aதிமுகவில் சேருகிறேனா: நிலோபர் கபில்

politics

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அக்கட்சியிலிருந்து மே 21ஆம் தேதி நீக்கப்பட்டார். அவர் மீது பண மோசடி புகார், சென்னை டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்டிருந்தது. அவரது தனி செயலாளராக இருந்த பிரகாசம் அளித்த புகாரில், ‘நிலோபர் கபில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதால் கவலைப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 23) இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்தது. மீண்டும் இணைந்தது. என்னென்னவோ நாடகங்கள் எல்லாம் நடந்தது. இதையடுத்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார்கள். கடந்த 5 ஆண்டுகளாகச் சிறப்பான அமைச்சராகச் செயல்பட்டேன்.

வாணியம்பாடியில் செந்தில்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினராகப் பல வேலைகள் செய்திருக்கிறேன். சாலை, குடிநீர் என அனைத்து குறைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தேன். அதனால்தான் செந்தில்குமார் வெற்றி பெற்றார். அதுவும் 5,000 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இல்லை என்றால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார்.

மே 2ஆம் தேதி வரை நான்தான் அமைச்சராக இருந்தேன். ஆனால் எதற்காகவும் என்னை அழைக்க மாட்டார்கள். என்னுடைய தொகுதியில் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை , கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று தலைமைக்குக் கடிதம் எழுதினேன்.

இதனிடையே, சென்னையில் எனது சகோதரியும், தாயாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 15 நாட்களுக்கு முன்பு எனது தாய் இறந்துவிட்டார். சகோதரிக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த 19ஆம் தேதி வாணியம்பாடியில் எனது மகன் நடத்தி வரும் மருத்துவமனையிலிருந்து வென்டிலேட்டர் எடுத்துச் செல்ல வந்திருந்தேன்.

அப்போது, திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் என்னைத் தொடர்பு கொண்டு எனது தாயார் இறப்புக்குத் துக்கம் விசாரித்தார். நான் வாணியம்பாடியில்தான் இருக்கிறேன் என்று கூறியதுடன் உங்களுக்கு நேரில் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என கூறினேன்.

சென்னை செல்லும் வழியில், பயணியர் விடுதியில் தங்கியிருந்த அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவரும் எனது தாயார் இறப்புக்குத் துக்கம் விசாரித்தார். இதில், என்ன தவறு இருக்கிறது. மாவட்டச் செயலாளர் வீரமணிக்கு எந்த மனிதாபிமானமும் இல்லை.

எனது தாய் இறந்துவிட்டார் என்றுகூட நினைக்காமல் என்னை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் கவலைப்படவில்லை. சந்தோசப்படுகிறேன். ஆனால் என்னை அழைத்து ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டுமா கூடாதா. நீக்குவதற்குக் காரணமாவது தெரிவித்திருக்க வேண்டும்.

2016 தேர்தல் நேரத்தில் எனது வெற்றிக்கு பிரகாசம் பக்கபலமாக இருந்தார். அதனால் அவரை அரசியல் உதவியாளராக வைத்துக் கொண்டேன். அவர் பணம் வாங்கியது எல்லாம் எனக்குச் தெரியாது. பிரகாசம் பொய்யான குற்றச்சாட்டைக் கொடுத்திருக்கிறார். அவர் பணப் பரிமாற்றம் செய்ததெல்லாம் எனக்குத் தெரியாது. ரூ.6 கோடிக்காக என் பெயரைக் கெடுத்துக்கொள்வேனா. இந்த புகாரைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

நான் என்ன கட்சியில் 50 ஆயிரம் ஒரு லட்சம் வாங்கும் நிலையிலா இருக்கிறேன். இவ்வளவு பேரிடம் பணம் வாங்கியது அவர் சொல்லித்தான் தெரியும்.

ஏப்ரல் மாதம் ஜெயசுதா என்பவர் புகார் அளிக்க வந்ததுமே எஸ்.பி அலுவலகத்தில் பிரகாசம் மீது புகார் கொடுத்துவிட்டேன். பணம் வாங்கியதற்கு அவர்தான் பொறுப்பு.வேண்டும் என்றால் எனது வங்கிக் கணக்கைத் தணிக்கை செய்துகொள்ளலாம்.

நான் திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜை சந்தித்ததற்காக என்னை நீக்கியிருக்கலாம். ஊழல் புகாரால் என்னை நீக்கியிருக்கிறார்கள் என்றால் பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருக்கிறது.

என்னுடைய அம்மா இறப்பு குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கூட விசாரிக்கவில்லை. திமுக மாவட்டச் செயலாளர் விசாரித்தார். நான் திமுகவில் சேருகிறேனா இல்லையா? என்பது விரைவில் உங்களுக்குத் தகவல் தெரியும். எந்த கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் எனது கடமை” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *