மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

பகுதி 3: தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

பகுதி 3: தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

ஒன்றியத்தின் தோல்விக்கு காரணம் புதிய கிருமியா? அஸ்ட்ரா ஜெனிகாவா? அறிவியல் பார்வையற்ற செயல்பாடுகளா?

கடந்த பகுதிகள் சந்தை சார்ந்த நிறுவனங்களின் தன்மை, அத்தியாவசிய சேவைகளில் அவர்களை அனுமதிப்பதில் உள்ள ஆபத்து, தடுப்பூசி தொழில்நுட்பத்தையும், சந்தையையும் கட்டுப்படுத்த செய்த அரசியல், அதில் இந்தியாவின் பங்கு குறித்து பேசின. இந்தப் பகுதி அப்படி உருவாக்கப்பட்ட முற்றொருமை அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் குறைவான திறன், பக்கவிளைவு ஏற்படுத்திய பின்னடைவு ஆகியவற்றால் உடைந்தது, அதனால் இந்தியா கண்ட தோல்வி, இதைப் பயன்படுத்தி வெற்றி கண்ட சீனா, இதன் பிறகும் அறிவியல் பார்வையின்றியும் உண்மையை எதிர்கொள்ளும் திறனின்றியும் இருக்கும் ஒன்றியத்தைப் பற்றி பேசுகிறது.

இதற்கிடையில் இளிச்சவாய் இந்தியர்களைவிட புத்திசாலியான முள்முடி தொற்று தன்னை உருமாற்றிக்கொண்டு பரவ ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே இதன் வீரியத்தை எடுத்துசொன்ன அறிவியலாளர்களின் எச்சரிக்கைகள் புறம்தள்ளப்பட்டன. ஐந்து மாநிலத் தேர்தல்களும், கும்பமேளாவும் கோலாகலமாக நடத்தப்பட்டன. கடந்த ஆண்டே இந்தியா பேரவலத்தைச் சந்திக்கும் என்று கருதி ஏற்பட்ட நடுக்கம், வீரியம் குறைந்த கிருமியின் கருணையினாலும் பல கோடி அடித்தட்டு மக்களைப் பட்டினியில் தள்ளிய பொதுமுடக்கத்தினாலும் தப்பித்ததில் இந்தியா சற்று ஆறுதல் அடைந்து இருந்தது.

ஆனால், இந்த முறை கிருமியும் கருணை காட்டவில்லை; ஒன்றியமும் இந்த முறை மேட்டுக்குடி மக்களைக் கைவிட்டது. பொருளாதாரப் பலன்களை மனதில் கொண்டு பொதுமுடக்கத்தை அறிவிக்கவில்லை. விளைவு, நாடெங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றன. சுவாசமின்றி மக்கள் சரியும் காட்சிகளைக் காண முடியாமல் கண்கள் மூடி கலங்குகின்றன. மருத்துவமனைகளில் படுக்கை இன்றி உதவிதேடி அலையும் மக்களின் வேதனைகள் மனதை பிசைகின்றன. உற்றார் உறவினரை நினைத்து உறக்கமின்றி இரவுகள் கடக்கின்றன. ஆனால், ஒன்றியத்திடம் இருந்து ஒரு சின்ன அசைவைக்கூட பார்க்க முடியவில்லை. உலக நாடுகளிடம் இருந்து வந்த உதவிப்பொருட்களைக்கூட வேகமாக தேவைப்படுவோரிடம் சென்று சேர்க்காமல் தேங்குகின்றன.

கோவிஷீல்டில் என்ன பிரச்சினை?

இதைத் தடுத்து நிறுத்த, மீண்டும் பொது முடக்கமும் வேகமாக மக்களுக்குத் தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க வேண்டிய சூழலில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு. இந்த நிலையில் தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்க வேண்டுமென சீரம் மையத்தின் தலைவர் பூனவல்லா கோரிக்கை வைக்கிறார். அமெரிக்கா இந்தக் கோரிக்கையை ஏற்க மறுக்கவே, சீனா உடனடியாக உதவ தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியாகிறது. உடனே பைடன் தலையிட்டு கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் உதவிப்பொருட்களை அனுப்புவதாகவும் அறிவிக்கிறார். இதன் பிறகு நாங்கள் கோரியது கோவிஷீல்டுக்கான மூலப்பொருட்களை அல்ல; நோவோ வேக்ஸுக்கானது. ஏன் அமெரிக்கா தொடர்ந்து கோவிஷீல்டுக்கான மூலப்பொருட்களை விடுவிக்கிறது எனப் புலம்புகிறார் பூனவல்லா.

அதோடு தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் நாங்கள் அல்ல. அரசு எங்களுக்கு ஆணையோ, முன்பணமோ கொடுக்காத நிலையில் எங்களால் உற்பத்தியைப் பெருக்க முடியாது என்கிறார். சரி, இந்தியா தடுப்பூசி வாங்க முற்படவில்லை என்றாலும் உலகம் முழுக்க தடுப்பூசிக்கான பற்றாக்குறை இருக்கிறது. வறிய நாடுகளுக்கு உலக சுகாதார மையத்தின் வழியாக விநியோகிக்கும் கோவேக்ஸ் அமைப்புக்குக் கொடுக்க வேண்டிய ஆணைகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் உற்பத்தியை விரிவாக்கவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. அதோடு இந்தியா சுயமாக தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் நிலையில் எஸ்ஐஐ அஸ்ட்ரா ஜெனிகாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெருமளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிலையில் ஏன் இந்தியா தென்னாப்பிரிக்கவுடன் இணைந்து காப்புரிமையை விலக்க கோருகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அஸ்ட்ரா ஜெனிகாவைக் கண்டு அஞ்சும் மக்களும் விலகும் அரசுகளும்...

அஸ்ட்ரா ஜெனிகாவின் தடுப்பூசி பிறழ்வடைந்த தென்னாப்பிரிக்காவில் இனம் காணப்பட்ட கிருமிக்கு எதிராக 0-10 விழுக்காடு திறனை மட்டுமே கொண்டிருப்பதாகக் கூறி, அந்த நாடு இந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியது இங்கே கவனம்கொள்ளத்தக்கது. அதோடு இந்த தடுப்பூசியின் ரத்தம் உறைதல் பிரச்சினை காரணமாக இதை எடுத்துக்கொள்ள பல நாடுகளின் மக்கள் தயங்குகிறார்கள். அமெரிக்கா இதுவரையிலும் இதற்கு அனுமதியும் வழங்கவில்லை. தான் வாங்கி வைத்த இந்தத் தடுப்பூசிகளை பயன்படுத்தவும் இல்லை. இதைப் பெருமளவு பயன்படுத்திய இங்கிலாந்து இந்த ரத்தம் உறைதல் அரிதினும் அரிதானது. பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் வயதினருக்கு இந்தத் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது. இதுவரையிலும் நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதில்லை என அறிவித்திருக்கின்றன. ஹாங்காங், தான் வாங்கிய தடுப்பூசிகளைப் பயன்படுத்தாமல் வைத்திருந்து வீணாகும் நிலையில் மற்றவர்களுக்குக் கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தியாவின் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்வினைகளின் காரணமாகவும் ஒன்றியம் உற்பத்தியைப் பெருக்க இரு நிறுவனங்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு இனி மாநிலங்களே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் எனவும், நிறுவனங்கள் விலையைத் தாமே தீர்மானித்துக்கொள்ளலாம் எனவும் அறிவித்துவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மற்ற நாடுகளின் தடுப்பூசிகளைச் சந்தைப்படுத்தவும் அனுமதித்திருக்கிறது. இந்தியாவின் இரு நிறுவனங்களும் உற்பத்தியைப் பெருக்க ஆரம்பித்திருக்கின்றன. வரும் ஜூன் மாதம் மேலும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தியாகி சந்தைக்கு வரும். கூடவே மற்ற நாடுகளின் தடுப்பூசிகளும் இந்திய சந்தைக்கு வரும்.

சீன - ஜெர்மனி கூட்டும் இந்தியாவின் தோல்வியும்...

இந்தியாவில் இரண்டாவது அலை சுழன்றடிக்க ஆரம்பித்தவுடன் இதை எதிர்கொள்ள தெற்காசிய நாடுகளின் கூட்டத்தை சீனா கூட்டியது. அதில் இந்தியாவையும் பங்கேற்க அழைத்திருந்தது. எதிரி பலகீனமடைந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி தன்னை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கிலும் ஏவிவிட்டவனை எதிர்க்கும் அதேவேளை, எதிரியின் பக்கம் நிற்கும் இந்தியாவைத் தன்பக்கம் இழுக்கும் அரசியல் தந்திரம் இது. இந்தியா இதில் பங்கேற்கவில்லை. மற்ற நாடுகள் பங்கேற்றன. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியை நிறுத்திவிட்டு சீனாவின் தடுப்பூசிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனம் சீனாவின் ஷாங்காயில் இயங்கும் நிறுவனத்துடன் இணைந்து சீனாவில் அதன் தடுப்பூசிகளைச் சந்தைப்படுத்த இருப்பதாகவும் இது குறைவான திறனுடைய சீனாவின் தடுப்பூசியின் திறனை உயர்த்தும் வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் சீன அரசின் இதழான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி தரவுகளை ஆய்வு செய்து அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. பல நாடுகளிலும் இனி எந்தத் தடையுமின்றி சீன தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவில் Automatic Route முறையின்கீழ் இனி இந்தியச் சந்தைக்குள் நுழைய தடையேதும் இல்லை. இந்தச் சீன தடுப்பூசிக்கான அனுமதி இதுவரையிலும் அறிவியல் காரணமாகத்தான் அனுமதிக்கப்படாமல் இருந்ததா? இப்போது அனுமதித்திருப்பது அரசியல் காரணங்கள் அற்றதா? ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் பரஸ்பரம் சந்தையைத் திறந்துவிட்டுக் கொண்டதன் தொடர்ச்சியா? இந்திய தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பற்ற சூழலின் விளைவா? மற்ற நாடுகளின் மக்கள் அஸ்ட்ரா ஜெனிகாவின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள காட்டும் தயக்கம் காரணமா? இப்படி பல கேள்விகள் இங்கே எழுப்புகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்த தடுப்பூசிக்கான முற்றொருமை அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. இவர்களைப் புறம்தள்ளி சீனாவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் ஜெர்மனி, சீனச் சந்தையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறது. உலகச் சந்தையில் சீனா, தான் தவிர்க்க இயலாத ஆற்றலாக தன்னை நிறுவி இருக்கிறது. 2016 பணமதிப்பிழப்புக்குப் பிறகு புதிய அரசியல் பொருளாதாரப் பாதையில் முன்னேறி சென்று கொண்டிருந்த இந்தியாவின் முதல் சறுக்கல் இது. உலக அரங்கில் தன்னை தவிர்க்க முடியாத ஆற்றலாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்ற இந்தியாவின் முதல் தோல்வி இது. இது முதல் தோல்விதான்; முடிவானது அல்ல. இந்தியா முன்னேற எந்த அடிப்படை கட்டமைப்பையும் கட்டி எழுப்பாமல் அவசரகதியில் அனைத்தையும் அடைய முனையும் இந்திய ஆளும்வர்க்கம் இதுபோன்ற இன்னும் பல தோல்விகள் அடைவதைத் தவிர்க்க இயலாது.

புதிய கிருமிக்கு எதிரான தடுப்பூசிகளின் திறன்?

இது எல்லாவற்றையும் மீறி இன்னும் இரு மாதங்களில் இந்தியாவில் பரவலாகத் தடுப்பூசி கிடைக்க ஆரம்பித்தாலும் அது, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. புதிய பிறழ்வடைந்த இந்தியாவில் கண்டறியப்பட்ட நச்சுக்கிருமி வகைக்கு எதிரான இந்தியத் தடுப்பூசிகளின் திறன் குறித்த முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வருகின்றன. இதுவரையிலும் பிரேசில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்திய நாடுகளில் கண்டறியப்பட்ட நான்கு பிறழ்வடைந்த கிருமி வகைகள் கவலை தரக்கூடிய வகைகள் (Variant of Concern) என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. இவை நான்கும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மீறி செல்லும் வாய்ப்பு கொண்டவை.

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தென்னாப்பிரிக்க வகைக்கு எதிராக வினைபுரியும் திறனற்றது என நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட வகைக்கு எதிராகவும் குறைவான திறனுடையது. ஆனால், இந்தத் தடுப்பூசி நோய் முற்றலை தடுக்கும் எனக் கூறுகிறார்கள். மற்ற பைசர், மாடர்னா தடுப்பூசிகளின் திறன் இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை பிறழ்வடைந்த கிருமிக்கு எதிராக குறைவான திறனையே பெற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எஸ்ஐஐ நிறுவனத்தலைவர் நோவோவாக்ஸ் தென்னாப்பிரிக்க வகைக்கு எதிராக ஐம்பது விழுக்காட்டுக்குக் குறைவாக இருந்தாலும் பலனளிக்கக் கூடியது என ஒரு நேர்காணலில் தெரிவிக்கிறார். இந்த மொத்த வெளிவந்த செய்திகள் நமக்குத் தெரிவிப்பது, தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருக்கும் நச்சுக்கிருமி வகைக்கு எதிராகக் குறைவான திறனுடையவை.

என்னதான் தீர்வு?

குளோபல் டைம்ஸ் இதழுக்கு நேர்முகம் கொடுத்த பயோ என்டெக் நிறுவன தலைவர், இந்தியாவில் கண்டறியப்பட்ட கிருமி வகைக்கு எதிரான தற்போதைய தடுப்பூசியின் குறைவான திறனை மூன்று மாதங்களில் மேம்படுத்த முடியும் என்கிறார். மரபான தடுப்பூசி முறையைப் பயன்படுத்தும் சீனா, இரண்டு மாதங்களில் புதிய வகைக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க முடியும். ஏனெனில் கொள்கலனில் எந்த கிருமியை விடுகிறோமோ அந்தக் கிருமியே வளர்ந்த பிறகு செயலிழப்பு செய்து தடுப்பூசியாகச் செலுத்தப்படுகிறது. விதையாக (Seed) உள்ளே விடப்படும் கிருமியை மாற்றுவது எளிதானது என சீன உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் குழப்பமான சூழலில் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளே இந்தியாவைப் பெருந்தொற்றில் இருந்து காக்கும் என நியூயார்க் டைம்ஸில் கருத்து வெளியிட்ட கிருமிகளின் மூலக்கூறுகளின் தொகுப்பைக் (Genome Sequence) கண்டறிய அமைக்கப்பட்ட துறையின் தலைவர் ஷாஹித் ஜமீல் எந்த காரணமும் கூறாமல் திடீரென பதவி விலகி உள்ளார்.

வெளிப்படைத் தன்மையற்ற ஒன்றியத்தின் செயல்பாடுகள்!

உலக நாடுகள் எல்லாம் உடனடியாக தங்களது நாட்டின் பரவும் கிருமியின் தன்மையை அறிய உடனுக்குடன் மூலக்கூறுகளின் தொகுப்பைக் கண்டறியும் நிலையில் இந்தியாவில் இதுவரையிலும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான நோயர்களின் மாதிரிகளே இவ்வாறு மூலக்கூறுகளின் தொகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வெளியான செய்திகளின்படி பஞ்சாபில் இங்கிலாந்து வகை கிருமி பெருமளவிலும், மற்ற பகுதிகளில் இங்கிலாந்து வகையும் தென்னாப்பிரிக்க வகையும் குறைவான அளவிலும் இந்தியா வகை பெருமளவிலும் இருப்பதாகத் தெரிகிறது. பரந்து விரிந்த பெரும் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் எந்த விதமான கிருமிகள் பரவி வருகின்றன என்பது குறித்து தற்போது முழுமையான தகவல் இல்லை.

இதுவரையிலும் எந்த அறிவியல் தரவுகளையும் ஒன்றியம் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. 800 அறிவியலாளர்கள் அந்தத் தரவுகளை வெளியிட கோரியும் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவிஷீல்டின் ரத்த உறைதல் பிரச்சினையை இப்போதுதான் ஒன்றியம் ஒப்புக்கொண்டு 10 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டால் அதில் ஒரு நபருக்கும் (0.61) குறைவாக வருகிறது என தற்போதுதான் வெளியில் சொல்கிறது. உண்மையை மக்களிடம் சொல்லி விளக்கி, பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பதிலாக மூடிமறைத்த ஒன்றியத்தின் செயல் மக்களிடம் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை உருவாக்கி இருக்கிறது. இந்த வெளிப்படை தன்மையற்ற ஒன்றியத்தின் செயல்பாடுகள் அதன் மீதும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அறிவியல் நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்திருக்கிறது.

தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

<பகுதி 1 > / <பகுதி 2 >

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

செவ்வாய் 25 மே 2021