மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

தடுப்பூசி - அதிரவைக்கும் முட்டாள்தனங்கள்

தடுப்பூசி - அதிரவைக்கும் முட்டாள்தனங்கள்

விவேக்கணநாதன்

தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு எவ்வளவு முட்டாள்தனமாக இருந்துள்ளது என்பது குறித்த செய்திகள் நாளுக்கு நாள் எரிச்சலூட்டுகின்றன.

ஆக.15, 2020 ல், சுதந்திர தினத்தன்று பல கோடி பேருக்கு இன்னும் சில மாதங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என மோடி அறிவித்தார். ஆனால், அதற்கு ஒரு வாரம் முன்பு ஆக.7, 2020 அன்று, உலகின் மிகப்பெரும் தடுப்பூசி உற்பத்தியாளரான புனேவின் சீரம் நிறுவனம் பில் கேட்ஸின் Gates Foundation நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அந்த ஒப்பந்தப்படி, சீரம் நிறுவனம் Gates Foundationக்கு, கீழ் மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்காக சுமார் 10 கோடி தடுப்பூசிகளை 2021ன் முதல் காலாண்டுக்குள் தர வேண்டும். இதற்காக, சுமார் 1100 கோடி ரூபாய் Gates Foundation சார்பாக சீரம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்பின், செப். 29, 2020 அன்று Gates Foundation மேலும் ஒரு ஒப்பந்தம் சீரம் நிறுவனத்துடன் போட்டுள்ளது. அதன்படி, மேலும் 10 கோடி தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளன. இதற்காக, மேலும் 1100 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனத்தின் ஒரு மாத உற்பத்தித்திறன் 6-6.5 கோடி தடுப்பூசி. டிசம்பர் அளவில் தடுப்பூசி WHO- ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

டிசம்பரில் அங்கீகாரம் கிடைக்கும் என தெரிந்துவைத்திருந்த, Gates Foundation - சீரம் நிறுவனத்தின் ஒரு மாத உற்பத்தித் திறனை கணக்கில் கொண்டு, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மொத்த உற்பத்திக்கும் காசை கையில் கொடுத்து ஊசியைக் கொடுக்க வேண்டும் என மிக முன்னெச்சரிக்கையாக கேட்டுள்ளது.

ஆனால், ஆக.15, 2020 அன்று மார்பு விரித்து அறிவித்த மோடி, அடுத்த 9 மாதத்துக்கு எந்த ஒப்பந்தத்தையும் சீரம் நிறுவனத்துடன் போடவில்லை. 9 மாதம் கழித்து, ஏப்ரல் 19, 2021 அன்று தான் சீரம் நிறுவனத்துக்கு முதல் தவணையாக 3,000 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதைக்குறித்து அப்போதே மிகக்கடுமையான விமர்சனங்கள் வந்தன.

இந்தியா பணம் கொடுக்கும் முன்பே, பல நூறு கோடிகளை உலக நாடுகளிடம் கை நீட்டி வாங்கிவிட்ட சீரம் நிறுவனம், பிப்ரவரிக்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறது.

சீரம் நிறுவனம் இடியாப்பச் சிக்கலில் இருப்பதாலும், முன்கூட்டியே ஒப்பந்தமோ - நிதி ஒதுக்கீடோ செய்து, இந்தியத் தேவைக்கு தடுப்பூசிகளை உறுதிசெய்யாததாலும், இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவதை கேள்வி கேட்கமுடியாமல், திருடனுக்கு தேள் கொட்டியபடி ஒன்றிய பாஜக அரசு பேசாமல் இருந்தது.

இந்நிலையில், பிப். 21, ஏப் 7 ஆகிய இரண்டு தினங்களிலும் சீரம் நிறுவனம் தன் அறிக்கையில், ஜூன் மாதத்திற்குள் தாங்கள் போட்ட ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது.

சீரம் நிறுவனம் இந்த நம்பிக்கையை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேர் அளவுக்கு தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

சீரம் நிறுவனம் தன் ஒப்பந்தங்களின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு ஊசி கொடுக்க முடிவு செய்துவிட்ட நிலையில் தான், போதிய தடுப்பூசிகள் இல்லாமலும், தடுப்பூசி விவகாரத்தில் நந்தி போல திரை மறைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு உண்மையில் என்னதான் செய்துகொண்டிருக்கிறது என தெரியாமலும் கதறத்தொடங்கின மாநில அரசுகள்.

தடுப்பூசி கையாள்கையில் மாநில அரசுகளும் பங்கெடுக்கும் வகையில், மொத்த உற்பத்தியில் 50% ஒன்றிய அரசு தொகுப்புக்கும், மீதத்தை பொதுச்சந்தைக்கும் என திருப்பிவிட்டது ஒன்றிய அரசு. ஏன் இந்த 50% கணக்கு?

சீரம் நிறுவனம் Gates Foundation உடன் போட்ட ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் இந்த ஏற்பாடு. தன் ஒரு மாத உற்பத்தியான 6 முதல் 6.5 கோடி ஊசிகளில் 50% ஆன 3 முதல் 3.25 கோடி ஊசிகளை இந்திய அரசுக்கு கொடுத்தால் மீதம் 3 முதல் 3.25 கோடி ஊசிகள் இருக்கும். இவற்றை அடுத்த சில மாதங்களுக்கு தன் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்துவிடலாம் என திட்டமிட்டுள்ளது சீரம் நிறுவனம்.

ஏற்கனவே தொடங்கியிருந்த, உற்பத்தி விகிதத்தை உயர்த்தும் முயற்சிகளின் மூலம் கிடைக்கும் ஊசிகளை மட்டும் இந்திய மாநில அரசுகளுக்கும், தனியாருக்கும் கொடுக்கலாம் என திட்டமிட்டிருக்கிறது சீரம் நிறுவனம்.

ஏப்ரல் 21 வரை சீரம் நிறுவனம், 6.6 கோடி ஊசிகளை ஏற்றுமதி செய்திருந்தது. அதிலும், 1.9 கோடி ஊசிகள் மட்டுமே Gates Foundation ஒப்பந்தத்திற்கும், அதன் கீழ் வரும் ஏழ்மை மற்றும் நடுத்தரவர்க்க வருமான நாடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் அனைத்தும், புதிய ஒப்பந்தங்களின்படி, பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 19ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்த தடுப்பூசி கொள்கை மே 1 அன்று நடைமுறைக்கு வந்தது. ஆனால், ஏப்ரல் 19 அறிவிப்புக்குப் பின், மே 11 வரை சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டே வந்துள்ளது.

அதாவது, இந்திய ஒன்றிய அரசுக்கு 50% ஊசிகளை வழங்கிவிட்டு, மாநில அரசுகள், தனியார் போட்டிபோட்டு வாங்கத்தக்க ஊசி தொகுப்பிலிருந்து சில கோடி ஊசிகளை தன் ஒப்பந்தப்படி, தொடர்ந்து ஏற்றுமதி செய்துவந்துள்ளது சீரம் நிறுவனம்.

இந்நிலையில், மே 11 அன்று பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டிய 50 லட்சம் ஊசிகளைத் தடுத்துள்ளது ஒன்றிய அரசு.

இதனால், வேறுவழியின்றி, தங்கள் நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தின்படி தடுப்பூசிகளை வழங்க இந்த ஆண்டு இறுதி வரை ஆகும். ஒப்பந்ததாரர்கள் தயவுசெய்து பொறுமை காக்கவும்' என மே 18 அன்று அறிக்கை கொடுத்துள்ளது சீரம் நிறுவனம்

இப்போதும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய வெளிப்படையான தடை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

எனவே, மாநில - தனியார் தொகுப்பு என அறிவிக்கப்பட்டிருக்கும் 50% பங்கிலிருந்து ஏற்றுமதி செய்யவே இருக்கிறது சீரம் நிறுவனம். வரும் மாதங்களில் சீரம் நிறுவனத்தின் உற்பத்தி மாதத்திற்கு 10 கோடிக்கு மேல் உயர உள்ளது. இவற்றில், 50% ஒன்றிய அரசு தொகுப்பு போக, மீதம் உள்ளவற்றில் கணிசமான தடுப்பூசிகளை தங்களுடைய உலகளாவிய ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பவே சீரம் முயற்சிக்கும்.

இந்நிலையில், இன்னொரு தடுப்பூசியான Covaxin - க்கு சர்வதேச அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. அந்த தடுப்பூசியை WHO இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனால், அத்தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களை விமான பயணங்களுக்கு அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. Covaxin-க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடத்துவங்கியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மே 23 அன்று WHO- ஐ சந்திக்க உள்ளது.

தடுப்பூசி உற்பத்திக்கான ஆராய்ச்சிகள் தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா, முறையாக நிதி ஒதுக்கி தனக்கான தடுப்பூசிகளை உறுதிசெய்துகொண்டது. ஜூலை 4க்குள் அமெரிக்காவில் உள்ள 70% பேருக்கு முழுமையாக இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி முடிக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் வெறும் 4 கோடி பேருக்கு மட்டுமே முழுமையான தடுப்பூசி செலுத்தல் முடிந்திருக்கிறது. முதல் தடுப்பூசிக்குப் பிறகு தொற்றோ, அல்லது தொற்று உள்ளவர்களுடன் தொடர்போ ஏற்பட்டால் 3 மாதம் காத்திருந்து இரண்டாவது ஊசி எடுக்க வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு. அதேபோல், இரண்டாவது தடுப்பூசிக்கான கால இடைவெளியும் 3 மாதத்துக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது

அதாவது, முதல் தடுப்பூசிக்கு பின் தொற்று ஏற்பட்டாலும், இல்லை என்றாலும் 3 மாத காத்திருப்பு உறுதிசெய்ப்பட்டுள்ளது.

ஒருநாளைக்கு 70 லட்சம் ஊசி போடப்போகிறோம் என பிப்.17 அரசு சொன்னது. 30 லட்சம் ஊசிகள் கூட நீடித்து போடவில்லை

6.6 கோடி மக்களுக்கு 10 கோடி ஊசிகளை கையில் வைத்திருந்த பிரிட்டனே கோவிஷீல்டுக்கு 12 வார இடைவெளியை டிசம்பரிலேயே சொன்னது. ஆனால், கையில் ஊசியே இல்லாமல் இப்போது இரட்டிப்பாகியுள்ளது

தடுப்பூசி கொள்கையை பாஜ. அரசு மாற்றிக்கொண்டிருந்தபோது, 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொற்று ஏப்ரல் 13லிருந்து மே 20க்குள் இரட்டிப்பாகியுள்ளது.

12-16 வாரம் இடைவெளியை இப்போது சொல்லும் அரசு, பிரிட்டன் போல, ஜனவரியிலேயே அம்முடிவை எடுத்திருந்தால், சில லட்சம் தொற்று - பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

இப்போது, இரண்டாவது ஊசி எடுத்துக்கொள்வது இன்னும் சில மாதங்களுக்கு தாமதப்படும். எனில், இந்தியாவில் முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்ற மக்கள் திரளை உருவாக்க இன்னும் 6 மாத காலமாவது ஆகும்.

இந்தியாவிலேயே இருந்த தங்கள் சொந்த நாட்டிலிருந்த தடுப்பூசி உற்பத்தியாளரை ஏன் ஒன்றிய அரசு ஊக்குவிக்கவில்லை?

கோவிஷீல்டு சர்வதேச அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில், ஜனவரி 3 அன்றே ' காப்புரிமை கட்டுப்பாடுகளை' கோவேக்சினுக்கு விதித்த இந்தியா ஏன் அத்தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயலவில்லை?

கோவேக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காததால், ஏற்றுமதிக்கு உகந்ததாக அது இல்லை. எனவே, Covaxin இந்திய பயன்பாடுக்கு மட்டும் என இருந்தது.

Covaxin-க்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயலாததன் பின்னணி, அதை இந்தியாவுக்கு மட்டும் பயன்படுத்தும் நோக்கமா? அல்லது தடுப்பூசி சந்தை போட்டியில் ஒன்றிய அரசு ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு பக்கச்சார்பாக செயல்பட்டதா?

இப்படி பல கேள்விகள் விடை தெரியாமல் நீடிக்கின்றன. காரணமற்று வளரும் மோடியின் தாடியைப் போல.

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 23 மே 2021