மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

கொரோனா கால மரண விதிகள்!

கொரோனா கால மரண விதிகள்!

மு.இராமனாதன்

கௌரி அம்மாவுக்கு 102, கி.ராஜநாராயணனுக்கு 98, சுந்தர்லால் பகுகுணாவுக்கு 94... இவர்கள் தழுவியது நன்மரணம். எஸ்.பி.ஜனநாதனுக்கு 61, விவேக்குக்கு 59, கே.வி.ஆனந்த்துக்கு 55... இவர்களை வந்தடைந்தது அகால மரணம். கொரோனாவால் மரிப்பவர்களுக்கு நேர்வது இவை இரண்டுமல்ல; அவை துர்மரணம்.

நாசிகளில் புகுந்து நுரையீரலை ஆக்கிரமிக்கிறது வைரஸ். பாதிக்கப்பட்டவர்களில் ஏழெட்டுப் பேரில் ஒருவருக்குத்தான் படுக்கையும், பிராண வாயுவும், தீவிர சிகிச்சையும், செயற்கைச் சுவாசமும் தேவைப்படுகிறது. ஆனால், நமது மருத்துவத்துறை இப்படியான சூழலுக்குத் தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. வீடுகளிலும் ஊர்திகளிலும் மருத்துவமனைத் தாழ்வாரங்களிலும் மூச்சடங்கியவர்கள் பலர். மருத்துவமனையில் சேர முடிந்தும் போராடித் தோற்றவர்கள் பலர். மரணம் சம்பவிக்கும் முறைகளால் மட்டுமல்ல, அதன் எண்ணிக்கையாலும் கொரோனா மரணங்கள் துர்மரணங்களாகின்றன.

கொரோனா செய்த விதி

மே 18 அன்று இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் – 4,529. கடந்த ஒன்றரை வருடங்களில், ஒரு நாளில் ஒரு நாட்டில் நேர்ந்த அதிகபட்ச கொரோனா மரணம் இதுதான். நாள்தோறும் மரணச் செய்திகள் நம்மை வந்தடைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்களது நட்பு வட்டத்திலும் உறவு வட்டத்திலும் சாவுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சாவைத் தொடரும் சடங்குகள், ஊர்வலங்கள், நல்லடக்கம் என எல்லா விதிகளையும் கொரோனா மாற்றி எழுதி வருகிறது. இப்போது யாரும் இழவு வீட்டுக்குப் போக வேண்டாம். கேதம் கேட்க வேண்டாம். சாவைக் கொண்டாடியதும், வாய்விட்டு அரற்றியதும், மாரடித்துப் புலம்பியதும் ஒரு காலம். இது கொரோனா காலம். மரணங்களை அறிவித்தல்களில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டிய காலம்.

குஜராத்தின் ராஜ்காட் நகரிலிருந்து வெளியாகும் ‘சந்தேஷ்’ என்கிற நாளிதழில் ஏழாம் பக்கம் மரண அறிவித்தல்களுக்கானது. இப்போது அவர்களுக்கு ஒரு பக்கம் போதவில்லை. ஏப்ரல் மாதத்தின் கடைசி நாட்களில் இந்த அறிவித்தல்கள் ஏழு பக்கங்களை எடுத்துக்கொண்டன.

மாண்டவர்களை வீடு வரை, வீதி வரை தொடர்வதெல்லாம் இப்போது சாத்தியம் இல்லை. காடு வரைகூட அனுமதி பெற்றவர்கள் மட்டுமே போகலாம்.

கடைசி ஆசை...

நமது சமூகம், நீத்தாரைக் கொண்டாடுகிற சமூகம். இங்கே எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையின் அந்திமத்தில் ஓர் அவா இருக்கும். அது அவர்களின் அடக்கம், நல்லடக்கமாக இருக்க வேண்டும் எனும் அவா. இதில் பெரியவர் - சிறியவர் பேதமில்லை.

அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் செல்வாக்கோடு திகழ்ந்த கருணாநிதிக்கும் ஒரு கடைசி ஆசை இருந்தது. அது அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ள வேண்டும் என்பது. Karunanidhi - A Life என்கிற நூலில் அதன் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.

ஆண்டு 2010. ஒரு பின்னிரவு. புதிய சட்டமன்ற வளாகம். கருணாநிதி ஓர் அரசுச் செயலரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். திடீரென அண்ணா சமாதிக்குப் போகலாம் என்கிறார் கருணாநிதி. போகிறார்கள். கடற்கரையில் அமைதியும் தென்றலும் தவழ்கின்றன. நீண்ட மௌனத்துக்குப் பிறகு கருணாநிதி கேட்கிறார்: ‘செயலரே, அண்ணா சமாதியில் என்ன வாசகம் இருக்கு தெரியுமா?’

செயலருக்குப் பதில் தெரியும். அவர் சொல்கிறார்... ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’. கருணாநிதி தலையசைக்கிறார்.

அடுத்துச் சொல்கிறார்: ‘எனக்கும் இங்கேதான் உறங்கணும்’.

2018 ஆகஸ்ட் 8, அன்று அவரது ஆசை நிறைவேறியது. ஆனால், அது எளிதாக நடந்துவிடவில்லை. அதற்காகச் செத்த பிறகும் அவர் ஒரு சட்டப்போர் தொடுக்க வேண்டியிருந்தது.

பெரிய மனிதர்களைப் போலவே எளிய மனிதர்களுக்கும் கடைசி ஆசை இருக்கும். என் உறவில் ஒரு மூதாட்டி இருந்தார். ஒரு பழைய வீட்டில் நினைவுகளுக்குத் துணையாகத் தனியாக வாழ்ந்தார். அவருக்கு எட்டுப் பிள்ளைகள். அவரவருக்கு வசதிப்படும்போது தாயாருக்கு நூறோ, இருநூறோ கொடுப்பார்கள். ஒரு குடும்ப விசேஷத்தில் அவர் பேத்திகளுள் ஒருவர் மூதாட்டியோடு பேசிக்கொண்டு இருந்தார். நான் அருகில் இருந்தேன். அப்போது பேத்தி, பாட்டிக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தார். மூதாட்டி பெற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வேளை கஞ்சி குடிக்கப் பிள்ளைகள் தரும் பணம் போதுமானது என்று சொல்லிவிட்டார். அவருக்கு யார் மீதும் புகார் இல்லை. ஆனால், அவருக்குப் பேத்தியிடம் ஒரு வேண்டுகோள் இருந்தது. அவர் கண் மூடியதும் பேரப்பிள்ளைகள் எல்லாம் பட்டம் சுற்றி வந்து அவரை நன்றாகத் தூக்கிப்போட வேண்டும். மூதாட்டி காலமானபோது அந்தப் பேத்தி பூனேயிலிருந்து வந்தார்.

ஆன்டிகனியின் அவலம்

கண்ணியமான நல்லடக்கம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பண்டு காலம் முதல் இருந்து வரும் அவா. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க நாடகம் ஆன்டிகனி. அரசன் கிறயன் கொடுங்கோலன். ஓர் உள்நாட்டுப் போரில் சோதரர்கள் எட்டோசிலசும் பாலினிசிசும் தமக்குள் மோதி உயிர் துறக்கிறார்கள். கிறயன் முன்னவனின் உடலுக்கு நல்லடக்கமும் பின்னவனின் உடலைப் போர்க்களத்திலேயே போட்டுவிடுமாறும் ஆணையிடுகிறான். அது ஓர் அவமானகரமான தண்டனை. எந்த மனிதனின் உடலும் நரிகளுக்கும் கழுகுகளுக்கும் இரையாகலாமா? அதிலும் ஒரு போர் வீரன்? அவன் சகோதரி ஆன்டிகனி, அரசக்கட்டளையை மீறி சகோதரனை நல்லடக்கம் செய்கிறாள். கிறயனின் சினத்துக்கு ஆளாகிறாள். அவளை உயிருடன் குகைக்குள் தள்ளி வாயிலை அடைக்கிறான் கிறயன். ஆனால், தெய்வங்கள் ஆன்டிகனியின் பக்கம்தான் நிற்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணியமான நல்லடக்கம் உரிமைப்பட்டதல்லவா? கிறயன் அதை எங்ஙனம் மறுக்கலாம்? துயர் மேல் துயர் வந்து அவன் சுயம் அழிந்து கொள்வதாக முடியும் அந்தத் துன்பியல் நாடகம்.

ஆனால், இந்தக் கொரோனா காலத்தில் கிரேக்கத் தெய்வங்களே அனுமதித்த நல்லடக்கம் பலருக்கும் வாய்ப்பதில்லை. மருத்துவமனையில் உயிர் நீத்தவர்களின் உடல் நேரடியாக மயானத்துக்கு வருகிறது. மூன்று அல்லது நான்கு பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். உடலம் இருக்கும் பொதியின் மேற்பகுதி திறக்கப்பட்டு, தங்கள் அன்பானவரின் முகத்தை மட்டும் எட்டத்திலிருந்து பார்க்கச் சிலருக்கு வாய்க்கிறது. இன்னும் சிலருக்குச் சிதைக்கு எரியூட்ட அனுமதி கிடைக்கிறது. பல வட இந்திய மயானங்களின் முன் அவசர ஊர்திகள் தங்கள் முறைக்காக வரிசை கட்டி நிற்கும் படங்கள் சமூக ஊடகங்களை அலைக்கழிக்கின்றன. கூட்டாக எரிக்கப்படும் சடலங்களைப் பொசுக்கும் நெருப்பு அலைபேசித் திரைகளுக்கு மேலே உயர்கிறது. அதனினும் பெரிய அவலம் கங்கையின் கரங்களில் மிதக்கிறது.

கங்கையில் மிதக்கும் கண்ணியம்!

கங்கைக் கரையில் வாழும் பலருக்கும் அந்த நதி ஒரு மாதா. ஆண்டாண்டுக் காலமாய் கோடிக்கணக்கான மக்களின் அஸ்தியை உட்செரித்து ஓடிக்கொண்டிருக்கும் புனித நதி. ஆனால், இதே நதியில் ஊதிப் பெருத்த சடலங்கள் மேலெழும்பும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பத்து, நூறு, ஆயிரம் என்று கணக்குச் சொல்கிறார்கள். எரியூட்டும் செலவு கொரோனா காலத்தில் பன்மடங்கு அதிகரித்துவிட்டது; விறகுகளின் விலை ஏறிவிட்டது; மயான ஊழியர்களும் புரோகிதர்களும் தங்கள் ஊதியத்தை உயர்த்திக் கேட்கிறார்கள்; அதைக் கொடுப்பதற்கு வகையற்ற வறிய உறவினர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் சடலங்களை ஆற்றில் அமிழ்த்திவிடுவதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன.

எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் பூதவுடல் ‘நன்றாகத் தூக்கிப் போடப்பட வேண்டும்’ என்கிற அவா இருக்கிறது. கொரோனா காலத்தில் மரித்தவர்களின் உறவுகளைக் கைபிடித்து நெஞ்சணைத்துத் தேற்ற முடியவில்லை. சடங்குகள் குறைந்துவிட்டன. இறுதி ஊர்வலங்கள் சுருங்கிவிட்டன அல்லது இல்லாமலாகி விட்டன. இவை கொரோனா உருவாக்கிய விதிகள். இதை மீற முடியாது. அதே வேளையில், ஒவ்வொரு மனித உயிரும் கண்ணியத்துடன் வழியனுப்பப்பட வேண்டும். ஒரு சமூகம் சடலங்களை நீரில் மிதக்க அனுமதிக்குமானால், அது மரித்தவர்களின் கண்ணியத்தை மட்டுமல்ல, அந்தச் சமூகத்தின் கண்ணியத்தையே குலைக்கிறது. ஆன்டிகனி தனது சகோதரனுக்குச் செய்த கண்ணியமான நல்லடக்கத்தை, இந்த இக்கட்டான வேளையில், சமூகம் தனது எல்லா சகோதரர்களுக்கும் செய்ய வேண்டும்.

அறிவியலே துணை!

இந்தச் சூழலிலிருந்து மீள்வதற்கு அறிவியல் மட்டுமே துணை நிற்கும். மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி சிலர் கொரோனா தேவிக்குக் கோயில் கட்டுகிறார்கள். சிலர் மேனியெங்கும் சாணத்தைப் பூசிக்கொள்ளச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் எல்லா முறிவுகளும் அதர்வண வேதத்தில் இருப்பதாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நாம் அறிவியலைக் கைகொள்ள வேண்டும்.

கிறயன் சுயம் அழிந்தான். ஆனால், கொரோனாவை நாம்தான் அழிக்க வேண்டும். அதற்குத் திரள் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டும். 70 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசிப் போட்டாலன்றி அது உருவாகாது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஏடறிந்த வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெருந்தொற்றுக்கு எதிராகப் பல்வேறு தடுப்பூசிகளை உருவாக்கியிருக்கிறது அறிவியல். ஆனால், வணிகர்களும் அரசியலர்களும் அது பரந்துபட்ட மக்களைச் சென்றடைவதற்குத் தடையாக உள்ளனர். நமது அரசுகளும் அறிவியலாளர்களும் வணிகர்களும் ஒற்றைக்கட்டாக எழுந்து நிற்க வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு சமூகமாகத் தடுப்பூசியைப் பயன் கொள்ள முடியும். அது தாமதமாகும் ஒவ்வொரு நாளும் வைரஸ் பரவும், உருமாறும், புதிய அலைகள் எழும். ஆகவே, தடுப்பூசியை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுவரை முகக்கவசமும், தனிமனித இடைவெளியும், கைசுத்தமும், காற்றுவெளியும் தற்காலிகக் கேடயங்களாக இருக்கும்.

கொரோனா இல்லாதொழிந்த பிறகு வரலாற்றாசிரியர்கள் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை ஆவணப்படுத்துவார்கள். அப்போது இறுதி ஊர்வலங்களும் ஈமச் சடங்குகளும் நல்லடக்கமும் எப்படிச் சுருங்கிப் போயின என்று எழுதுவார்கள். அதை வருங்காலம் விளங்கிக்கொள்ளும். அந்தக் குறிப்புகளில் கங்கையில் மிதந்த சடலங்கள் மேலெழும்பவே செய்யும். ஆனால், அதையும் மீறி இந்தியச் சமூகம் எங்ஙனம் கொரோனாவை வெற்றி கொண்டது என்பதே வரலாற்றின் பக்கங்களில் பிரதானமாக இருக்க வேண்டும். அதற்கு நமது அரசுகளும் அறிவியலர்களும் மக்களும் ஒன்றிணைய வேண்டும்; எல்லோரும் அறிவியலை ஏந்திக்கொள்ள வேண்டும்.

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected])

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 26 மே 2021