qமுதல்வரின் கோரிக்கை: ஏற்கிறார்களா மக்கள்?

politics

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒருவாரத்திற்குத் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா சங்கிலியை உடைக்க இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி முதலே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு குறித்து இன்று (மே 24) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “கடந்த ஊரடங்கின் போது, மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளச் சிறு சலுகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அதை சிலர் தவறாக பயன்படுத்தி வெளியில் சுற்றி திரிந்ததால் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தானாகப் பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாகவே பரவுகிறது. மக்களின் நன்மைக்காகவே முழு ஊரடங்கு என்பதை உணர வேண்டும்.

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்து தான் ஆனால் அதை எடுத்து அருந்தியே ஆகவேண்டும். தமிழக மக்களை கெஞ்சிக் கேட்கிறேன் அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் முழு உடல்நலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். முககவசத்தை முழுமையாக அணியுங்கள்” என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வருவதை காண முடிகிறது.

**சென்னை**

முழு ஊரடங்கு காரணமாகச் சென்னையில் 320 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம், “கொரோனா சங்கிலியை உடைக்க ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என அறிவுறுத்தும் போலீசார், இருமுறை பிடிபட்டால் வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்கின்றனர்.

ஒரு சில இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டாலும், ஒரு சில இடங்களில் மக்கள் வெளியே சுற்றுவதைக் காண முடிகிறது. அண்ணா சாலை பகுதியில், வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் விசாரித்து அனுப்புகின்றனர்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வழக்கம்போல இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டெம்போ, லாரிகள் ஆகியவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

**நெல்லை**

திருநெல்வேலி, டவுன் உட்கோட்டத்தில் போக்குவரத்து குற்றப்பிரிவு துணை ஆணையர் மகேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 80க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

காலை முதலே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசார், அத்தியாவசியமின்றி சுற்றியவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். மாநகர காவல் ஆணையர் சீனிவாசன் கூறுகையில், ஊரடங்கைக் கடைப்பிடிக்கும் பொருட்டு 30 செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

அதுபோன்று நெல்லையில், போலி ஆவணங்கள் மூலம் இ-பதிவு செய்து வெளியே சுற்றியவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

**கடலூர்**

கடலூரில் அவசியமின்றி வெளியே வந்ததால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கடலூர் மாவட்ட எஸ்.பி, ஸ்ரீ அபினவ் கூறுகையில், “ மாவட்டத்தில் 50 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறதா என சரி பார்க்கிறோம். மருத்துவ தேவை, வேலைக்கு செல்பவர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். எனவே, தேவையில்லாமல் வெளியே வந்து போலீசாரிடம் சிக்கிவிட்டுக் கெஞ்சுவது அனாவசியம். தேவையின்றி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது” என்றார்.

திருமண தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், திருவந்திபுரத்தில் இன்று பல திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதுபோன்று போலீசாரின் கெடுபிடியால், பிரதான சாலைகளை பயன்படுத்தாமல், குறுக்கு வழிகளில் மக்கள் வெளியில் சென்று கொண்டுதான் இருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

**மதுரை**

மதுரையிலும் போலி காரணங்கள் கூறி இ பதிவு பெற்று வாகனங்களில் பயணிப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. காளவாசல் சந்திப்பு பகுதியில் அதிகளவு வாகன போக்குவரத்து இருப்பதாகவும், வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எச்சரித்தும் அனுப்புவதாக போலீசார் கூறுகின்றனர்.

மருத்துவமனைக்குச் செல்கிறோம், ஸ்கேன் எடுக்க செல்கிறோம் என்று கூறி வெளியில் சுற்றுவதாக மதுரை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**சேலம்**

பொது முடக்கத்தையொட்டி சேலம் கடைவீதி உட்பட பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேசமயத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பெரியார் மேம்பாலத்தில் தேவையின்றி வந்த வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

**திருப்பூர்**

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் சாலை, புதுமார்க்கெட் வீதி, புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலைகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. திருப்பூரை பொறுத்தவரை வட மாநில இளைஞர்கள் பலர் வேலை செய்கின்றனர். முழு ஊரடங்கை முன்னிட்டு அவர்களுக்கு வேலை இல்லாததால் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில் நிலையங்களுக்குச் சென்று அங்கு காத்திருக்கின்றனர். ரயில் வசதி இல்லாததால், தாங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *