மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

நாடு தழுவிய போராட்டம்: மோடி பதவியேற்ற கறுப்பு தினம்!

நாடு தழுவிய போராட்டம்: மோடி பதவியேற்ற கறுப்பு தினம்!

நாடு முழுவதும் நாளை (மே 26) போராட்டம் நடத்த விவசாயிகள் விடுத்த அழைப்புக்கு திமுக உட்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் நாளை பிரதமராக மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம் என்று போராட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைவதையொட்டி, நாளை (மே 26) நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.

அன்றைய தினம் போராட்டம் நடத்தவும் கோரியுள்ளது. இந்த நிலையில், அவர்களின் போராட்ட அழைப்புக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சோனியா காந்தி (காங்கிரஸ்), தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதாதளம்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), மு.க.ஸ்டாலின் (திமுக), உத்தவ்தாக்கரே (சிவசேனா), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்) ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “விவசாயிகள் போராட்டத்தின் ஆறு மாத நிறைவையொட்டி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா விடுத்த போராட்ட அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, விவசாயிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கடந்த 12ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறோம்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மே 26ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து வீடுகளிலும், வாகனங்களிலும் கறுப்புக் கொடியை அன்றைய தினம் விவசாயிகள் ஏற்றித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வர். மே 26ஆம் தேதி தினமானது பிரதமராக மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே அன்றைய தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தோம். இந்தப் போராட்டத்துக்கு அனைத்து மாநில விவசாயிகளும் ஆதரவு தர வேண்டும். பஞ்சாப், ஹரியானாவில் உள்ள அனைத்து வீடுகள், கடைகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் கறுப்புக் கொடியை ஏற்ற நான் கோரிக்கை விடுக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

செவ்வாய் 25 மே 2021