மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

முதலமைச்சர் இபிஎஸ் தலைமையில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: கடம்பூர் ராஜூ

முதலமைச்சர் இபிஎஸ் தலைமையில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: கடம்பூர் ராஜூ

:

தமிழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி நிறைந்த அமாவாசை தினமான கடந்த மே 11 ஆம் தேதி பதவியேற்பு செய்து வைத்தார். அன்று பதவியேற்றுக் கொள்ளாத ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் இன்று (மே 24) பதவியேற்றுக் கொண்டனர்.

234 சட்டமன்ற உறுப்பினர்களில் இதுவரை 233 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு திமுக சட்டமன்ற உறுப்பினர்களான அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், மதிவேந்தன், மற்றும் காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோருக்கு பதவியேற்பு செய்து வைத்தார். அதேபோல அன்று வர இயலாத அதிமுக உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, இசக்கி சுப்பையா ஆகியோரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ஒன்பது உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு செய்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு.

முதலில் அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள், அடுத்து அதிமுக உறுப்பினர்களான கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் பதவியேற்றனர். பொறுமையாக அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன் பின் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். முதல்வரோடு மூத்த அமைச்சர் துரைமுருகனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

பதவியேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ‘ வேகத்தோடும், துடிப்போடும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம்” என்றார் . அவரையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொடர்ந்து என்னை மூன்றாவது முறையாக வெற்றிபெற வைத்த கோவில்பட்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுப்பேன்.

சட்டமன்றத்தில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் முதலமைச்சர் அண்ணன் இபிஎஸ் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வழிகாட்டுதலிலும் சிறப்பாக எதிர்க்கட்சியாக தமிழகத்துக்குப் பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டார் கடம்பூர் ராஜூ.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்லி சொல்லிப் பழகிய கடம்பூர் ராஜூவால் அதை அவ்வளவு லேசாக விட முடியவில்லை. அதனால்தான் எடப்பாடியை இன்னமும் முதலமைச்சர் என்றே அழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த சண்முகையா இன்றும் பதவியேற்புக்கு வரவில்லை. அவருக்கு மட்டும் வேறொரு நாள் சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

திங்கள் 24 மே 2021