிக வலுவான வரிகள். அதை உங்கள் மொழியிலேயே மொழிபெயர்த்து அனுப்பி வைக்கின்றோம். உங்களை வெளிமாநிலத்தவர் என்று நாங்கள் நினைப்பதில்லை. நம்மில் ஒருவர் என்றுதான் நினைக்கிறோம்” என்று முடித்தார்.

சேகர்பாபுவின் இந்த பேச்சு அகில இந்திய அளவில் பரபரப்பாகியுள்ளது. வட இந்திய ஊடகங்கள், “திமுக அமைச்சர் வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசிவிட்டார்”என்று விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்ற தமிழக பாஜக இளைஞரணிச் செயலாளர் வினோஜ் இந்த விவகாரத்தில் சேகர்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், “ குறிப்பிட்ட ஒரு இனத்தவர், சமுதாயத்தவரை அச்சுறுத்தும் வகையில், அவர்களது வாக்கு செலுத்தும் உரிமையை கேள்வி கேட்கும் வகையில் ஒரு அமைச்சரே பேசியது கண்டிக்கத் தக்கது. சேகர்பாபுவின் கடமை அனைவருக்கும் பணி செய்வதே. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாஜக முழுமையாக ஆதரவு தரும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத், ” தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அவர்களே... இன்னும் நீங்கள் திமுகவின் வின் மாவட்ட செயலாளர் போல பேசுவதைகைவிட்டு, அறநிலையத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுவது போல் தொகுதி மக்களிடமும் பாகுபாடின்றி அனைவரும் இந்தியர்,அனைவரும் தமிழர் என்ற எண்ணத்தோடு சேவை செய்யுங்கள்”என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், “ நமக்கு வாக்களிக்காத வட இந்தியர்களுக்கு ஏன் விழுந்து விழுந்து வேலை செய்கிறீர்கள் ?” என்று தயாநிதிமாறன் கேட்டதாக சேகர்பாபு குறிப்பிட்ட விஷயம் இந்தியா முழுதும் வைரலாகி வருகிறது. இது தயாநிதிமாறனுக்கும், திமுக தலைமைக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சேகர்பாபுவின் பேச்சு பாஜக புள்ளிகள் சிலர் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 27 மே 2021