மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

‘யாராக இருந்தாலும் நடவடிக்கை’: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

‘யாராக இருந்தாலும் நடவடிக்கை’: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகச் செயல்பட்டால் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் எச்சரித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே அறிக்கை போர் நடந்து வருகிறது. அதோடு அண்மையில், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்பட்டது அக்கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறாகச் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், “அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதிமுகவில் தனி மனித துதிபாடல்களுக்கோ, தங்கள் ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை. எங்களது பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக, அச்செயல்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம்; வேதனைப்படுகிறோம் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கட்சித் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது; கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையிலும், சிலரது பெயர்களையும், படங்களையும் சிதைத்து அநாகரீகமான தகவல்களையும், உண்மைக்கு மாறான செய்திகளையும், சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வெளியிடுவது; அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும், புரியாமையாலும் கட்சியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.

அதிமுக அடுத்து மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயணம் குறித்தும், கட்சியின் நிலைப்பாடுகள் பற்றியும், கட்சி நிர்வாகத்தை விமர்சித்தும், வெகுஜன ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ, கட்சிப் பொறுப்பாளர்களோ, கழகத்தில் உள்ளவர்களோ யாரும் எத்தகைய கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடக்கூடாது.

கட்சித் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் மேற்கண்ட செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 23 மே 2021