மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

கொரோனாவை விட கொடுமையான வட்டி வைரஸ்!

கொரோனாவை விட கொடுமையான வட்டி வைரஸ்!

கொரோனாவின் முதல் அலையால் ஏற்பட்ட பொருளாதார சரிவு நாட்டிலும் வீட்டிலும் இன்னும் சரியாகாத நிலையில், அடுத்து இரண்டாம் அலையின் ஊரடங்கும் வந்துவிட்டது. அதிக சம்பளம் வாங்கியவர்களுக்கு சம்பளத்தில் குறைப்பு, பலருக்கு வேலை இழப்பு, தொழிலாளர்களுக்கு வேலையில்லாமை என்று காட்டம் காட்டி வருகிறது கொரோனா இரண்டாம் அலை.

இந்த நிலையில்... தமிழகத்தில் செயல்பட்டுவரும் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள், வங்கிகள் சார்ந்த வசூல் ராஜாக்களினால் கடும் வேதனையில் இருக்கிறார்கள். தவணையைத் திரும்பச் செலுத்த சொல்லியும், தவறினால் சொத்துக்களை ஏலம் விடுவோம் என்றும் கடுமையாக மிரட்டி வருகிறார்கள் வசூலிக்கும் தரப்பினர்.

கொரோனா வைரஸ் தொற்றுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசும் பலவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது இதனால் கடந்த 14 மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பு செய்துவருகிறது.

அரசு ஊழியர்களைத் தவிரத் தனியார்த் துறையில் வேலைசெய்பவர்கள், தினக்கூலிக்குச் செல்பவர்கள் என பாதிப்பேர் வேலையை இழந்தும், மற்றவர்கள் பாதி ஊதியத்துக்கும், கால் ஊதியத்துக்கும் வேலை செய்துவருபவர்கள், மிகவும் சிரமத்தில் இருந்துவருகிறார்கள்.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை கொடுக்கமுடியாமல் அன்றாடம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கை, கால் மற்றும் கழுத்தில் இருப்பதை மலிவு விலைக்கு விற்பனை செய்தும், அடகு வைத்தும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறார்கள்.

இந்த நிலையில் வீட்டுக் கடன், கார், பைக் கடன், பர்சனல் கடன், தொழில் கடன் வாங்கியவர்களை வங்கி நிர்வாகம் மிரட்டிவருவதாக மக்கள் புலம்புகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னையன் சொல்கிறார்,“சுந்தரம் பைனாஸில் லாரி ஒன்று வாங்கினேன். லாக்டவுன் போட்டதிலிருந்து லாரி ஓடவில்லை, இதனால் வருமானம் இல்லாமல் இன்சூரன்ஸ் செலுத்தினேன். ஓட்டுநர் மற்றும் கிளினர்களுக்கு அவர்கள் சாப்பாட்டுச் செலவுக்குக் கொடுக்கமுடியாவிட்டாலும் யானை பசிக்குச் சோளப் பொறியாவது கொடுக்கவேண்டும் என்று கடன் வாங்கி கொடுத்துவருகிறேன்.

இதனால் லாரி கடனுக்கான தவணையைச் செலுத்தமுடியவில்லை. அவர்களும் வட்டிக்கு வட்டி எனக் கூட்டுவட்டி போட்டு லாரி மதிப்பைவிட கடன் சுமை அதிகமாகிவிட்டது. தற்போது கடுமையான நெருக்கடிகள் கொடுத்துவருகிறார்கள். கொரோனா வைரஸ்ஸைவிட கொடுமையானது பைனான்ஸ் வைரஸ்” என்றார்.

தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் மாதேஷ் சொல்கிறார்.... “நாடே முடங்கிப் போயிருக்கிறது. இந்த நேரத்தில் நான் பெற்ற வாகனக் கடனுக்கு நெருக்கடிகள் கொடுத்துவருகிறது தனியார் நிதி நிறுவனம், சாப்பிடவே வழி இல்லை. இந்த நேரத்தில் வாங்கிய கடனை எப்படிச் செலுத்துவது? தினமும் அழைக்கிறார்கள் பெரும் தொல்லையாக இருக்கிறது. இதனால் மனதளவில் பாதித்துள்ளேன்” என்றார்..

கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் , “ ஐஒபி வங்கியில் கல்விக் கடன் வாங்கினேன். சரியாகச் செலுத்தி வந்தேன். தற்போது செலுத்தமுடியாத சூழ்நிலையால் தினந்தோறும் நச்சரித்துவருகிறார்கள். அதேபோல் பிஎன்பி வங்கியில் சொத்து அடமான கடன் வாங்கியிருந்தேன். அதற்கு தற்போது வட்டிக்கு வட்டி போட்டு செலுத்தச்சொல்லி நிர்ப்பந்தம் செய்துவருகிறார்கள். என்னைப்போல் எத்தனையோ பேர் இந்தியா முழுவதும் கடன் வாங்கிட்டு வாங்கிய கடனைவிட அதிகமாகச் செலுத்திவருகிறார்கள். இதெல்லாம் நிதியமைச்சருக்கு தெரியாதா?”என்றார் வேதனையுடன்.

தனியார்த் துறையில் வேலை செய்துவரும் ரமேஷ்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) “கடலூர் இந்தியன் வங்கி மெயின் பிராஞ்சில் வீட்டு லோன் மற்றும் கார் லோன் வாங்கிவிட்டேன். கொரோனா வைரஸ் தொற்று முன் வரையில் சரியாக தவணையைச் செலுத்திவந்தேன். கொரோனா தொற்றால் ஊரடங்கு போட்டதிலிருந்து தவணையைச் செலுத்தமுடியவில்லை. அதனால் கூட்டுவட்டி போட்டு வாராக் கடனாக அறிவித்து சொத்துகளை ஏலம் விடப்போகிறோம் என்று நோட்டிஸ் விட்டார்கள். கொரோனா பீதியைவிட வங்கிகளின் வசூல் நெருக்கடிகள்தான் கொடுமையாக இருக்கிறது. இதை யாரும் எந்த ஆட்சியாளரும் கண்டுகொள்ளமாட்டார்கள். பல லட்சம் கோடி வங்கி மோசடி செய்தவர்களை ஊக்குவித்து மறுகடன் தருகிறார்கள். ஆனால் அப்பாவிகள் வீட்டுக்கடன், கல்விக் கடனை வாங்கியதை வட்டிக்கு வட்டி எனக் கூட்டுவட்டி போட்டு வசூலிக்க ஏல நடவடிக்கைக்கு முயற்சித்து வருகிறார்கள்” என்றார்.

பிரதான தேசிய வங்கியின் அதிகாரி ஒருவரிடம் இந்த புலம்பல்கள் குறித்தெல்லாம் கேட்டோம்.

“ தமிழகத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 15 லட்சம் கோடி கடன் தேசிய வங்கிகள் மூலமாக, வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சுமார் 10 லட்சம் கோடி அளவில் கடன் கொடுத்துள்ளது.

2020 மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையில் வட்டிக்கு வட்டி கூட்டு வட்டி போடக்கூடாது தவணையை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் பேங்க் வழிகாட்டுதலின்படி செய்தோம். இந்த அவகாசத்தை நீடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு சிலர் சென்றார்கள். அதற்கு வங்கிகள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி இனி அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து கடனை வசூலிக்க 2021 மார்ச் மாதம்வங்கிகள் தரப்பில் உத்தரவு பெறப்பட்டது.

அதனால் கடன் தவணையை வசூலிக்க சொல்லி மேலிருந்து அழுத்தம் கொடுப்பதால்தான் வீடு வீடாகச் சென்று பயனாளிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். மக்களைப் பார்க்கும்போதும், அவர்கள் கண்ணீர்விடும்போதும் எங்களுக்கே பாவமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்யமுடியும்?” என்றார்.

மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா?

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 24 மே 2021