மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

பகுதி 2: தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

பகுதி 2: தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

தடுப்பூசி தேசியம், முற்றொருமை, தடுப்பூசி பூகோள அரசியல், சுயநல அரசுகள்...

கடந்த பகுதி அத்தியாவசிய சேவைகளில் சந்தையை அனுமதித்து, தீர்மானிக்கவிட்டதன் விளைவுகளைப் பேசியது. இந்தப் பகுதி தடுப்பூசி தொழில்நுட்பம், அதைக் கண்டறிந்த நாடுகள், அதைச் சந்தைப்படுத்தி மொத்த சந்தையையும் கட்டுப்படுத்தி முற்றொருமை பெற முனைந்தது. அதில் இந்தியாவின் பங்கு, நாடுகளின் சுயநலம், இந்திய நலனைப் பலிகொடுத்து உலக அரசியல் செய்து ஆதாயமடைய முனைந்தது குறித்துப் பேசுகிறது.

இதற்கிடையில் யார் முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்து, சந்தையைக் கைப்பற்றுவது என்ற போட்டியில் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மன் நாடுகள் முந்திக்கொண்டு வென்றதாக அறிவித்தன. சீனாவின் தடுப்பூசி தொழில்நுட்பம், மரபான நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நச்சுகிருமியைச் செயலிழக்கம் (Inactivated) செய்து நேரடியாக உடலினுள் செலுத்தும் வகையைச் சார்ந்தது. இவ்வாறு செலுத்தப்படும் கிருமியை நமது செல்கள் செரித்து இந்தக் கிருமியின் புரதத்தை (Antigen) எச்சமாக உடலில் விடும். இந்த உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் கிருமிக்கே உரித்தான புரதத்தை அழிக்கும் மூலக்கூற்றை (Antibody) உடல் தானாக உருவாக்கி அழிப்பதோடு இந்த ஆபத்தை நினைவில் வைத்துக்கொண்டு (T-cell) எதிர்காலத்தில் இவ்வாறான கிருமியின் தாக்குதல் நடக்கும்போது உடனடியாக தாக்கி அழித்து நம்மைக் காக்கும்.

ரஷ்யா மற்றும் இங்கிலாந்து தடுப்பூசிகளின் வகை சற்று மேம்பட்டது. இவை மரபணு மாற்றம் செய்யப்பட்ட தீங்கில்லாத வேறு ஒரு கிருமியின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் கிருமியின் புரதத்தை (Protein) மட்டும் வைத்து, உடலினுள் செலுத்தும் (Viral vector vaccines use a modified version of a different virus as a vector to deliver protection) வகையைச் சேர்ந்தவை. ஜெர்மனியின் தொழில்நுட்பம் இவை இரண்டையும்விட மேம்பட்ட கிருமியின் புரதத்தை ஒத்த புரதத்தை நமது உடலே உருவாக்கிக்கொள்ள தூண்டும் சமிக்கைகளைக்கொண்ட மரபணு மூலக்கூறுகளை உடலில் செலுத்தும் புதிய (mRNA vaccines contain material from the virus that causes COVID-19 that gives our cells instructions for how to make a harmless protein that is unique to the virus) வகையைச் சார்ந்தது.

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படை, தடுப்பூசிகளின் திறனை (Efficacy) அதிகரிப்பது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு திறன் பெறுவதை உறுதி செய்வது. ஏனெனில் உடலின் பல சிக்கலான உயிர் வேதிவினைகளின் (Biological Reaction) மூலம் உருவாகும் இந்த நோய் எதிர்ப்பு எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை. அந்தக் குறைபாட்டை அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் களைந்து எல்லோருடைய உடலும் ஒன்றுபோல வினையாற்றி நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற உதவுகின்றன. அந்த வகையில் முன்னேறிய தொழில்நுட்பங்கள் அதிக திறன் கொண்டவையாகவும், மரபான தொழில்நுட்பங்கள் சற்று குறைவான திறன் கொண்டவையாகவும் (ஜெர்மனி - 95%, ரஷ்யா - 91%, இங்கிலாந்து - 62-70%, சீனா - 79%) இருந்தன.

சந்தைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்!

அடுத்து, இந்தத் தடுப்பூசி தொழில்நுட்பங்களைக்கொண்டு பெருமளவில் தடுப்பூசிகளை உற்பத்தி (Scale up) செய்து சந்தைப்படுத்துவது. இவற்றை உற்பத்தி செய்ய மிக பாதுகாப்பான நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட (Sterile, Biosafety Level-3) உற்பத்தி தொழிற்சாலை, உற்பத்திக்கான மூலப்பொருட்கள், உற்பத்தி செய்த மருந்தை அடைக்கும் வசதிகள், அடைத்துவைக்க தேவையான கண்ணாடிக் குடுவைகள், ரப்பர் அடைப்பான்கள், பாதுகாப்பாகக் கெட்டுப்போகாமல் எடுத்துச்செல்ல தேவையான குளிரூட்டிகள், போக்குவரத்து வசதிகள், மக்களுக்குச் செலுத்த தேவையான மருத்துவப் பொருட்கள் எனப் பல நிலைகளை இந்தத் தடுப்பூசி கடக்க வேண்டும். அதேபோல உலகம் முழுக்க ஒரே நேரத்தில் எல்லோரும் ஒரே மாதிரியான பொருளைப் பயன்படுத்த முனையும்போது ஏற்படும் பற்றாக்குறை எனப் பல நடைமுறை சிக்கல்கள்.

தடுப்பூசி கூட்டணி அரசியல்!

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த உற்பத்திக்கான கட்டமைப்புகளும் அதற்கான மூலப்பொருட்களை அளிக்கவல்ல உற்பத்தி சங்கிலிகளும் இருக்கின்றன. அதேபோல உற்பத்தி தொழில்நுட்பம் மேம்பட மேம்பட அதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் தேவையும் மாறுபடும். உடனடியாக இந்தப் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு பெருமளவில் இதற்கான மூலப்பொருட்களைப் பெருக்கி உற்பத்தி செய்யும் சாத்தியம் குறைவு. மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து உற்பத்தியைப் பெருக்க முயன்றால் அவர்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு இந்த நிறுவனங்களுக்கு எதிராக மாற்றை உருவாக்கி சந்தையைப் பிடித்து ஜெர்மனி - அமெரிக்க நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்து விடுவார்கள்.

ஏற்கனவே நடைமுறையில் மரபான தொழில்நுட்பங்களில் தடுப்பூசிகளை வேகமாக உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்பு அதிகம். வலுவான உற்பத்தி கட்டமைப்பு கொண்ட பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சீனாவை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்களே ஏற்றுமதியில் கோலோச்சி பெருலாபமடைவார்கள். ஆதலால் புதிய தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்பு கொண்ட ஜெர்மனியும் அமெரிக்காவும் புதிய மரபணு மூலக்கூறு தொழில்நுட்பத்தைக்கொண்ட தடுப்பூசி உற்பத்திக்கு (Pfizer-BioNTech) கைகோத்தன. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி தொழில்நுட்பத்தைக் கொண்ட மிகப் பெருமளவில் உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ள... ஆனால், அதற்கான உற்பத்தி கட்டமைப்புகளற்ற இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும், உலகின் தடுப்பூசி உற்பத்தியின் மையமாகவும் உலகின் இரண்டாவது சந்தையையும் கொண்ட இந்தியாவுடனும் இணைந்து உற்பத்தியில் இறங்கியது. அதாவது உயர்தொழில்நுட்பத் தடுப்பூசி மேற்குலகுக்கும், அதற்கு அடுத்த நிலை தடுப்பூசி மற்ற நாடுகளுக்கும் எனத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

சந்தை... பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணும்?

இந்த அமெரிக்க - ஐரோப்பிய - இந்தியத் தடுப்பூசி கூட்டணியின் நோக்கம், உற்பத்தி வலுகொண்ட சீனாவையும், தொழில்நுட்ப வலுகொண்ட ரஷ்யாவையும் சந்தையில் இருந்து விலக்குவது. இந்த நாடுகளின் சந்தைகளை இந்த நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமானதாக மாற்றுவது. இந்த மொத்த உலக சந்தையையும் தனதாக்கிக்கொள்ளும் நோக்கம், தடுப்பூசி சார்ந்த உலக செய்திகளில் பிரதிபலித்தது. எல்லா நாடுகளிலும் தடுப்பூசி தயாரிப்பை விரைவுபடுத்தும் நோக்கில் சட்டங்களும், வழிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டாலும் தத்தமது நாடுகளின் விதிமுறை மாற்றங்களை அறிவியல் வயப்பட்டது என நியாயப்படுத்தி ரஷ்ய - சீன நாடுகளின் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டன. அதோடு அந்த நாடுகளின் தடுப்பூசிகளின் திறன் குறைத்தும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகங்கள் எழுப்பும் செய்திகள் தொடர்ந்து உலக ஊடகங்களில் உலவின.

50 விழுக்காடு தடுப்பூசி திறனே ஒரு தடுப்பூசியை நடைமுறைக்குக் கொண்டுவர போதுமானது என்ற நிலையில் மேற்குலகத் தடுப்பூசிகளின் திறன்மிகுதி பேசுபொருளாக்கப்பட்டது. இது இந்த நாடுகளின் தடுப்பூசிகளின் மீதான நம்பகத்தன்மையும் மக்களின் ஏற்புத்திறனையும் கூட்டும் நோக்கம் கொண்டது. அது மற்ற நாடுகளின் தடுப்பூசிகளின் மீதான ஐயத்தை கூட்டும் தன்மை கொண்டது. உற்பத்தி, உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீதான ஆதிக்கம், நாடுகள் மீதான அரசியல் அழுத்தம், ஊடகங்கள் மூலமாக உலக மக்களிடம் உருவாக்கப்பட்ட அணுக்கமான பார்வை ஆகியவை உலக அளவில் இந்த நிறுவனங்களுக்கு சந்தையில் முற்றொருமையைப் பெறும் வாய்ப்பை தந்தது.

அதேசமயம் இது குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி, மக்களின் தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் குலைத்தது. மக்களைக் காக்கும் நோக்கில் போர்க்கால அடிப்படையில் மருந்துகளை உருவாக்கும்போது தவறுகள் நிகழலாம். ஆனால், இதுபோன்ற அரசியலுக்கு அங்கே இடமிருக்காது. அறிவியல் தனது தவற்றை உடனடியாக திருத்திக்கொண்டு மக்களைக் காப்பதில் தொடர்ந்து முன்னேறும். பதிலாக விதிமுறைகளைத் தளர்த்தி சந்தையைப் பிடிக்கும் போட்டியில் தடுப்பூசிகளைத் தயாரிக்க முயன்றதன் விளைவு விரைவான தடுப்பூசி உருவாக்கத்துக்கு வித்திட்டிருக்கிறது. ஆனால், அதன் பலன்களை எல்லோருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறதா? பிரச்சினையை விரைந்து முடிவுக்கு கொண்டுவரும் திசையில் நகர்த்தி இருக்கிறதா?

தடுப்பூசி தேசியம் மற்றும் சந்தை முற்றொருமை!

இறுதியில் இந்தச் சந்தைக்கான போட்டி இருக்கிற அனைத்து மூலங்களையும் ஒருங்கிணைத்து தேவை, உற்பத்தி சார்ந்த வாய்ப்பைப் பொறுத்து உலகம் முழுவதும் இருக்கும் மூலப்பொருட்களைச் சிக்கனமாக செலவு செய்து, அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, மக்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக தொழில்நுட்ப உற்பத்தி வலுவுள்ள நாடுகள் அவரவர் தேவைக்கு முதலில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து கொள்வதை நோக்கி நகர்ந்தது. ஒருபுறம் உலக அளவில் சந்தை முற்றொருமையை உருவாக்கிக்கொண்டு மறுபுறம் தத்தமது நாடுகளில் தத்தமது தடுப்பூசி நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசிகளை சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டன. இதற்குத் தடுப்பூசி சோதனைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகச் சொல்லப்பட்டது.

அமெரிக்காவில் அந்த நாட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இங்கிலாந்து தொழில்நுட்பத்தில் தடுப்பூசி தயாரிக்கும் எஸ்ஐஐ (SII) மற்றும் சீனாவைப் போன்று நச்சுக்கிருமியை செயலிழக்கம் (Inactivated) செய்து உருவாக்கப்பட்ட இந்தியத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற நாடுகளும் நிறுவனங்களும் நாட்டுக்குள் முதலாளித்துவத்தையும் நாட்டுக்கு வெளியில் ஏகாதிபத்திய முற்றொருமையையும் கடைப்பிடித்தன என்றால் இந்தியாவில் நாட்டுக்குள் போட்டியற்ற கூட்டுக்களவாணித்தன முதலாளித்துவத்தையும் நாட்டுக்கு வெளியில் மற்ற நாடுகளுடன் இணைந்து அவர்கள் உருவாக்கும் முற்றொருமையில் பலனடைவது எனச் செயல்வடிவம் கண்டது.

சீனாவின் பூகோள அரசியல்!

இந்தச் சுயநல தடுப்பூசி தேசிய அரசியல் உற்பத்தி வலுவற்ற மற்ற நாடுகளை எந்த வாய்ப்பும் இன்றி கையறு நிலையில் கொண்டுபோய் நிறுத்தியது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திய சீனா, தமது சார்பற்ற தொழில்நுட்ப உற்பத்தி வலுவைக்கொண்டும், உள்நாட்டில் பெருந்தொற்று கட்டுக்குள் இருக்கும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டும் பெருமளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்குத் தனது தடுப்பூசிகளைக் கொடையாகக் கொடுத்து ஏற்க செய்தது. தன்னை சந்தையில் இருந்து ஒதுக்கி, தனிமைப்படுத்தும் அரசியலை உடைக்கும் ஆயுதமாக இதைப் பயன்படுத்தியது.

அதன் தொடர்ச்சியில் ஆசிய நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. மேற்குலகம் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ய மறுத்துவரும் நிலையில் சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில், எகிப்து ஆகிய நாடுகளுக்கு உற்பத்தி தொழில்நுட்பத்தையும் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களையும், ஆய்வகங்களை அமைத்துக்கொடுத்தும் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தியாளர்களை உருவாக்கி இம்மூன்று கண்டத்தின் நாடுகளையும் சந்தையையும் தமது கட்டுக்குள் கொண்டுவரும் திசையில் வேகமாக முன்னேறியது.

இளிச்ச வாய் இந்தியர்களும் எலும்புத்துண்டும்...

சீனாவின் வெற்றிகரமான முன்னேற்றத்தை, இதுவரையிலும் கடுமையாக முயன்று உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் உடைவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நெருக்கடியைத் தடுப்பூசி கூட்டணி நாடுகளுக்கு உருவாக்கியது. கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி தடுப்பூசி உற்பத்தியில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நாடுகள் சீனா (14.2 கோடி), அமெரிக்கா (10.3 கோடி), ஐரோப்பிய ஒன்றியம் (7 கோடி), இந்தியா (4.2 கோடி), இங்கிலாந்து (1.22 கோடி). மற்ற நாடுகள் எல்லாம் தாங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளையும் மற்ற இடங்களில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளையும் கொண்டு வந்து தம்மிடம் வைத்துக்கொண்டு, தங்களது மக்களுக்குச் செலுத்திக்கொண்டு, உலகத் தடுப்பூசி அரசியல் நெருக்கடிக்கு இளிச்ச வாய் இந்தியாவை முன்னிறுத்தி இங்கே உற்பத்தியாகும் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்குக் கொடுக்கும் அரசியல் முன்னெடுக்கப்பட்டது.

இதை எந்த கேள்வியும் கேட்காமல் இந்தியாவை மொத்தமாக மூடிவைத்து முள்முடி தொற்றை குறைந்திருந்த நிலையில் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் இந்தக் கிருமிக்கு எதிராக வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்தார். இனி இந்தியா உலகுக்கு முன்னுதாரணமாகவும் உலகத்தின் மருந்து உற்பத்தி சாலையாக இருக்கும் எனவும் முழங்கினார். இதற்கு மேற்குலகம் முதலிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி நாற்தரப்பு கூட்டத்தில் மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசி உற்பத்தி செய்ய அமெரிக்காவை ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் அப்படி உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மற்ற இரு நாடுகள் விநியோகிக்கவும் ஒப்புக்கொள்ள வைத்து, தடுப்பூசி தயாரிக்கும் தனது நண்பர்களுக்கு சகாயம் செய்து கொடுத்தார். இந்திய மக்களின் நலனை அடகுவைத்து, பதிலாக எலும்புத்துண்டு பரிசாகப் பெறப்பட்டது. தெற்காசிய நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளை இந்தியா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சீனாவின் தடுப்பூசிக்குப் பதிலாக இந்திய தடுப்பூசியைப் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. வங்கதேசம் பயணம் மேற்கொண்ட தலைமை அமைச்சர் அந்த நாட்டுக்கு 12 லட்சம் தடுப்பூசிகளைப் பரிசாக அளித்தார்.

தடுப்பூசி (பற்றாக்குறை) அரசியலும் தமிழகத்தின் முன்னுள்ள தெரிவுகளும்!

<பகுதி 1 >

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 24 மே 2021