மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

பகுதி 4: தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

பகுதி 4: தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

நம்பிக்கையூட்டும் தமிழக அரசும் நமக்கான பாதையும்!

கடந்த பகுதிகள் சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் ஆபத்து, அது விளைவிக்கும் பிரச்சினைகள், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பூசி உற்பத்தி, முற்றொருமைக்கான அரசியல், அதில் பங்கேற்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கு, அதை உடைத்த சூழல் ஆகியவற்றைப் பற்றி பேசின. இந்தப் பகுதி, தற்போதைய சூழலில் தமிழகம் இதை எதிர்கொண்டு வெற்றிபெறும் சாத்தியங்கள் குறித்துப் பேசுகிறது.

இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் மக்களைக் காக்கும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிவாரணத்துடன் கூடிய முழு அடைப்பு, படுக்கை, உயிர்வளி உற்பத்தி போன்ற உடனடி அடிப்படை மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொண்டே தடுப்பூசிக் கொள்முதலுக்கான அறிவிப்போடு நீண்டகால தேவையை மனதில் கொண்டு தடுப்பூசி உற்பத்திக்கான அறிவிப்பையும் செய்துள்ளது. இது மக்களின் மனதில் அரசைப் பற்றிய நம்பிக்கையை அதிகரித்து, நாளை தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கும்போது அரசின் அழைப்பை ஏற்று மக்கள் வரும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகள் ஒன்றியத்தின் அறிவியல் தரவுகளின் அடிப்படையிலேயே இருக்கிறது. அந்தத் தரவுகள் முழுமையற்றதாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருக்கும் நிலையில் அதன் அடிப்படையிலான தமிழகத்தின் இந்தக் கிருமிக்கு எதிரான போர், வெற்றியை நோக்கி இட்டுச் செல்லுமா? அடுத்து மூன்றாவது அலை வருவது தவிர்க்க இயலாதது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேபோல அடுத்த கிருமியின் உருமாற்றம் என்னவாக இருக்கும் என்பதும் தற்போது ஊகிக்க இயலாது. இந்த நிலையில் தமிழக அரசின் தடுப்பூசி போட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை நிச்சயம் குறிப்பிட்ட அளவு பலன் தரும் என்றாலும் இந்த இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அலை எனத் தொடரும் சுழற்சியில் இருந்து மீட்குமா?

அப்படியே தமிழகம் தடுப்பூசி மூலம் பாதுகாப்பான சூழலை எட்டினாலும் தடுப்பூசி போடாத மற்ற பகுதிகளில் இருந்து வரும் நோய்த்தொற்று இங்கே பரவுவதைத் தடுக்க இயலாது. உலகின் எல்லோரும் பாதுகாப்பான நிலையை எட்டாமல் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என வல்லுநர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் கிருமி மாற்றம் கண்டு மனிதர்களிடம் மீண்டும் மீண்டும் பரவுவது தவிர்க்க இயலாதது. அப்படி என்றால் நாம் எப்படித்தான் இந்தச் சூழலை எதிர்கொள்வது?

பெருநிறுவனங்களின் நலனை முன்னெடுக்கும் பெருநிறுவனங்களை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்ட ஒன்றியம், மக்களிடம் நம்பகத்தன்மையை அரசுக்கான மதிப்பையும் தகுதியையும் இழந்துவிட்டது. அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அறிவியல் ஆய்வு நிறுவனங்களைச் சுதந்திரமாக இயங்க அனுமதிக்காமல் ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும், பெருநிறுவனங்களின் நலனுக்கு ஏற்பவும் செயல்பட நிர்பந்தித்துக் கொண்டிருப்பதன் மூலம் அவை அறிவியல் பார்வையற்ற உண்மையைத் தேடும் ஆர்வமற்றவையாக மாறி மதிப்பிழக்க செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிவியல் பார்வையற்ற நிறுவனங்களின் தாசனாக மாறிவிட்ட ஒன்றியத்தின் மேற்பார்வையில் கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை மட்டுமே தமிழகம் நம்பி இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அது இந்தக் கிருமிக்கு எதிரான போரில் நமக்குத் தோல்வியையே பரிசாக அளிக்கும்.

தமிழக அரசு அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதோடு மருத்துவர்கள், அறிவியல் ஆய்வறிஞர்களை உள்ளடக்கிய ஓர் ஆலோசனைக் குழுவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவியல் அறிஞர்களின் மேற்பார்வையில் இயங்கும் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அங்கே நடைமுறையில் பயன்படுத்தப்படும் நோய் தீர்க்கும் மருந்துகளின் பயன்பாட்டை சோதித்தறிவதோடு உலகின் மற்ற பகுதிகளில் உள்ள அறிவியலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் அனுபவங்களையும் ஒத்துழைப்பையும் பெற்று புதிய தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.

சீனாவின் ஆரம்ப காலத்தில் அதன் பாரம்பரிய மருந்துகளை அறிவியல் முறையில் சோதனை செய்து அதன் பயன்பாட்டைக் கண்டறிந்து நோயை குணப்படுத்தினார்கள். தற்போது இருக்கும் மருந்துகளோடு நமது சித்த மருத்துவ மருந்துகளை நம்பிக்கை சார்ந்து பயன்படுத்தாமல் ஆய்வகத்தில் சோதனை செய்து உறுதி செய்துகொண்டு பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும்.

அதோடு கியூபாவின் Interferon Alfa 2B மருந்தைப் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது. அதன்பிறகு அதுகுறித்த செய்திகள் மறைந்து போனது. திடீரென கடந்த மாதம் சைடஸ் கேடில்லா நிறுவனம் இந்த மருந்தை சோதித்து முள்முடி கிருமிக்கு எதிராகப் பயன்படுத்த ஒப்புதல் பெற்று இருக்கிறது (இணைப்பு காண்க).

அப்போதே சீனாவிலும் அமெரிக்காவிலும் ஒன்றுக்கும் உதவாதது என வீசி எறியப்பட்ட ரெம்டிசிவரை இதுவரையிலும் இந்தியாவில் பயன்படுத்தி வந்ததும் அந்த அமெரிக்க நிறுவனம் கல்லா கட்டியதும் ஒன்றியத்தின் ‘அறிவியல் வழிப்பட்ட’ அணுகுமுறைக்கு மிகச் சிறந்த உதாரணம்.

அடுத்து தமிழகத்தில் எந்தெந்த வகை முள்முடி தொற்று கிருமிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பது குறித்துத் தெரியாமல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காற்றில் கம்பு சுற்றுவதற்கு ஒப்பானது.

ஆகவே அரசு உடனடியாக கிருமிகளின் மூலக்கூறுகளின் தொகுப்பைக் (Genome Sequence) கண்டறியும் வசதிகளை அமைக்கவிருக்கும் ஆய்வகத்தை ஏற்படுத்தி, மாவட்ட வாரியாக சுற்றிக்கொண்டிருக்கும் கிருமிகளின் வகைகளை வகைப்படுத்தி பண்பியல்புகளை ஆய்ந்தறிய வேண்டும்.

தற்போது அறிவிக்கப்படும் பொது முடக்கம் என்பது இந்தக் கிருமி எப்படிப் பரவுகிறது என்ற எந்த அனுமானமும் இன்றி எல்லா வகையிலும் பரவுகிறது என்ற அறிவியல் ஆதாரம் அற்ற அனுமானத்தின் அடிப்படையில் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறோம்.

கடந்த தொற்று பரவலின் இறுதியில் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் 20 விழுக்காட்டினர் மட்டுமே இந்தக் கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றதாக ஒன்றியத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறுவது என்ற உத்தியை மேற்கொண்ட ஸ்வீடன் நாட்டில் இதன் அளவு 40 விழுக்காடு. இந்தியச் சூழலை கணக்கில்கொள்ளும்போது இது பல கேள்விகளை எழுப்புகிறது.

ஆகவே, கிருமியின் பண்புநலன்கள் குறித்த ஆய்வுகளோடு இந்தக் கிருமி பரவும் தன்மை, பரவும் விதம், பெருநகரம், நகரம், கிராமம் சார்ந்த வேறுபாடுகள், நபர்கள் இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெரும் அளவு, அது உடலில் நீடித்து நிற்கும் காலம் ஆகியவை குறித்து அறிந்து கொள்வது அவசியமானது. அதனடிப்படையில் கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், தடுப்பூசி திட்டத்தையும் செயல்படுத்துவதுமே சரியான வழிமுறையாக இருக்கும்.

சீனாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மாபெரும் தரவுகளையும் (Big Data), செயற்கை நுண்ணறிவையும் (AI) கொண்டு கிருமி பரவலையும், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அந்த நாட்டைத் தவிர்த்து வேறு எங்கும் இதுபோன்ற முயற்சி செய்யப்படவில்லை.

முகநூல், கூகுள், அமேசான், மைக்ரோ சாஃப்ட் ஆகிய நிறுவனங்களிடம் இந்த தொழில்நுட்பங்கள் இருந்தாலும் இதுபோன்ற எந்த தீர்வையும் முன்வைக்காதது தனிமனித சுதந்திரத்தை மீறமுடியாததின் காரணமாகத்தான் எனக் கருதவியலாது. ஸ்நோடன் கதை தெரிந்தவர்கள் இதை நம்ப மாட்டார்கள். இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.

1. இது வணிக மதிப்பற்றது; லாபம்தரக் கூடியது அல்ல. 2. இந்த முடக்க காலத்தில் பெருலாபமீட்டியவை இந்த இணையதளத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள். இப்படியான உருவாக்கமும் முடக்கத்தைக் குறைக்கும் முயற்சியும் இவர்களின் வணிக லாபத்தைக் குறைக்க கூடியவை. தங்களது வணிக வளர்ச்சியை இப்படியான உருவாக்கங்களைச் செய்து தாமே குறைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கவியலாது.

இந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இந்தியாவில் நடைமுறை பயன்பாட்டில் இருக்கிறது. நம்மிடம் ஏராளமான மென்பொருள் கணிப்பொறியாளர்கள் இருக்கிறார்கள். Simulation, Modelling நுட்பம் அறிந்த நிதியமைச்சர் இருக்கிறார். ஆகவே அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள், கணிப்பொறியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து நச்சுக்கிருமி பரவும் முறையைக் கண்டறிய உதவும் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.

இதன்மூலம் பெறப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் கிருமி பரவலைத் தடுக்கவும், பரவும் முக்கிய வழிகளைக் கண்டறிந்து இடையீடு செய்து பரவலைக் குறைக்கவும், மக்களுக்கு வாழ்வாதார இழப்பை ஏற்படுத்தும் பொது முடக்கத்துக்குப் பதிலாக, பகுதி அளவிலான முடக்கத்தைச் செயல்படுத்தவும், கிருமியைப் பரப்பும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி செலுத்தி, பரவலுக்கான வாய்ப்புகளை அடைக்கவும் பயன்படும்.

மூலக்கூறுகளின் தொகுப்பாய்வு மூலம் தமிழகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கிருமி வகைகளைக் கண்டறிந்த பிறகு, இவற்றுக்கு எதிராக சந்தையில் உள்ள எல்லா தடுப்பூசிகளின் திறனையும் சோதித்தறிந்து அதனடிப்படையில் தடுப்பூசிகளை வாங்கி அந்தந்த பகுதிகளில் உள்ள கிருமி வகைக்கு ஏற்ற தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்.

தற்போதைய தடுப்பூசி பற்றாக்குறை உற்பத்தி சார்ந்தது. இந்த நிலையில் எந்த நிறுவனத்தையும் தங்களது தடுப்பூசியின் திறனை உறுதி செய்து கொடுக்க சொல்லி தமிழகம் வற்புறுத்த இயலாது. அதேநேரம் சரியான தடுப்பூசியைத்தான் செலுத்துவோம் என முடிவெடுக்கவும் முடியாது. கிடைக்கும் தடுப்பூசியைச் செலுத்தி கிடைக்கும் பலனைப் பெறுவது என்பதை தவிர வேறு வழியில்லை. அதேநேரம் இதுவே போதுமென இறுமாந்திருக்கவும் முடியாது. இதை, ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதாகத்தான் கொள்ள முடியும்.

தமிழக அரசு தடுப்பூசி கொள்முதலுக்கு உலக அளவிலான டெண்டரை வெளியிட்டு இருக்கிறது. உண்மையில் சீனாவைத் தவிர எந்த நாடும் ஏற்றுமதி செய்யும் நிலையில் இல்லை. உள்ளூரிலும் தற்போதைய சூழலில் வாங்கிக்கொள்ளும் வாய்ப்புமில்லை. உடனடி தேவைக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ஒன்றியம் அனுமதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதற்கு எல்லையில் நிலவும் பதற்றச் சூழலை காரணமாக முன்வைப்பார்கள்.

தற்போதைய மருத்துவக் கருவிகளில் 80 விழுக்காடும், மருந்து உற்பத்திக்குத் தேவையான 70 விழுக்காடு மூலப்பொருட்களும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது. ஆனால், தடுப்பூசி என்று வந்தாலோ, தரவுகள் சார்ந்த இணையப் பொருட்கள் என்றாலோ உடனே எல்லைப் பிரச்சினை, தேசிய பாதுகாப்பு எனக் கதை அளப்பார்கள். இந்தத் தடுப்பூசி, தரவுகளுக்கான தேசியம் என்பது பெருநிறுவனங்களின் நலனைக் காப்பவை. மக்களின் நலனை பலிகொடுப்பவை.

ஆதலால் ஒன்று, ஒன்றியமும் அதை இயக்கம் மேற்குலகமும் தமிழகத்தின் அடிப்படை ஆய்வகக் கட்டமைப்பை உருவாக்கவும், அவசர தடுப்பூசி தேவையை நிறைவு செய்து கொடுக்கவும் முன்வர வேண்டும். இல்லையேல் இதுவரையிலும் ஒன்றியம் மேற்குலகை வழிக்குக் கொண்டுவர ஹோவாவெய் நிறுவன அனுமதியைத் துருப்பு சீட்டாகப் பயன்படுத்தியதைப் போல தமிழகம் இவர்கள் இருவருக்கும் எதிராக அதே சீன துருப்புச் சீட்டை பயன்படுத்துவதைத் தவிர வேறு இல்லை.

அடுத்து, தடுப்பூசி உற்பத்திக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு சுயசார்பான திசையில் பயணிக்க முற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இயற்கையான நோய்த்தொற்றின் மூலமாகவோ, செயற்கையான தடுப்பூசியின் மூலமாகவோ ஏற்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு ஆற்றல் 3-8 மாதங்கள் மட்டுமே உடலில் இருக்கும். பயோ என்டெக் தடுப்பூசியின் ஆற்றல் ஆறு மாதங்களுக்குப் பிறகு குறைய ஆரம்பிப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் கூறி இருக்கிறார். அதனால்தான் அமெரிக்கா தேவைக்கும் அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி குவித்து வைத்து இருக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்தியச் சந்தைக்கு வரும் வாய்ப்போ, மிகக்குறைவான வெப்பநிலை சேமிப்பு வசதிகளைக் கோரும் இதைக் கொண்டுபோய் சாதாரண மக்களுக்குக் கொடுக்கும் சாத்தியமோ இல்லை.

இதற்கு அடுத்த மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் புதிய கிருமி வகைகளுக்கு எதிரான குறைவான திறனும் இவற்றின் உற்பத்தி பெருக்கமும் நமது அவசர தேவையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பில்லை. அதேசமயம், புதிய வகை கிருமிக்கு ஏற்ப அதன் தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்கும் சாத்தியங்கள் குறித்து எந்த செய்திகளும் இல்லை. அப்படியான சூழலில் எஸ்ஐஐ தற்போதைய கோவிஷீல்டு உற்பத்தியை விடுத்து அமெரிக்காவின் நோவோவேக்ஸ் உற்பத்திக்கு முயற்சி செய்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

முக்கியமாக, புதிதாக உற்பத்தி செய்ய முயலும் தமிழகம் இந்த முன்னேறிய தொழில்நுட்பத்தைக் கொண்டு எவ்வளவு வேகமாக உற்பத்தியைத் தொடங்க முடியும் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. இரண்டு தவணைகளில் வெவ்வேறு தடுப்பு மருந்தைச் செலுத்தும் ரகசிய தொழில்நுட்பத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கும் ரெட்டிஸ் லேப் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில்தான் உற்பத்தி செய்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என்கிறது.

அதோடு உலகமே தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க முனையும் நிலையில் உற்பத்திக்கான மூலப்பொருட்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்களும் தமிழகத்தின் முயற்சிக்குத் தடையாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தமிழகம் உற்பத்தி செய்ய ஏற்ற தொழில்நுட்பம் மரபான நோய் கிருமியைக் கொள்கலனில் வளர்த்து செயலிழக்கம் செய்து உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பை பெரும் மரபான தொழில்நுட்பமே சாத்தியமானதாகத் தோன்றுகிறது. முக்கியமாக இது ஏற்கனவே இந்தியாவில் இந்திய ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருப்பதால் தொழில்நுட்பத்துக்கு மற்ற நாடுகளை நம்பி இருக்க தேவை இல்லை. ஒன்றியமும், பாரத் பயோடெக்கும் ஒருவழியாக எல்லோரிடமும் இந்த நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டு விட்டன.

இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தியத் தடுப்பூசியும் சீன தடுப்பூசியும் ஒரே அளவு திறனை (78%) பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திறன் தேவையான 50 சதவிகிதத்தை விட அதிகமானது; போதுமானதும்கூட. தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரித்து, இந்த திறனில் உள்ள குறைபாட்டை நம்மால் சரிசெய்து கொள்ள முடியும்.

தமிழகம் இந்தத் தடுப்பூசி உற்பத்தியைப் பெருநிறுவனங்களைப் போல ஒரே இடத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து பல இடங்களில் குறைவான அளவில் (Smallscale Reactors) உற்பத்தி செய்யும் உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தும் சாத்தியங்கள் குறித்து ஆராய வேண்டும். இது பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல அவசியமான தடுப்பூசிகளைத் தகுந்த கலன்களில் நிரப்புவதற்கான மூலப்பொருள் தேவையைக் குறைக்கும். தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல தேவையான போக்குவரத்து கட்டமைப்புக்கான தேவையையும் குறைக்கும்.

இது செலவு பிடிப்பதாகவும் பெருநிறுவனங்களுக்கு லாபகரமானதாகவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழக மக்களுக்கு முக்கியமான மேன்மையைப் பெற்றுத்தரும். அது யாதெனில், எதிர்காலத்தில் இந்தக் கிருமி என்ன வகையான மாற்றம் காணப் போகிறது. எந்தெந்த தடுப்பூசிகள் அதற்கு எதிராக வலுவான எதிர்ப்புத் திறனை கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அந்தச் சூழலில் நாம் எளிமையாகத் தடுப்பூசியை மாற்றி உற்பத்தி செய்து உடனடியாக மக்களுக்குக் கொடுத்து அவர்களைக் காக்க வழிவகை செய்யும். தற்போது நடைமுறையில் உள்ள பல தடுப்பூசியிலும் இவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டவையே. சீன நிறுவனத்தால் இரு மாதங்களில் மாற்றி அமைக்க முடியும் என்றால் நம்மால் மட்டும் ஏன் செய்ய முடியாது?

இந்த அறிவியல் ரீதியிலான கிருமியையும் அதன் பண்பு நலன்களையும் கண்டறிதல், அது பரவும் வேகம், வீரியம் மற்றும் பரவும் விதத்தை ஆராய்ந்தறிதல், அதற்கேற்ற மருந்தை உருவாக்குதல், பின்பு சரியான தடுப்பூசி கொள்கையைப் பின்பற்றுதல், தேவையான அளவு தடுப்பூசியை உருவாக்குதல் என்பது மட்டுமே இந்தக் கிருமிக்கு எதிரான போரில் தமிழகம் வென்றுவிடலாம் என்று எண்ணவியலாது. இவை எல்லாவற்றையும்விட அரசின் செயல்பாடுகளோடு மக்களின் ஒத்துழைப்பையும் பெறுவது அவசியமானது. அரசு, மக்கள் ஆகிய இருவரும் இணைந்தால் மட்டுமே இந்த போரில் நாம் வெற்றிபெற முடியும்.

தமிழக முதல்வர் இதை உணர்ந்து தானே செயல் விளக்கப்படமொன்றில் தோன்றி மக்களிடம் பேசி சரியான வழிமுறைகளைப் பின்பற்ற சொல்வது சிறப்பான நடவடிக்கை. ஆனால், கிருமி என்றால் என்னவென்றே தெரியாத மக்களிடமும், எந்த அறிவியல் வழிபட்ட சிந்தனையும் இல்லாத நமது சமூகத்தில் இது பெரிய அளவில் பலன் தராது.

இதற்கு இருக்கும் ஒரே தீர்வு, மக்களை அறிவியல்மயப்படுத்துவது. வெற்றிநடை போடும் தமிழகமே விளம்பரத்தைப் பரப்பியது போல, அதற்கு எதிராக மக்களின் மனதை துல்லியமாகப் புரிந்து கையில் காதில் உள்ளதை கழற்றிப்போடும் விளம்பரத்தை உருவாக்கியது போல பல காணொலிகளை உருவாக்கி பரப்ப வேண்டும்.

கண்ணுக்குத் தெரியும் ஆபத்து விளைவிக்கும் சிங்கம் புலி போல, ஆபத்தை விளைவிக்காத மான், மயிலைப்போல் கண்ணுக்குத் தெரியாத ஆபத்தான கிருமிகள் இருக்கிறது என்ற அளவில் அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லப்பட வேண்டும். கண்ணுக்குத் தெரியும் விலங்குகளுக்கு எதிராக நம்மைக் காப்பதுபோல கண்ணுக்குத் தெரியாத ஆபத்து விளைவிக்கும் இந்த கிருமிகளுக்கு எதிராக எப்படி நம்மைக் காத்துக் கொள்வதை என்பதைச் செயல்முறை ரீதியில் எடுத்துக்காட்டுகளுடன் அனுபவ பகிர்வுகளுடன் எடுத்துரைக்கப்பட வேண்டும்.

இந்த அறிவியல் பரப்புதல்கள் மட்டுமே மக்களை அரசுடன் இணைந்து செல்ல உதவாது. இந்திய சமூகத்தை அரசுடன் கொண்டு செல்ல மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் அரசியல் தலைவர், அவரின் அறைகூவலுக்குச் செவிமடுக்கும் மக்கள், அவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் அரசியல் ஆளுமைகொண்ட தலைவரும் வேண்டும். ஒருபுறம் மக்களின் அறிவியல் பார்வையை மேம்படுத்திக் கொண்டே மறுபுறம் அறிவியல் வழியில் மேற்கொள்ளப்படும் அரசின் செயல்பாடுகள், அதன் காத்திரமான பலன்களைக் காணும் மக்கள் தமிழக முதல்வரின் பின் அணிவகுத்து இந்தப் போரில் வெற்றிபெற வைப்பார்கள்.

அதோடு அரசின் அனைத்து முயற்சிகளும், திட்டங்களும், செய்திகளும் எல்லா இடங்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையிலும் எல்லா ஊர்களிலும் அரசு அலுவலர்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்கி அவர்கள் தரும் களநிலவரத்தை, செய்திகளைத் தரவுகளாக (Data) பதிவு செய்து பகுதிவாரியாக பகுத்தறிந்து சரியாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பெருந்தொற்று முடிந்தவுடன் இப்படிக் கட்டியெழுப்பிய கட்டமைப்புகளை அப்படியே விட்டுவிடாமல் ஓர் ஒருங்கிணைந்த உயிர்த்தொழில்நுட்பவியல் (Biotechnology Park) வளாகம் ஒன்றை நிறுவி, அங்கே மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வுக்கூடங்கள், மருத்துவக் கருவிகளை உருவாக்கும் பொறியியல் ஆய்வுக் கூடங்கள், மருந்துகளை உருவாக்கும் மருந்து ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றான இதில் தமிழகம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி, இதிலிருந்து குறைந்தது ஒரு நூறு சிறு குறு நிறுவனங்களாவது உருவாக இலக்கு நிர்ணயித்துச் செயலாற்ற வேண்டும்.

இது எதிர்காலத்தில் இதுபோன்ற பேராபத்துகளை எதிர்கொள்ளவும் தமிழகத்துக்குத் தேவையான மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவக் கருவிகள், நோய்த்தடுப்பு முறைகளை உருவாக்கி நம்மை சுயசார்போடும் சுயமரியாதையோடும் வாழவைக்கும்.

தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

<பகுதி 1 > / <பகுதி 2 > / <பகுதி 3 >

நிறைவடைந்தது.

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 26 மே 2021