மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

இதுதான் ஊரடங்கு என்றால்....

இதுதான் ஊரடங்கு என்றால்....

புயலுக்கு முன் ஓர் அமைதி நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுவார்கள். அதுபோல முழு ஊரடங்குக்கு முதல் நாள் முழு ஒன்று கூடல் என்று ஆகிவிட்டது.

நேற்று (மே 22) கொரோனா தடுப்பு குறித்த அனைத்துக் கட்சிக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

“கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றே தான் சொல்ல முடியும்.முழு ஊரடங்கு பிறப்பிக்கும்போது பொதுமக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை நாம் அறிவிக்கிறோம். தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொள்வதற்காக மட்டுமே அந்த தளர்வுகளை அறிவித்தோம். ஆனால், அந்த தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதும் சிலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி வருபவர்களை அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டோம். அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாக தெரியவில்லை.

முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களை காக்கவே, பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக பொதுமக்களில் சிலர் இருப்பது வேதனை தருகிறது. முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறைக்காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள். இது விடுமுறைக் காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். ‘கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன் - கொரோனாவை அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன்’ என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும்தான் இந்த நோய் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்”என்று கூறினார்.

ஆனால் ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளிலும், பேஸ்புக்கிலும் கொரோனா மரணங்கள் பற்றிய கண்ணீர் கதைகளை படிக்கும் பொதுமக்கள் ஒரு உச் கொட்டிவிட்டு வெளியே கிளம்பிவிடுகின்றனர். அவர்களுக்கு ஊரடங்கின் அவசியம், ஊரடங்கின் விளைவு பற்றிய எந்த உணர்வும் இல்லை.

நேற்று காலை 10 மணி வரை கடைகள் திறந்திருந்த நிலையில்....மே 24 ஆம் தேதி முதல் முழு கடுமையான ஊரடங்கு என்பதால் நேற்று பிற்பகலும், இன்று முழுதும் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அவ்வளவுதான் மீண்டும் கடைகளில் மக்கள் கூட்டம் பெருக்கெடுத்தது. அதுவும் மாநகரவாசிகள் என்று அறியப்பட்ட சென்னையில்தான் கடை வீதிகளில் அதிக கூட்டம் பெருக்கெடுத்தது.

“அரசு இந்த அறிவிப்பைத் தவிர்த்திருக்க வேண்டும், ஒருவாரம் முழு ஊரடங்கு போடுவதால் ஏற்படும் நற்பலனைவிட நேற்று பிற்பகல் திரண்ட கூட்டத்தால் ஏற்படும் கெடுபலன்கள் அதிகம் என்ற அளவுக்கு மக்களின் கூட்டம் அலைமோதியது. என்னதான் அரசு எச்சரிக்கை செய்தாலும் பின்பற்ற வேண்டிய மக்கள் இதுபோல கூட்டம் கூடிக்கொண்டிருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தவே முடியாது. குறிப்பாக 4500 சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். அவை கொரோனா தூதுவர்களாகவே செயல்படும் அபாயம் இருக்கிறது” என்று சமூக தளங்களில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்கள் கண்ணீரோடும், வேதனையோடும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

ஞாயிறு 23 மே 2021