மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

‘நீட்’டுக்கு பதில் மாநில அளவிலான தேர்வு: அமைச்சர் பொன்முடி

‘நீட்’டுக்கு பதில் மாநில அளவிலான தேர்வு: அமைச்சர் பொன்முடி

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு துறைகள், குறிப்பாகக் கல்வித் துறையும், அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் நடத்த முடியாத வண்ணம் இருக்கிறது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வைப் பொறுத்தவரை, கண்டிப்பாக நடத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகள், 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவது தொடர்பாக இன்று மாநில/ யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்களுடன் காணொலி வாயிலாக மத்திய கல்வி அமைச்சகம் ஒரு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இதில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், “சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எப்படி நடத்துவது என இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரவும் சூழலில், தேர்வை எப்படி நடத்துவது என சில வழிமுறைகளை மத்திய அரசு கொடுத்தது.

இதில் சிலவற்றுக்கு நாங்கள் விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்த விளக்கத்தை மத்திய அரசு கொடுத்த பிறகு முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைய கூட்டத்தில் எல்லா மாநில அமைச்சர்களும் 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டும் என்று தான் சொன்னார்கள்.

3 மணி தேர்வை ஒன்றரை மணி நேரமாக மாற்றலாமா என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. நாங்களும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று எப்போது குறைகிறதோ, அப்போது தேர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என எங்கள் கருத்தைச் சொன்னோம். முதல்வர் சொல்லும் கருத்துகளை 25ஆம் தேதிக்குள் மத்திய அரசுக்கு இ-மெயில் அனுப்பப்படும். ஆல் பாஸ் என்று அறிவித்துவிட்டால், எதிர்காலத்தில் மாணவர்கள் உயர் கல்வியில் சேரும் போது, ஐஐடியிலோ, ஐஐஎம்-லோ இந்த தேர்ச்சியை ஏற்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பொன்முடி பேசுகையில், “மருத்துவ படிப்புகளில் மத்திய அரசின் ஒதுக்கீடுகளுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக்கொள்ளுங்கள், மாநில ஒதுக்கீட்டில் வரும் கல்லூரிகளுக்கு முன்பு நடத்தியது போல, மாநில அளவிலேயே தேர்வை நடத்திக் கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் என ஏற்கனவே சொல்லிவிட்டோம்” என்றார்.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 23 மே 2021