மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மறைவு!

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மறைவு!

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று (மே 24) உயிரிழந்தார்.

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. திரை, அரசியல் பிரபலங்களும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. பாலகிருஷ்ணன். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக் கிழமை அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன்(75) இன்று உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “ மதிமுக துணைப் பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இளம் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவர், இறுதிவரை மாறாத கொள்கைப் பற்றுடன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துரை பாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மதிமுக துணைப் பொதுச் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன், உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மதிமுகவை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார்.

திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். அதனால், மக்களின் பேரன்பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் எனப் பல தேர்தல்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். வடக்கூர் தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

எத்தனையோ சோதனைகளில், நெருக்கடியான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாகப் பக்கபலமாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறையுற்று சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு, கழகத்திற்கு வந்துள்ள கண்ணீர்ச் சோதனை ஆகும். அவருடைய தொண்டுக்கும் அவர் ஆற்றிய பணிகளுக்காகவும் கட்சி கடமைப்பட்டு இருக்கின்றது. இந்தத் துயரத்திலிருந்து நான் விடுபடுவதற்கு நீண்ட நாள்கள் ஆகும். சிரித்த முகத்தோடு, தொண்டர்களை அரவணைத்து அவர் ஆற்றி வந்த பணி மறக்க இயலாதது.

அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மதிமுக கொடிகளை, மூன்று நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 24 மே 2021