மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

ஆன்லைன் வகுப்பு: முதல்வரின் அதிரடி உத்தரவு!

ஆன்லைன் வகுப்பு: முதல்வரின் அதிரடி உத்தரவு!

பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நாளுக்கு நாள் புது வடிவம் பெற்று பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அப்பள்ளி குறித்தான பல குற்றச்சாட்டுகளும் வெளிவந்த வண்ணமாக உள்ளன. இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்று எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று (மே 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, கடந்த ஓராண்டாக வகுப்புகள் இணைய வழியாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில்கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும்பட்சத்தில் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதல்வர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும், இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார்.

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “போக்சோ” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு ஹெல்ப்-லைன் எண் உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாகப் பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 27 மே 2021