மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

மேகதாட்டு அணையைத் தமிழக அரசு அனுமதிக்காது: துரைமுருகன்

மேகதாட்டு அணையைத் தமிழக அரசு அனுமதிக்காது: துரைமுருகன்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாட்டு அணை திட்டத்தைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 2018இல் மேகதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதிக்கக் கோரி வரைவுத் திட்டத்தை மத்திய நீர் வள அமைச்சகத்துக்குக் கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும்தான் காவிரியில் புதிய அணைகளைக் கட்ட முடியும் என்ற நிபந்தனையை காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் விதித்தன.

இந்தச் சூழலில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 9,000 கோடி ரூபாய் செலவில் மேகதாட்டுவில் அணை கட்டுவதற்குக் கட்டுமான பொருட்களைக் குவிப்பதாக  ஆங்கில நாளிதழில் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்.

மேகதாட்டுவில் அணை கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து ஜூலை 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க  மத்திய அரசு, தமிழக, கர்நாடக அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி  நாளிட்ட ஆங்கில செய்தித்தாள் ஒன்றில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்காக, ஆரம்பக்கட்டப் பணிகளான சாலை அமைத்தல், கட்டுமான பொருட்களைச் சேகரித்தல் போன்ற வேலைகள் நடைபெற்று வருவதாகச் செய்தி வெளியானது.

மேற்படி நாளேட்டுச் செய்தியின் அடிப்படையில், மேகதாட்டு அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு, வனத்துறை மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி, உரிய அனுமதியினைப் பெற்றுள்ளதா என்பதை அறிவதற்காக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து அசல் விண்ணப்பம் (O.A.No.111 of 2021 (SZ)) வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

மேகதாட்டு விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து தீர்ப்பாயத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் ஒருங்கிணைந்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திலிருந்து ஒருவர், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து ஒருவர், காவிரி நீர்வாரி நிகாம், கர்நாடகத்திலிருந்து ஒருவர் மற்றும் கர்நாடக அரசிலிருந்து கூடுதல் வனப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உள்ளனர்.

இந்தக் குழு, மேகதாட்டு அணையைக் கட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அதன் அறிக்கையை 05.07.2021-க்கு முன்பாக அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவுக்குக் கர்நாடகத்தின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க ஆணையிட்டுள்ளது.

இந்த வழக்கில் 11 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டிலிருந்து தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மற்றும் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் சேர்க்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஒரு பிரதிவாதியாகும்.

இதற்கிடையில், மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி அளித்ததைத் திரும்பப் பெறவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்குத் தடை ஆணை வழங்கவும் கோரி, தமிழ்நாடு அரசு 30.11.2018 அன்று மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்கள் குறித்த வல்லுநர் குழு 19.07.2019 அன்று நடைபெற்ற  25ஆவது கூட்டத்தில் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகதாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது.

இது தவிர, இயக்குநர், திட்ட மதிப்பீட்டு இயக்குநரகம், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடக நீர்வளத்துறைச் செயலாளர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் 05.12.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்விரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், இத்திட்டத்தை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க எடுத்துக்கொள்வதாகத் தெரியவந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில், அடுத்தடுத்து நடைபெற்ற ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாட்டு அணை பற்றிய விவாதம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து, தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாட்டு அணை திட்டத்தைத் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது" என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 27 மே 2021