மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

தடுப்பூசி: அன்புமணி கொடுத்த யோசனை!

தடுப்பூசி: அன்புமணி கொடுத்த யோசனை!

சென்னையை அடுத்த செங்கல்பட்டு நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தடுப்பூசி உற்பத்தி பணியை விரைவில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்தார்.

இந்த மையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வது தொடர்பாக மத்திய அரசை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்காக மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசு ஏற்பதே ஒரே தீர்வு என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடுப்பூசி வளாகத்தை ஆய்வு செய்து அவ்வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், இது காலம் கடந்த கோரிக்கை ஆகும்.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் அமைக்கும் திட்டம் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அந்த ஆண்டிலேயே அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. 2010-ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டிய செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், 95% பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வரை தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கவில்லை.

இது தொடர்பாக 2019-ஆம் ஆண்டிலும், இம்மாதத்தின் தொடக்கத்திலும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், மத்திய அரசு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தியைத் தொடங்காமல், 15 ஆண்டுகள் குத்தகைக்குத் தனியாரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்து, அதற்கான டெண்டர்களை பெறும் நடவடிக்கைகளையும் கடந்த 21ஆம் தேதி நிறைவு செய்தது.

அதன் மூலம் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை நேரடியாக நடத்தும் திட்டம் இல்லை என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி விட்டது. அடுத்த 15 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்கும் ஏதோ ஒரு நிறுவனம் தான் அந்த வளாகத்தை நடத்தும். மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து தடுப்பூசி வளாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசே தடுப்பூசிகளைத் தயாரித்து சொந்தப் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ளவற்றைப் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். மாறாக, செங்கல்பட்டு வளாகத்தில் மத்திய அரசே தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத ஒன்றைக் கூறுவதன் மூலம் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது.

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், டிசம்பருக்குள் தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டாக வேண்டும். அதற்குக் குறைந்தது 12 கோடி தடுப்பூசிகள் தேவை. செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை ஏற்று நடத்தாமல், வேறு எந்த வழியிலும் இவ்வளவு தடுப்பூசிகளைத் தமிழக அரசால் பெற முடியாது. இது தான் எதார்த்தம் ஆகும்.

தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்குத் தடுப்பூசி போடுவதற்காக 3.5 கோடி டோஸ் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய டெண்டர்களை தமிழக அரசு கோரியுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தடுப்பூசி வழங்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வந்ததாகத் தெரியவில்லை.

தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக மராட்டியம், கேரளம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கோரிய உலகளாவிய டெண்டர்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்துப் பார்க்கும் போது தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை உலகச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய முடியாது. அத்தகைய சூழலில் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கான சாத்தியக் கூறுகளைத் தமிழக அரசு இப்போதே ஆராய வேண்டும்.

இந்த சூழலில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் தயாரிக்க முடியும். இதை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தைத் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 26 மே 2021