மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

கொரோனா இறப்புகள் மறைக்கப்படுகிறதா?: மா. சுப்பிரமணியன்

கொரோனா இறப்புகள் மறைக்கப்படுகிறதா?: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விவரங்களை அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யவும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், தூத்துக்குடி மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய இன்று அம்மாவட்டத்திற்குச் சென்றிருக்கிறார். திருச்செந்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

அவருடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோரும் உடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமப்புற மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்.

ஊரடங்கு காரணமாக கொரோனா குறையத் தொடங்கியிருக்கின்றது. மேலும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 36 ஆயிரத்திலிருந்து 34,800ஆக பாதிப்பு குறைந்திருக்கிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருப்பு பூஞ்சை தொடர்பாக ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு 2 நாள்களில் கருப்பு பூஞ்சை குறித்த ஆய்வைத் தொடங்கவுள்ளனர்.

தமிழகத்துக்கு வந்த 80 லட்சம் தடுப்பூசிகளில், 70 லட்சம் செலுத்தப்பட்டிருக்கிறது. 18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு ரூ.46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தடுப்பூசியே போடாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு , ரூ.3.50 கோடி மதிப்பில் உலகளாவிய டெண்டர் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு தற்போது ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு குறித்த உண்மையை வெளிப்படையாகச் சொன்னால்தான் மக்களிடையே சிறு பயமும், விழிப்புணர்வும் ஏற்படும். எனவே கொரோனா தொற்று உயிரிழப்புகளில் எந்த ஒளிவு மறைவும் இல்லை” என்று தெரிவித்தார்.

நேற்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவப் பிரிவு பேராசிரியர் டி.நேரு தூத்துக்குடி டீனாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 25 மே 2021