மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

உளச்சான்றும், கடவுளும்: மக்களாட்சியின் மாண்பினை அறிதல்

உளச்சான்றும், கடவுளும்: மக்களாட்சியின் மாண்பினை அறிதல்

ராஜன் குறை

சமீபத்தில் பதவியேற்ற திராவிட முன்னேற்ற கழக அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பதவியேற்கும்போது கடவுளின் பெயரால் உறுதி மொழியை கூறாமல், உளச்சான்றின்படி, அதாவது மனசாட்சியின் பெயரால் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். மாற்று கட்சிகளை சார்ந்த, குறிப்பாக அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர் கடவுளின் பேரால் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். கேரளாவில் பினரயி விஜயனும் உளச்சான்றின்படி பதவி ஏற்றதாகவும், ஆனால் அவரது இடது ஜனநாயக கூட்டணியை சேர்ந்த சிலர் கடவுளின் பேரால் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், 1967-ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்ற கழக மந்திரி சபை பதவியேற்ற போது அனைவரும் கடவுளின் பெயரால் என்று கூறாமல் உளச்சான்றின்படி என்று கூறியே பதவி ஏற்றார்கள். பதவியேற்கும் முன்னால் பதினெட்டு ஆண்டுகள் தங்களை எதிர்த்து களமாடிய பெரியாரை சந்தித்து வெற்றியை சமர்ப்பித்து ஆசி பெற்றார்கள். பெரியார் இவ்விதம் கடவுள் பேரால் உறுதிமொழி எடுக்காமல் ஒட்டுமொத்த அமைச்சரவையும் உளச்சான்றின்படி உறுதிமொழி கூறி பதவியேற்றதில் அகமகிழ்ந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக அப்போதுதான் ஒரு அமைச்சரவை இவ்வாறு பதவியேற்றதாக கூறப்படுகிறது.

இதன் முக்கியத்துவம் என்ன? கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காமல் விட்டால் அது நாத்திகமா? அது முற்போக்கானதா? கடவுள் நம்பிக்கையே பிற்போக்கானதா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் உளச்சான்றின்படி பதவியேற்கலாமா? சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் கடவுளின் பேரால் பதவியேற்பது அவர்கள் மத உரிமையை பாதுகாக்க

அவசியமானது என்பதால் சரியான அரசியலா?

பதவியேற்பது என்பது ஒரு நிகழ்கலைச் செயல்பாடு (performative act). குறிப்பாக அது ஒரு கூற்றுச்செயல்பாடு (speech act). ஒருவர் இன்னாராகிய நான் என்று தன்னுடைய பெயரைச்சொல்லி உறுதிமொழி வாசகத்தை படித்தவுடன், அவருக்கு அந்த பதவியின் அதிகாரம் வந்துவிடுகிறது. எப்படி சில சமூகங்களில் தாலி கட்டியவுடன் மனைவி என்பது உறுதிப்படுவதாக திருமணச் சடங்குகளில் கருதப்படுகிறதோ, கிருஸ்துவ மதத்தில் சர்ச்சில் பாதிரியாரின் முன் மனைவியாக, கணவராக ஏற்பதாக உறுதிமொழி கூறியவுடன் திருமணம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறதோ, அது போல ஒரு புனிதமான மக்களாட்சி அரசியல் சடங்குதான் இந்த பதவியேற்பு நிகழ்வு. அப்படிப்பட்ட முக்கியமான ஒரு உறுதிமொழியை கடவுளின் பேரால் என்று மேலும் புனிதப்படுத்தாமல், உளச்சான்றின்படி என்று சுயமரியாதையின் அடிப்படையில் எடுப்பதன் முக்கியத்துவம் நிச்சயம் ஆராயத் தகுந்தது.

சமூக வாழ்வில் கடவுள் நம்பிக்கையின் இடம் என்ன?

மானுட வாழ்வை நாம் மூன்று முக்கிய பரிமாணங்களில் பிரித்துப் பார்க்கலாம்.

முதல் பரிமாணம் கற்பிதம். இது நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள், நினைவுகள், கற்பனைகள், சித்திரங்கள், கனவுகள் ஆகிய அனைத்தும் அடங்கியது. சுருக்கமாக அக உலகம் சார்ந்தது.

இரண்டாம் பரிமாணம் இயற்பியல் உலகம் அல்லது பெளதிக உலகம். இது நமக்கு புறத்தேயிருந்து அனுபவமாகும் அனைத்தும்; நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து இயற்கை என நாம் அழைக்கும் பிரபஞ்சம் முழுவதும் இயற்பியல் பரிமாணம்தான் .

மூன்றாம் பரிமாணம் தர்க்கம். இதில்தான் நாம் இயற்கையுடன், பிறருடன் கொள்ளும் உறவு, அதற்கான விதிமுறைகள், மொழி, கூட்டுச்செயல்பாடு, பழக்க வழக்கம், சட்ட திட்டம் எல்லாம் அடங்கும்.

இயற்கையை நாம் முழுவதும் அறிவதில்லை. அது திடீரென்று ஒரு ஆபத்தான கிருமியை உருவாக்குகிறது; அந்த கிருமி தொற்றுவதால் ஏராளமான பேர் மடிகிறார்கள். இயற்கை பெரும் சூறாவளிகளை, நிலநடுக்கங்களை தோற்றுவிக்கிறது. பிரபஞ்சம் நாம் அறிய, அறிய விரிந்துகொண்டே செல்கிறது. நாம் மேற்பரப்பில் வசிக்கும் பூமிப்பந்தின் உட்பகுதியில் எவ்விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் முழுமையாக அறிவது சாத்தியமாக இல்லை. இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நாம் இயற்பியல் உலகம் என்னும் ஆழம் தெரியாத குழியில் கற்பிதம், தர்க்கம் ஆகிய இரண்டு முனைகளிலிருந்து தொங்கும் கயிறுகளை பற்றிக்கொண்டு இறங்குகிறோம் என்றுதான் கூற முடியும்.

மானுட கற்பிதங்களில் மிக முக்கியமானது இறைவன் அல்லது கடவுள். அதை ஒருவர் உறுதியாக பற்றிக்கொள்ளும்போது, இயற்பியல் உலகில் நடக்கும் விபத்துகளை, ஆபத்துக்களை, மரணம் என்ற கருந்துளையை எதிர்கொள்ள வசதியாக இருக்கிறது. இது மானுட சுயத்தின் அக உலகில் நிகழும் பற்று.

மானுட தர்க்கம் என்ற மறுமுனையில் இயற்கையுடனும், மனிதர்களிடமும் கொள்ளும் உறவுகளும், பற்றும் இன்னொரு ஆதாரமாக இருக்கிறது. பயிர்களை விளைவிக்கவும், இயந்திரங்களை உருவாக்கி இயக்கவும், அறிவை சேகரிக்கவும், பிறருடன் உரையாடி சேர்ந்து இயங்கவும் சாத்தியமாகிறது.

நமக்கு முன்னுள்ள முக்கிய கேள்வி, இயற்பியல் உலகின் விபத்துக்களை, அறியப்படாத புதுமைகளை எதிர்கொள்ள அக உலகில் கடவுள் கற்பிதத்தை பற்றிக்கொள்ளும் நாம், சமூகத்தில் மனித உறவுகளை நெறிப்படுத்தவும் அதே கற்பிதத்தைத்தான் பயன்படுத்த வேண்டுமா என்பதுதான்.மதகுரு, பூசாரிகளின் வழிகாட்டுதலில் மானுடம் வெகுகாலம் கடவுள் கற்பிதத்தையே மற்ற இரண்டு பரிமாணங்களிலும், அதாவது இயற்பியல் பரிமாணம், சமூக உறவு பரிமாணம் இரண்டிலும் பயன்படுத்தியது. ஆனால் வரலாறு நெடுகிலும் ஞானிகள், தீர்க்கதரிசிகள் பலரும் சக மனிதரிடம் கொள்ளும் அன்பும், ஜீவ காருண்யமுமே முக்கியம். இறை வழிபாடும், கோயில்களும் முக்கியமல்ல எனக் கூறிவந்துள்ளார்கள். “நட்ட கல்லும் பேசுமோ, நாதனுள்ளிருக்கையில்” என்று கேட்டார் சிவவாக்கியர்.

இறைவனும், இறையாண்மையும்

அக உலகின் பற்றான இறைமைக் கோட்பாடு என்பது, சமூக உறவுகளை நெறிப்படுத்தத் துவங்கியதன் முக்கிய வெளிப்பாடு அரசனை தெய்வத்தின் பிரதிநிதியாக, தெய்வ அம்சமாக பார்ப்பதில் தொடங்கியது. பல்வேறு ஆதிவாசி இனக்குழுக்களில் கூட தலைவன், பூசாரியின் ஆசியுடன்தான் ஆட்சி புரிவான் என்பதை மானுடவியலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். அரசு உருவாக்கத்தில் மதம் எப்போதுமே முக்கிய பங்காற்றி வந்துள்ளது. தமிழில் கோ என்றால் அரசன், ஆனால் கோயில் என்றால் இறைவன் வாழுமிடம். அதேபோல அரசனின் அதிகாரத்தை குறிக்கும் sovereignty என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையாக நாம் இறையாண்மை என்ற பதத்தையே பயன்படுத்துகிறோம். இந்திய இறையாண்மை என்று கூறுகிறோம் அல்லவா? இறையாண்மை என்ற சொல்லில் இறை உள்ளுறைகிறது.

மக்களாட்சி என்பது சமூக உறவுகளை ஆதாரமாகக் கொண்டது. ரூசோ (Jean-Jacques Rousseau, 1712-1778) எழுதிய சமூக ஒப்பந்தம் (The Social Contract, 1762) என்ற நூல் மக்களாட்சி கோட்பாட்டிற்கு முக்கியமான பங்காற்றிய நூலாகும். சமூக ஒப்பந்தம் என்பதன் பொருள் என்னவென்றால் மக்களுடைய ஒத்திசைவில் உருவாகும் அதிகாரம் அவர்களிடையே பகிரப்படுகிறது என்பதுதான். சுதந்திரமான தனிநபர்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்கிறார்கள் என்பதுதான் மக்களாட்சி. அவ்வாறு நிர்வகித்துக்கொள்ள தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களாட்சி அரசில் அதிகாரத்துக்கு வருபவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தானே தவிர பழைய கால இறையாண்மை கொண்ட மன்னர்கள் அல்ல. மக்களாட்சியில் இறையாண்மை என்பது மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் சமூக ஒப்பந்தமாகிய அரசிய நிர்ணய சட்டம் (constitution), அதன் அரூப வடிவாகிய குடியரசு (republican state) ஆகியவற்றிற்கு இறையாண்மை உண்டு. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அமைக்கும் அரசாங்கத்திற்கு (government) இறையாண்மை கிடையாது.

வேறு வார்த்தைகளில் சொன்னால் மன்னராட்சியில் மன்னர்கள் கடவுள் என்ற கற்பிதத்தின் ஆதாரத்தில் இயங்கினார்கள். அதனால் அவர்களுக்கு பூசாரி வர்க்கம், மத குருமார்கள் சபை, மத நிறுவனங்கள் ஆகியவை மக்கள் வாழ்வை சாஸ்திர, சம்பிரதாயங்கள், சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த தேவைப்பட்டன. தங்கள் மாளிகைகளை விட பெரியதாக கோயில்களைக் கட்டினார்கள். அதனால் இறையாண்மை என்பது மன்னரின் உடலில் இருந்தது. அவர் அணியும் கிரீடம், செங்கோலில் இருந்தது.

மக்களாட்சியில் இறையாண்மை அரூப அரசிடமும், தனி நபர் உரிமைகளிலும் பகிரப்பட்டுவிட்டது என்பதால் மக்கள் பிரதிநிதிகள் கடவுளின் அருளால், அதாவது மத ஆதரவால், அரசாங்கத்தை அமைக்கவில்லை. மக்களின் ஆதரவினால்தான் அமைக்கிறார்கள். அதனால் அவர்கள் உளச்சான்றின்படி பதவி ஏற்பதே பொருத்தமானதாகும். இதற்கும் அவர்கள் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை. அவர்களுடைய அக வாழ்க்கையில் அவர்கள் கடவுளை வணங்குவதால் அவர்கள் பதவியேற்கும்போது கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது, மக்கள் பிரதிநிதியாக இயங்க உளச்சான்று அல்லது மனசாட்சிதான் முக்கியமே தவிர கடவுள் அல்ல. அதேபோல அப்படி உளச்சான்றின்படி பதவியேற்பது நாத்திகமோ, கடவுள் மறுப்போ ஆகாது. மக்களாட்சி அரசாங்கத்தில் கடவுளுக்கு வேலையில்லை; அவ்வளவுதான்.

பகுத்தறிவும், இறை நம்பிக்கையும்

பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்புதான் என்பதில்லை. கடவுளின் தேவை எந்த இட த்தில் உருவாகிறது, எங்கே அது தேவையில்லை என்பதையும் பகுத்தறிய வேண்டும். இயற்பியல் உலகத்தில் நடக்கும் எதிர்பாராத விபத்துகள் நோய், மரணம், நம் புலன்களுக்கு எட்டாத அம்சங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள ஒருவருக்கு இருத்தலியல் நோக்கில் கடவுள் நம்பிக்கை தேவைப்படலாம். எவ்வளவோ முற்போக்காளராகவும், நாத்திகராகவும் வாழ்ந்தவர் கூட வாழ்வில் ஒரு சிக்கலான தருணத்தில் கடவுளை வழிபட நேர்வதை நாம் காணலாம். அத்தகைய அகவயப்பட்ட நிலை, தேவை என்பது வேறு. கடவுள் பெயரால் இயங்கும் மத அமைப்புகளின் சட்ட திட்டங்கள், சாத்திரம் சடங்குகள் எல்லாவற்றாலும் சமூக வாழ்வை நிர்ணயித்துக்கொள்வது, அதனால் சுதந்திரமான தேர்வுகளை செய்யமுடியாமல் போவது, மாற்று மதத்தவர்கள் மேல் விரோதம் கொள்வது என்பது வேறு.

இந்தியாவை, தமிழகத்தை பொறுத்தவரை இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் தர்ம சாஸ்திரத்தை அனைவரும் சமூக வாழ்வின் சட்ட திட்டமாக ஏற்பதுதான் என்று காலனீய ஆட்சியில் நிர்ணயிக்கபட்ட து. இந்த தர்ம சாஸ்திரங்கள் ஜாதி படிநிலையை ஏற்றத்தாழ்வை மத நம்பிக்கையின் பேரால் நியாயப்படுத்துபவையாக இருந்தன. இதனால் ஜாதி ஏற்றத்தாழ்வை அகற்றி, சமத்துவ சமூகத்தை அமைக்க சாஸ்திரங்களையும், பார்ப்பனீய சனாதன தர்மத்தையும் எதிர்க்க வேண்டி இருந்தது. அப்படி எதிர்ப்பதற்கு கடவுள் நம்பிக்கை தடையாக இருந்தால் அதையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டி இருந்தது. பெரியார் கடவுள் மறுப்பில் ஈடுபட்டது இதனால்தான். சுயமரியாதை இயக்க காலத்தில் இதை பெரியாரே தெளிவுபடுத்தியுள்ளார். சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளுக்கு குறுக்கே கடவுளை கொண்டுவராவிட்டால் கடவுள் நம்பிக்கையில் தலையிடும் அவசியம் தனக்கு கிடையாது என்று கூறியுள்ளார். பின்னாளில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகுதான் அவர் கடவுள் மறுப்பு பிரசாரத்தை தீவிரப் படுத்தினார். அப்போதும் கூட சமூக வாழ்வில் கடவுள் பெயரால் செய்யப்படும் ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள், புகுத்தப்படும் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்ப்பதற்காகத்தான் அதை செய்தார். அவர் ஒரு சமூக மாற்றத்திற்கான ஒரு இயக்கம் என்பதால் கடவுள் மறுப்பை கடுமையாக பிரசாரம் செய்து மக்களை சிந்திக்கத் தூண்ட முடிந்தது.

பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் உருவானபோது அது சாமானிய பாமர மக்களை அமைப்பாக கட்டியது; தேர்தல்களில் பங்கேற்றது. எளிய உழைக்கும் மக்களால் அவர்களுக்கு மன ஆறுதலைத் தரும் கடவுள் நம்பிக்கையை எளிதில் கைவிட முடியாது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம். அதனால் அண்ணா கடவுள் மறுப்பை வலியுறுத்தாமல் திருமூலரின் “ஓன்றே குலம்; ஒருவனே தேவன்” என்பதை கட்சியின் கோட்பாடாகக் கூறினார். இதன் பொருள் மனித குலம் முழுவதும் ஒன்றுதான், மானுடர்க்கு அப்பாற்பட்ட இயற்கையின் பேராற்றல் என்பதும் ஒன்றுதான் என்பதாகும். அந்த இயற்கையின் ஆற்றலை, தேவனை, பலரும் பல உருவங்களில் வழிபடலாம். ஆனாலும் சாராம்சத்தில் தேவன் என்பது ஒன்றுதான். இப்படிச் சொல்வதன் மூலம் மக்களின் அக வாழ்க்கை பரிமாணத்திற்கு, இருத்தலியல் தேவைகளுக்கு இறை நம்பிக்கை இருந்தாலும், பொது வாழ்வில் சமூக உறவுகளில் குறிப்பிட்ட இறைவனையோ அல்லது மத அமைப்பையோ மையமாகக் கொள்ள வேண்டியதில்லை என்பதே கருத்தாகும். கடவுள் என்ற அகவாழ்வுத் தேவையை அனுமதித்து பொதுவாழ்விலிருந்து அதனை பகுத்து அறிவதையே அண்ணா நடைமுறைப் படுத்தினார் எனலாம்.

இந்த நுட்பம் புரியாமல் தி.மு.க-வை இரண்டு விதமாக விமர்சனம் செய்வார்கள். ஒருபுறம், பெரியாரின் கொள்கையிலிருந்து தி.மு.க விலகிவிட்டது, சமரசம் செய்துகொண்டுவிட்டது என்பார்கள்; மற்றொருபுறம் தி.மு.க நாத்திக கட்சி, அது கடவுள் நம்பிக்கைக்கு, இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்பார்கள். அதே சமயம் தி.மு.க தலைவர்களின் குடும்பத்தினர் கடவுளை வழிபட்டால் கூட விமர்சிப்பார்கள். ஆனால் கட்சி அதன் கோட்பாட்டு பார்வையில் தெளிவாகவே இருப்பதைத்தான் இந்த பதவியேற்பு உணர்த்துகிறது.

சாமானிய மக்களை ஒன்றுதிரட்டி, மக்களாட்சி வழிமுறைகளை பயிற்றுவித்து ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்த திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கம் மக்களாட்சியின் மாண்பை அனைவரும் அறியும் வகையில் உளச்சான்றின்படி உறுதி மொழி கூறி பதவியேற்கும் மரபை தோற்றுவித்து கடைபிடிப்பது என்பது உலக அளவில் பாராட்டிற்குரியது என்றுதான் கூற வேண்டும்.

.

கட்டுரையாளர் குறிப்பு:

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 24 மே 2021