மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ஓபிஎஸ்-சி.வி.சண்முகம் சந்திப்பு: அதிமுகவில் என்ன நடக்கிறது?

ஓபிஎஸ்-சி.வி.சண்முகம் சந்திப்பு: அதிமுகவில் என்ன நடக்கிறது?

அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது முதல் அவருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்திருக்கிறது.

அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று இவர்கள் இருவருமே கூறி வந்தாலும், இரட்டைத் தலைமை என்பதை கைவிட்டு ஒற்றைத் தலைமையை நோக்கியே இருவரும் தனித்தனியாக நகர்ந்து வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமையின் கருத்தாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்தார். அதன் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தானும் தனியாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்தார். மேலும் அதிமுகவின் அதிகாரபூர்வ சமூக தளப் பக்கங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் நிகழ்ச்சிகள், அறிக்கைகள் வெளியிடப்படுவதில்லை. ஐடி விங் தலைமை நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடியின் ஆட்கள் என்பதால்தான் இந்த நிலை.

இப்படி ஒவ்வொரு நிலையிலும் இருவருக்குமான மோதல்கள் தீவிரமாகி வரும் நிலையில்....ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் கைலாசப்பட்டி பண்ணை வீட்டில் இருந்தபடியே மண்டலக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் இப்போது வந்திருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக முன்னாள் சட்ட அமைச்சரும் விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் வட மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் 23 ஆம் தேதி தேனி கைலாசப்பட்டி சென்று ஓ.பன்னீர் செல்வத்தோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வெளியில் காரணம் என்று சொல்வது ஓபிஎஸ்சின் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு துக்கம் விசாரிக்க என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட லட்சுமணனிடம் தோல்வியைத் தழுவினார். லட்சுமணன் ஏற்கனவே அதிமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்தவர். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவர் பின்னால் சென்ற முதல் மாவட்டச் செயலாளர் லட்சுமணன். ஆனால் அதன் பின் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்புக்குப் பின் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஓபிஎஸ்சிடம் நேரடியாக சென்று சொல்லிவிட்டே, திமுகவுக்குச் சென்றார். விழுப்புரத்தில் நின்று அதிமுகவில் இருந்தபோதே தனக்கு போட்டியாளராக இருந்த சி.வி. சண்முகத்தைத் தோற்கடித்தார்.’

இந்த பின்னணியில் சி.வி. சண்முகத்தோடு சிதம்பரம் எம்.எல்.ஏ. கே.ஏ. பாண்டியன், புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, திண்டிவனம் எம்.எல்.ஏ. அர்ஜுனன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் இருந்து வரும் சி.வி. சண்முகம் வட மாவட்ட அதிமுக நிர்வாகிகளோடு ஓபிஎஸ் சை சந்தித்திருப்பது அதிமுகவில் அதிர்வுகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வட மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசினோம்.

“அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோதே நடக்கும் தலைமைக் கழக கூட்டங்களில் சி.வி. சண்முகம் அதிரடியாக பேசுவார். எடப்பாடி பழனிசாமியின் சமுதாய ரீதியாக சில மூவ்களை கூட அவர் கட்சியினரிடமே வெளிப்படையாகக் கூறி கண்டித்துள்ளார். சி.வி. சண்முகத்துக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அதை எடப்பாடி பழனிசாமிக்காக கஷ்டப்பட்டு ஜீரணித்துக் கொண்டு தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றார். இதை சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. ஆனால் கட்சிக்காக செய்வதாக கூறினார்.

ஆனால் பாமகவுடன் கூட்டணி வைத்தும் வட மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரிய அளவில் வாக்குகள் பரிமாற்றம் ஆகவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தன் வீடு தேடி வந்த அதிமுக நிர்வாகிகளிடம், ‘நான் வளர்றதை பாமக விரும்பலை. அதிமுக வட மாவட்டங்களில் அதிகம் ஜெயிக்குறதையும் பாமக விரும்பல. அதனாலதான் சரியா வேலை செய்யலை. சேலத்துல பாமக உழைச்ச அளவுக்கு இங்க ஒர்க் பண்ணலை. அவங்க தோத்தாலும் பரவாயில்லை. அதிமுக ஜெயிச்சுடக் கூடாதுனு பாமகவுல சிலர் திட்டம் போட்டிருக்காங்க’ என்று வெளிப்படையாக சாடினார். மேலும் தனது தோல்வியில் எடப்பாடி தரப்பில் இருக்கும் சிலருக்கும் பங்கிருப்பதாகவும் சண்முகம் வட்டாரத்தில் பேசினார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஓபிஎஸ் சை சந்தித்து வட மாவட்டங்களில் பாமக கூட்டணியால் ஏற்பட்ட விளைவுகளைப் பட்டியல் போட்டிருக்கிறார் சி.வி. சண்முகம். கூட்டணிக் கட்சியை கூட அதிமுகவின் உட்கட்சி அரசியலுக்கு ஏற்றபடி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் சண்முகத்தின் குற்றச்சாட்டு. சி.வி.சண்முகம் வெற்றிபெற்றுவிட்டால் அதிமுகவில் வன்னியர் சமுதாயத்தின் முக்கிய பிரதிநிதியாக இடம்பெறுவார் என்பதால் சண்முகத்தின் தோல்விக்குப் பின்னால் உட்கட்சி சதி இருக்கிறது’ என்றும் ஓபிஎஸ்சுக்கு ஏற்கனவே தகவல்கள் சென்றிருந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இப்போது சண்முகம் -ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

இதேபோல பிற மண்டலங்கள் டெல்டா, மத்திய மண்டல, சென்னை மண்டல நிர்வாகிகளையும் விரைவில் ஓபிஎஸ் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்புகள் எடப்பாடி பழனிசாமியை டென்ஷன் ஆக்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள்.

-வேந்தன்

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

செவ்வாய் 25 மே 2021