மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை: நியமனப் பின்னணி!

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை: நியமனப்  பின்னணி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (மே 23) அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், “ தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப் பெருந்தகை, துணைத் தலைவராக ராஜேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி உறுதி செய்துள்ளார்.

பொதுவாகவே தேசிய கட்சிகளில் மாநில சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற பதவி முக்கியமானது. காங்கிரஸின் தேசிய தலைமையைப் பொறுத்தவரை கட்சியின் மாநிலத் தலைவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், கட்சியின் மாநில சட்டமன்றக் கட்சித் தலைவருக்கும் கொடுக்கப்படும். மேலும் சட்டமன்றத்தில் அமைக்கப்படும் அரசு கமிட்டிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதில் சட்டமன்றக் கட்சித் தலைவரின் பரிந்துரையே எடுபடும். இவ்வாறு சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற பதவி காங்கிரஸில் முக்கியமானது. அதுவும் கடந்த சட்டமன்றங்களில் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதுவும், அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது.

இப்போது திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிற நிலையில் ஆளுங்கட்சியோடு இணக்கமான சூழல் உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்திருக்கிறார்கள். இந்த பின்னணியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருக்கான போட்டி கடுமையாக இருந்தது.

இப்போது இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மூன்றாவது முறையாக வென்ற இருவர் விஜயதாரணியும், பிரின்ஸும் மட்டுமே. இவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.விஜயதாரணி ஏற்கனவே ஜெயலலிதா படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டபோது கட்சியின் தலைமையை மீறி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் அவருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரிக்கும் பனிப்போர் நடப்பதாக தேர்தலுக்கு முன்பே தகவல்கள் வெளிவந்தன. அதனால்தான் விஜயதாரணியின் பெயர் வேட்பாளர் பட்டியலிலேயே இடம்பெறவில்லை. மீண்டும் அவர் டெல்லி வரை போராடி தன் பெயரை அறிவிக்கச் செய்தார்.

இதனால் சீனியாரிட்டி என்ற அடிப்படையிலும் கட்சியின் மகளிர் அணிக்கு பொறுப்பு வகித்தவர் என்ற அடிப்படையிலும் விஜயதாரணியே இந்த பந்தயத்தில் முந்தினார். ஆனால் விஜயதாரணிக்கு பதிலாக பிரின்ஸ்சை கொண்டுவரலாமா என்ற ஒரு முயற்சியும் நடந்தது. ஒரு கட்டத்தில் குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியிலும் விஜயதாரணியின் ஆதிக்கத்தை உடைக்க பிரின்ஸே ராஜேஷ்குமாருக்கு ஆதரவு அளித்ததாகவும் சத்தியமூர்த்திபவன் வட்டாரத்தில் தெரிவித்தார்கள்.

இரு முறை இதற்காக கூட்டம் நடத்தியபோதும் முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் விஜயதாரணி, பிரின்ஸ் இவர்களில் யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை வெடிக்கும் என்பதால்... ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வும் தமிழக காங்கிரசின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில செயலாளருமான செல்வப் பெருந்தகைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரசிலேயே மூன்று முறை இருமுறை ஜெயித்தவர்கள் எல்லாம் இருக்கும்போது ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒருமுறை ஜெயித்து இப்போது காங்கிரஸ் கட்சியில் ஜெயித்திருக்கும் செல்வப் பெருந்தகைக்கு சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காரணம் கோஷ்டி மோதல்தான் என்கிறார்கள் காங்கிரஸ் சீனியர்கள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 24 மே 2021