மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

கொரோனா முடியும் வரை கொரில்லா யுத்தம்: எடப்பாடிக்கு எதிராக வெடிக்கும் பன்னீர்!

கொரோனா முடியும் வரை கொரில்லா யுத்தம்: எடப்பாடிக்கு எதிராக வெடிக்கும் பன்னீர்!

அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நேரடியான எதிர்ப்புக்கிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மே 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கும் நிலையில்....மே 4 ஆம் தேதியில் இருந்தே தனது தனி ஆவர்த்தன அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

இதுகுறித்து மே 4 ஆம் தேதியே மின்னம்பலத்தில் ஓபிஎஸ்சின் தனி ரூட் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அம்மா உணவகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் தனியாக கண்டன அறிக்கை வெளியிட்டிருந்ததை சுட்டிக் காட்டியிருந்தோம்.

இந்நிலையில் இப்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிடுவது தொடர்கதையாகியிருக்கிறது. அண்மையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம், அதிமுக சார்பிலான கொரோனா தடுப்பு நிதி பற்றிய அறிவிப்புகள் மட்டுமே பன்னீர், எடப்பாடி ஆகிய இருவரின் கையெழுத்தோடும் அதிமுக தலைமைக் கழக லெட்டர் ஹெட்டில் வெளியானது.

மற்றபடி ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தனியாகவும், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் -அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தனியாகவும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ சமூக தள பக்கங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தின் அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுகின்றன. எடப்பாடியோடு பன்னீர் இருந்தால் அந்தப் படங்கள் வெளிவருகின்றன.

இவற்றை உணர்ந்த அதிமுக தொண்டர்கள் ஃபேஸ்புக் பின்னூட்டங்களிலேயே இதற்கான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். எடப்பாடியின் அறிக்கைகளில், ‘எங்கே ஒருங்கிணைப்பாளர் பெயரைக் காணோம்?’என்றும், “ஆக மொத்தம் ரெண்டு பேரும் தனித்தனியா அறிக்கை விட ஆரம்பிச்சாச்சு’என்றும் பின்னூட்டங்கள் தொண்டர்களால் இடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதோடு முன்னாள் முதலமைச்சர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ‘உங்களுக்கு முன்பே நான் தமிழகத்தின் முதல்வராக அம்மா இருக்கும்போதே இருந்தவன்’ என்று எடப்பாடிக்கு சொல்வது போல அந்த அறிக்கைகள் அமைந்துள்ளன.

ஓபிஎஸ் சின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எஸ்.பி.ஆனந்த் என்ற அதிமுக தொண்டர், “அதிமுக லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட உங்களுக்கு முழு உரிமை உண்டு.. நீங்கள் செயல்படாத நிலையில் அடுத்த நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.. நீங்கள் லெட்டர் பேடில் அறிக்கை வெளியிடாமல் இருப்பதால் உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே.. நீங்கள் மட்டுமே செல்வி ஜெயலலிதா இருக்கும் வரை அவரின் நம்பிக்கைக்கு உரியவர். அவருக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் உங்களை வைத்திருந்தார்”என்று கூறியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எதிரெதிர் முனையில்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கைப் போர்கள் தெளிவாக நிரூபிக்கின்றன.

“கொரோனா முற்றிலும் ஒழிவதற்காக காத்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுவரை கொரில்லா போர் போல இப்படியான மறைமுக யுத்தம் நடத்துவார். இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்ததும் மீண்டும் நேரடி யுத்தத்தில் இறங்குவார் ஓ.பன்னீர் செல்வம். சமீப நாட்களாக தேனி கைலாசப்பட்டி பண்ணை வீட்டில் அவர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார். பணத்தால் மட்டுமே கட்சியை நடத்திவிட முடியாது என்பதை பன்னீர் மிக விரைவில் புரிய வைப்பார்”என்கிறார்கள் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நிலையில்தான் திடீர் டிவிஸ்டாக, “ அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகச் செயல்பட்டால் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் இன்று (மே 23) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அப்படியென்றால் கட்சியின் நிலைப்பாட்டை தனித்தனி அறிக்கைகளாக தனிநபர் அறிக்கைகளாக வெளியிட்டுவரும் இவர்கள் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 23 மே 2021