மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்: கமல்

உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்: கமல்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில், களம் கண்ட மக்கள் நீதி மய்யம் தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

கட்சியிலிருந்து விலகியவர்கள், மநீம-வில் ஜனநாயகம் இல்லை, சர்வாதிகாரம் இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்குக் கடிதம் எழுதினர். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்நிலையில் உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன் என்று கூறி வீடியோ வெளியிட்டிருக்கிறார் கமல்.

அதில், “மாற்றம் என்றும் மாறாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட நாம் ஏற்றிய கொடி பறந்து கொண்டிருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தைத் தேடுபவர்களாய் நாம் உள்ள வரையில் நம் கொடி புத்தொளியுடன் பறந்து கொண்டே இருக்கும். மூச்சு உள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன்.

நாம் ஒரு சிறு விதைதான். இந்த விதையை வீழ்ந்தது; வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கு ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணை பற்றிவிட்டால் அது விரைவில் காடாகும். நாளை நமதாகும்.

உயிரே... உறவே... தமிழே... ஊர் அடங்கினாலும் வாய் அடங்காது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக் கூடாது.

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்குச் சர்வாதிகாரமாகத் தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளைக் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சக்கட்டமாகத் தெரிந்திருக்கிறது.

பிறகு காலச் சூழலில், கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைப்பதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும் அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்குப் பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை. தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீகக் கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகத் தெரிகிறது. அது ஜனநாயகமே அல்ல.

நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாகத் தூர்ந்து போய்விடாது என்பது தற்கால தாகசாந்திக்காகக் குடிக்க வந்தவர்களுக்குப் புரியாது. 40 ஆண்டுக்காலம் இறைத்து நீர் பார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும், உற்சாக ஊற்று ஊறிக் கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம். இதுதான் நம் மூலம். இதுதான் நாம் செய்யப் போகும் விவசாயம் என்று களமிறங்கிவிட்ட நமக்கு நம் நீர்நிலையைச் சுற்றித்தான் வேலை.

நாடோடிகள், யாத்திரிகர்கள் அப்படி அல்ல. ஓரிடம் தங்கமாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரைத் தங்குவார்கள். பிறகு வெளியேறி விடுவார்கள். சில நேரம் திரும்பவும் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்து கொண்டிருக்கும். ஆனால் மீண்டும் நம் ஊரணியை, நீர்நிலையை அவர்கள் அசுத்தப்படுத்த விடமாட்டோம் எனும் உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையுடன் தொடர வேண்டும். அதுவே நாம் தரும் செய்தியாக உலகம் அறிய வேண்டும். மற்றபடி, தம் தவறுகளை மறைக்கச் சிலர் எழுப்பும் பொய்க்குற்றச்சாட்டுகளை நாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. காலம் பதில் சொல்லும்.

உண்மை எல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்கச் சொல்கிறீர்களா? என வெகுண்டு குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரே... உண்மை பேசு... உறவே! வாதாடு... என் அருமை தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும்.

கட்சி உள்கட்டமைப்பைத் தனி மனிதர்கள் தங்களது ஆதாயத்துக்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும்.

உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள். நம் கொள்கையில் என்றும் தெளிவும் பாதையில் நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

திங்கள் 24 மே 2021