மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

துறைச் செயலாளர்கள் மாற்றம்: அமைச்சர்கள் கேட்டது நடந்ததா?

துறைச் செயலாளர்கள்  மாற்றம்: அமைச்சர்கள் கேட்டது நடந்ததா?

திமுக ஆட்சி அமைத்த பிறகு, ஒவ்வொரு அரசும் புதிதாக அமைந்த பின் நடக்கும் வழக்கமான நிர்வாக மாற்றங்கள் கூட தாமதமாயின. கொரோனா தடுப்புப் பணிகளிலே தீவிரம் காட்ட வேண்டியிருந்ததால் மற்றவற்றில் அரசால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று (மே 25) இரவு தமிழக அரசின் முக்கியத் துறைகளின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலைத் துறை, கூட்டுறவுத் துறை, வீட்டுவசதித்துறை என 21 முக்கிய துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். துறைச் செயலாளர்கள் மாற்றம் பற்றிய விவரங்களை இன்று காலை மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிர்வாக மாற்றம் குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது சூடான சுவாரஸ்யங்கள் கிடைத்தன.

“வாக்குப் பதிவு முடிந்த ஏப்ரல் 6 ஆம்தேதியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2 ஆம் தேதி வரைக்கும் இடைப்பட்ட காலத்திலேயே.... ‘அடுத்து திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று மோப்பம் பிடித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் திமுக கூடாரத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்தனர். இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் சிலர் மூலம் பல அதிகாரிகள் தங்களுக்கு வெயிட்டான துறை கிடைக்க லாபி செய்தனர்.

மே 2 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு திமுக ஆட்சியைப் பிடிப்பது உறுதியானதும் மேலும் தீவிரமாக அவர்கள் முயற்சித்தனர். ஆனால், இந்த மாற்றப்பட்டியலில் அவ்வாறு குடும்ப ரீதியாக அழுத்தம் கொடுத்த பலருக்கு எந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

அதிகாரிகள் தரப்பில் இருந்து செய்யப்பட்ட லாபி வெற்றி பெறவில்லை என்பது ஒருபக்கமென்றால்...இன்னொரு பக்கம் இப்போதைய அமைச்சர்கள் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை. அதாவது அமைச்சர்கள் தங்கள் துறைக்கு குறிப்பிட்ட இந்த அதிகாரி செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும், வசதியாக இருக்கும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்று கணக்குப் போட்டிருந்தார்கள். இதுபற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கூட, ‘என் துறைக்கு இன்ன அதிகாரியை நியமித்தால் சிறப்பாக இருக்கும்’என்று குறிப்பு வைத்து கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால் இந்த 21 துறை செயலாளர்கள் மாற்றத்தில் அமைச்சர்களின் கோரிக்கையும் பெரிய அளவில் நிறைவேற்றப்படவில்லை.

மூன்றாவதாக முக்கியமான அம்சம் கடந்த ஆட்சியில் முக்கியமான துறைகளில் கோலோச்சிய அதிகாரிகள் அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி போன்ற முக்கிய அமைச்சர்களின் துறையில் பணியாற்றிய அதிகாரிகள் தங்களுக்கு மீண்டும் அதே பதவி அல்லது அதற்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பதவி கிடைக்க வேண்டும் என்று முயற்சித்தனர். அந்த முயற்சியும் ஸ்டாலினால் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு உதாரணம்.. பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.

அதேநேரம் கடந்த ஆட்சியில் துணை முதல்வராகவும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் துறையில் இருந்த அதிகாரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளராக இருந்த கார்த்திகேயன், இப்போதைய திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் விளக்கம் சொல்லத் தேவையில்லை”என்று முடித்துக் கொண்டனர்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

புதன் 26 மே 2021